Sunday, January 26, 2014

இராமாயணம் - சீதையை காணவில்லை

இராமாயணம் - சீதையை காணவில்லை 


அனுமன் இலங்கைக்கு போய்விட்டு வந்தான். எல்லோரும் ஆவலாய் காத்து இருக்கிறார்கள், அனுமன் நல்ல செய்தி கொண்டு வந்திருப்பான் என்ற நம்பிக்கையில்.

ஆனால், அனுமனோ, "நான் சீதையை காணவில்லை " என்கிறான்.

நிறைய பேர் "கண்டேன் சீதையை" என்று கூறினான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 முதற்கண், "கண்டேன் சீதையை" என்ற தொடர் கம்ப இராமாயணத்தில்  இல்லை.

அது மட்டும் அல்ல, சீதையை கண்டேன் என்று ஒரு வேளை அனுமன் கூறி இருந்தால், இராமன் மனதில் எழுகிறதோ இல்லையோ, மற்றவர்கள் மனதில் "சீதை எப்படி இருக்கிறாள்...கற்போடு இருக்கிறாளா " என்ற சந்தேகம் இழையோடலாம்.

அது அவ்வளவு நல்லது அல்ல.

அனுமன் சொல்கிறான் "நங்கையை கண்டேன் அல்லேன்"  என்றான்.

கேட்பவர்கள் மனதில் உடனே என்ன தோன்றும்?

சீதையை பார்க்க வில்லையா ? அப்ப என்னதான் பார்த்தாய் என்று கேட்கத் தோன்றும் அல்லவா ?

அந்த கேள்விக்கு விடையாக அனுமன் சொல்கிறான் " உயர்குடி பிறப்பு என்பதும்,  பொறுமை என்பதும், கற்பு என்பதும் ஒன்று சேர்ந்து இருக்கக் கண்டேன்"

இப்போது சீதையை கண்டது மட்டும் அல்ல, அவள் நல்ல நிலையில் இருக்கிறாள் என்பதும் சொல்ல முடிகிறது அல்லவா? அவள் எப்படி இருக்கிறாள் என்ற கேள்வி எழாமலேயே அதை சொல்லி முடிக்கிறான் அனுமன். 

பாடல்

விற் பெருந் தடந் தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பில்,
 நற் பெருந் தவத்தள் ஆய நங்கையைக் கண்டேன் அல்லேன்; 
இற் பிறப்பு என்பது ஒன்றும், இரும் பொறை என்பது ஒன்றும், 
கற்பு எனும் பெயரது ஒன்றும், களி நடம் புரியக் கண்டேன்.


பொருள்

விற் = வில்

பெருந் = பெரிய , வலிய

தடந் தோள் வீர! = வீரமான தோள்களை கொண்ட வீரனே

வீங்கு நீர் = நிறைந்த நீரால் சூழப் பட்ட

இலங்கை = இலங்கை

வெற்பில் = திரிகூட மலையின் மேல் உள்ள இலங்கை

நற் பெருந் = நல்ல பெரிய

தவத்தள் = தவம் செய்தவளான

ஆய நங்கையைக் = பெண்ணை

கண்டேன் அல்லேன் = காணவில்லை

இற் பிறப்பு என்பது ஒன்றும் = உயர் குடிப் பிறப்பு என்பதும்

இரும் பொறை என்பது ஒன்றும் = பொறுமை என்ற ஒன்றும் 

கற்பு எனும் பெயரது ஒன்றும் = கற்பு என்ற ஒன்றும்

களி நடம் புரியக் கண்டேன் = மகிழ்வுடன் நடனம் புரியக் கண்டேன்



பெண்ணிற்கு இலக்கணம் மூன்று சொல்கிறான்....

குடிப் பிறப்பு, பொறுமை, கற்பு.  இந்த மூன்றும் இலங்கையில் ஒன்றாக ஒரு இடத்தில்  இருக்கும் என்றால் அது சீதையிடம் மட்டும் தான் இருக்கும் என்பது சொல்லாமல்  சொன்ன கருத்து. 


2 comments:

  1. "கண்டேன் சீதையை" என்பது பற்றிய செய்தி சுவாரசியமான ஒன்று.

    "கற்பு" என்பது ஒரு வேடிக்கையான கருத்து. ஏனென்றால், நாம் எல்லோரும் பெண்களுக்கு மட்டுமே கற்பு என்று எப்போதும் குறிப்பிடுகிறோம். கற்பு இழக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும், கற்பு நிலை தவறும் ஒரு ஆண் இருக்கிறான் என்பதை மறந்துவிடுகிறோம்.

    சீதை அனுமனைக் கண்டவுடன், "இராமன் கற்புடன் இருக்கிரானா?" என்று கேட்டிருந்தால் எப்படி இருக்கும்? சீதை இராமனைத் தீக்குளிக்கச் சொல்லி இருந்தால் எப்படி இருக்கும்? ஏன் அதைப்போல எழுதவில்லை?

    ReplyDelete
    Replies
    1. சீதை தீக்குளித்து இராவணனின் கற்பை நிரூபித்தாள்

      Delete