Friday, December 6, 2013

இராமாயணம் - இன் உரை நல்கு நாவால்

இராமாயணம் - இன் உரை நல்கு நாவால் 


சுக்ரீவனுக்கு அரசை அளித்த பின், இராமன் அவனுக்கு சில அறிவுரைகள் கூறுகிரான்.

குரங்குக்கு கூறிய அறிவுரை என்றாலும் நமக்கும் அது பொருந்தும் தானே.

இந்த உலகம் ஒன்றை பலவாக எண்ணி பொருள் கொள்ளும். புகை இருந்தால் அங்கே நெருப்பு இருக்கும் என்று யூகிக்கும். மற்றவர்களுக்குத் தெரியாது என்று எண்ணி தவறைச் செய்யாதே. உன்னை சுற்றி பகைவர்கள் இருப்பார்கள். அவர்களாலும் சில பயன்கள் விளையும். யார் மேலும் கோபத்தை காட்டாதே. எப்போதும் சிரித்த முகத்துடன் இரு. மனதில் அன்பு இல்லாவிட்டாலும், பகைவர்களிடமும் இனிய சொற்களை நாவால் கூறு.



பாடல்


''புகை உடைத்து என்னின், உண்டுபொங்கு
      அனல் அங்கு'' என்று உன்னும்
மிகை உடைத்து உலகம்;
     நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே;
பகையுடைச் சிந்தையார்க்கும், பயன்
      உறு பண்பின் தீரா
நகையுடை முகத்தை ஆகி, இன்

      உரை நல்கு, நாவால்.


பொருள்

'புகை உடைத்து என்னின் = புகை இருந்தால்
உண்டு = இருக்கும்

பொங்கு அனல் அங்கு = கொதிக்கும் நெருப்பு அங்கு

என்று உன்னும் என்று நினைக்கும்

மிகை உடைத்து உலகம் = அறிவை உடையது இந்த உலகம். அதாவது கண்ணால் காண்பது மட்டும் அல்ல, அனுமானமாக யூகித்து அறியும் அறிவும் உண்டு. "மிகை" என்றால் அதிகமான. காண்பதற்கு மேலும் உள்ள அறிவு. புகை என்றால் புகை மட்டும் அல்ல. அங்கு நெருப்பும் இருக்கும் என்று உணரும் அறிவு மிகை அறிவு.

நூலோர் வினையமும் வேண்டற்பாற்றே = நூலோர் சொன்ன வினயங்களும் வேண்டும்.  வினையும் என்றால் சூழ்ச்சி. அரசர்க்கு கொஞ்சம் சூழ்ச்சியும் வேண்டும். அனுபவ அறிவோடு, புத்தக அறிவும் சேர வேண்டும்.


பகையுடைச் சிந்தையார்க்கும் = உன் மேல் பகை உணர்வு கொண்டவர்களுக்கும்

 பயன் உறு பண்பின் = அவர்களால் பெற்ற பயன்களுக்கு ஏற்ப

தீரா நகையுடை = எப்போதும் சிரிப்பை கொண்ட

முகத்தை ஆகி = முகத்துடன்

இன் உரை நல்கு, நாவால் = நாக்கால் நல்ல சொற்களை கூறு.

மனதில் இல்லாவிட்டாலும், வாயால் சொல்லு.

சொல்லுவது அறத்தின் நாயகன்.

நம் மேல் பகை உணர்வு கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களாலும் சில பயனிருக்கும்.  

எல்லோருக்கும் சிரித்த முகத்துடன் இனிய சொற்களை கூறு.


No comments:

Post a Comment