Saturday, January 25, 2014

கந்தர் அநுபூதி - ஆசையை விட வழி

கந்தர் அநுபூதி - ஆசையை விட வழி 


எல்லா அற நூல்களும் ஏறக் குறைய ஆசையே துன்பத்திற்கு காரணம், ஆசையை விட்டால் துன்பம் இல்லை என்று கூறுகின்றன.

ஆனால் ஆசையை எப்படி விடுவது ?

அதற்கு முன்னால், ஆசை எப்படி வருகிறது என்று தெரிய வேண்டாமா ?

ஆசை இல்லாத வாழக்கை ஒரு வாழ்க்கையா ? மரக் கட்டை போல, ஒரு கல்லைப் போல வாழும் வாழக்கை ஒரு வாழ்க்கையா ?

எல்லாவற்றிற்கும் நாலு வரியில் பதில் சொல்கிறார் அருணகிரிநாதர்.

ஆசை புலன்கள் வழியாக வருகிறது.

புலன்கள் இருக்கும் வரை ஆசை இருக்கும். ஆசையை ஒழிக்க முடியாது. ஆசை, மனித இயற்கை.

ஆனால், மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று அலையும் மனதை வேறொரு  ஆசை மேல் திருப்பலாம்.

அது, இறைவன் மேல் கொள்ளும் ஆசை. அப்படி இறைவன் மேல் ஆசை கொண்டால், மனம் உலக ஆசைகளை விட்டு விடும்.

பாடல்

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்

ஐவாய் வழி செல்லும் அவாவினையே.

பொருள் 

கைவாய் = கையில் உள்ள

கதிர் வேல் = ஒளி வீசும் வேல்

முருகன் = முருகன்

கழல் பெற்று = திருவடிகளைப் பெற்று

உய்வாய் = வழி காண்பாய்

மனனே = மனமே

ஒழிவாய் ஒழிவாய் = விலகுவாய் விலகுவாய்

மெய் = உடல்

வாய் = வாய் (நாக்கு)

விழி = கண்

நாசியொடும் = மூக்கோடு

செவி ஆம் = காது என்ற


ஐவாய் =  ஐந்து புலன்கள்

வழி செல்லும் அவாவினையே = வழியாக செல்லும் ஆசைகளையே


2 comments:

  1. இந்த மாதிரிப் பாடல்கள் வரும்போதெல்லாம், ஏன் பெண்ணாசையை மட்டும் குறிப்பிட வேண்டும்? பெண்களுக்கு உண்டான "ஆணாசை" என்று எழுதினால் என்ன?

    நாம் எல்லோரும் ஆணாதிக்க உலகுக்குப் (male-dominated world) பழகி விட்டோம்!

    ReplyDelete
  2. Please understand that the author is a man. And in my opinion, nitpicking whether it is male dominated or female dominated is useless.. As thyagaraja says

    Undethi ramudu okkadu ooraka chadipogu manasa..

    Don't waste your time in useless arguments he says.. We should understand the meaning and apply it if it suits us.. Nothing else..

    ReplyDelete