Sunday, December 29, 2013

இராமாயணம் - தூயவர் துணி திறன் நன்று தூயதே

இராமாயணம் - தூயவர் துணி திறன் நன்று தூயதே 


வீடணனை சேர்க்கக்  கூடாது என்று சுக்ரீவன் உட்பட எல்லோரும் கூறி விட்டார்கள். இராமன் அனுமனின் எண்ணத்தை கேட்க்கிறான். அனுமனுக்கோ  மற்றவர்கள் சொன்ன கருத்தில் உடன் பாடில்லை. இருந்தாலும் அதை எவ்வளவு இனிமையாக, நாசுக்காக சொல்கிறான்.....

அனுமன் கூறுகிறான்

எனக்கு முன்னால் பேசியவர்கள் எல்லோரும் தூயவர்கள். அவர்கள் துணிந்து தங்கள் கருத்துகளை கூறினார்கள். அவைகள் நல்ல கருத்துகளே. இருந்தாலும், நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இவன் (வீடணன்) தீயவன் என்று நான் கருதவில்லை. மேலும் சில கருத்துகளை கூற விரும்புகிறேன்

பாடல்

தூயவர் துணி திறன் நன்று தூயதே;
ஆயினும், ஒரு பொருள் உரைப்பென், ஆழியாய்!
"தீயன்" என்று இவனை யான் அயிர்த்தல் செய்கிலேன்;
மேயின சில பொருள் விளம்ப வேண்டுமால்.

பொருள்

தூயவர் = தூயவர்கள் (சுக்ரீவன் முதலானோர்)

துணி = துணிந்து

திறன் = திறமையுடன்

நன்று = நல்லதையே சொல்லி இருக்கிறார்கள்

தூயதே = தூய்மையானதே அவர்கள் சொன்னது ;

ஆயினும், = ஆனாலும்

ஒரு பொருள் = ஒரு பொருள். அதாவது அவர்கள் சொன்னதைத் தவிர வேறு ஒரு பொருளை

 உரைப்பென் = நான் சொல்லுவேன்

ஆழியாய்! = சக்கரப் படை கொண்டவனே

"தீயன்" என்று = தீயவன் என்று 

இவனை = இந்த வீடணனை

யான்  = நான் (அனுமன்)

அயிர்த்தல் செய்கிலேன் = சந்தேகம் செய்ய மாட்டேன்

மேயின சில பொருள் = அதற்கான  சில காரணங்களை
 
விளம்ப வேண்டுமால் = சொல்ல வேண்டும்

மற்றவர்களின் கருத்து தனக்கு ஏற்புடையது இல்லை என்றாலும் அதை சொன்னவர்களை அனுமன் அவமதிக்கவோ, அவர்களை தரக் குறைவாகவோ பேசவில்லை.

அவர்கள் தூயவர்கள், நல்லவர்கள், திறமையானவர்கள், நல்ல கருத்தையே கூறி இருக்கிறார்கள் என்று ஆரம்பிக்கிறான்.

பேச்சு ஒரு கலை என்றால் அந்த கலையை அனுமனிடம் கற்றுக் கொள்ளலாம்.





3 comments:

  1. இதில் ஆச்சரியம் என்னவென்றால், அனுமனுக்கு மட்டுமே விபீஷணனைப் பற்றி முன்பே தெரியும். ஆனால் மற்ற அனைவரும் கருத்துக் கூறிமுடிக்கின்றனர். என்ன செய்திருக்க வேண்டும்? முதலில் அனுமனின் கருத்தைத்தான் கேட்டிருக்க வேண்டும்; அதன் பின் அதனை ஆராய்ந்திருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ தலைகீழ்.

    ReplyDelete
  2. இரண்டு கருத்துக்கள்:

    1. மகாபாரதத்தில், வனத்தில் பாண்டவர் கலந்து போருக்குப் போவது பற்றி ஆலோசனை செய்யும்போது, முதலில் நகுல சகாதேவரின் கருத்தைக் கேட்ட பின்பே மற்றவர் தம் கருத்தைச் சொல்கின்றனர். ஏனென்றால், மூத்தவர் பேசிய பின், இளையவருக்கு வெளிப்படையாகப் பேச சுதந்திரம் இருக்காது என்பதால். அதேபோல், தான் பேசு முன், ஒரு தலைவன் தனது குழுவின் கருத்தைக் கேட்க வேண்டும். அதேபோலே, தான் முன்பே பேசாமல், மற்றவர் சுதந்திரமாகப் பேச இடம் கொடுத்தான் அனுமன். தனக்கு விபீஷணனை பற்றித் தெரிந்ததை முன்பே கூறி விட்டால், மற்றவர் ஒருபுறம் சாராமல் (objective) பேச முடியாது என்பதாலோ?

    2. Daniel Kahneman அவர்கள், "Thinking, Fast and Slow" என்ற புத்தகத்தில் எப்படி ஒரு குழு முடிவு எடுக்க வேண்டும் என்று எழுதுகிறார். குழுவினர் ஒவ்வொருவரும் தனது கருத்தை ஒரு தாளில் எழுதிய பின்னே ஆலோசனை செய்ய வேண்டும். அப்போதுதான் தனிப்பட்ட (independent) கருத்துக்கள் கிடைக்கும், முடிவு சிறந்ததாக அமையும்.

    ReplyDelete
  3. சரியோ தப்போ சுக்ரீவன் முதலானோர் ஏற்கனவே பேசிவிட்டதால்
    அனுமன் பொருத்தமாகத்தான் தன்னுடைய கருத்தை கூற ஆரம்பித்து உள்ளான்.

    ReplyDelete