Wednesday, December 25, 2013

இராமாயணம் - காணாமலே காதல்

இராமாயணம் - காணாமலே காதல் 


வீடணன், இராமனிடம் சென்று அடைக்கலமாக விரும்புகிறான். இராமன் யார் என்றே அவனுக்குத் தெரியாது. இராமனைப் பற்றி கேள்விப் பட்டது கூட கிடையாது. இருந்தாலும் இராமன் மேல் அப்படி ஒரு அன்பு.

"நான் அவனை இதற்கு முன் பார்த்தது கிடையாது. அவனைப் பற்றி கேள்வி பட்டது கூட கிடையாது. அவன் மேல் எனக்கு இவ்வளவு அன்பு பிறக்க என்ன காரணம் என்றும் தெரியவில்லை. எலும்பு வரை குளிர்கிறது. என் மனம் உருகுகிறது. இந்த பிறவி என்ற நோய்க்கு அவன் பகைவன் போலும்" என்று வீடணன் உருகுகிறான்.

பாடல்

'முன்புறக் கண்டிலென்; கேள்வி முன்பு இலென்;
அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன்;
என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல், அவன்
புன் புறப் பிறவியின் பகைஞன் போலுமால்.

பொருள்

'முன்புறக் கண்டிலென் = முன்பு அவனைக் கண்டது இல்லை

கேள்வி முன்பு இலென் = அவனைப் பற்றி கேள்வி பட்டது கூட இல்லை

அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன் = அவன் மேல் அன்பு கொள்ளக் காரணம் கூட தெரியாது

என்பு உறக் குளிரும் = எலும்பு வரைக் குளிரும்

நெஞ்சு உருகுமேல் = நெஞ்சம் உருகுகிறது

அவன் = அவன்

புன் புறப் பிறவியின் = மீண்டும் மீண்டும் பிறக்கும் இந்த பிறவியின்

பகைஞன் போலுமால் = பகைவன் போல. பிறவி என்ற பகையை அழித்து மீண்டும் பிறக்காமல் செய்வான்.

அரக்கர் குலத்தில் பிறந்தவன் வீடணன். இராமன் பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாது.

இருந்தாலும் அவன் மேல் அன்பு பிறக்கிறது.

ஏன் ?

அதற்கு காரணம் அவனுக்கும் தெரியவில்லை.

விநோதாமாய் இல்லை ?

இந்த அன்புக்கு காரணம் என்ன ? இந்த அன்பை அவனுக்குள் தோன்ற வைத்தது எது ?

அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பார் மணிவாசகர்....



1 comment:

  1. எத்தனையோ மலர்கள் இருந்தும் தாமரை மட்டுமே சூரியனைக் கண்டவுடன் மலர்கிறது. அது போல்தான் உறவுகளும். காரணத்திற்கு உட்படாமல் இருக்கும் நிகழ்வுகளில் இது போன்ற உறவுகளும் அடங்கும். அது நன்மை பயக்கும் செயலாக இருந்தால் தெய்வ அனுக்ரஹம் என்றும், தீமை பயப்பின் கர்ம பலன் என்றும் லோகாயதமான ஒன்றாக இருந்தால் இயற்கை விதி என்றும் கூறுகிறோம் என்று நினைக்கிறேன்.

    மேற்கத்திய நாட்டு மக்களிடையே அதிகமாக இருக்கும் Depression or Stress போன்ற தொல்லைகள் நமது இந்திய மக்களிடையே அவ்வளவாக இல்லாமல் இருப்பதற்கான Shock Absorber ' நாம் எல்லோரும் நம்பும் 'விதி விளையாட்டு' எனும் நம்பிக்கை என நினைக்கிறேன்.

    ReplyDelete