Tuesday, February 11, 2014

நாலடியார் - தழீஇம் தழீஇம் தண்ணம் படும்

நாலடியார் - தழீஇம் தழீஇம் தண்ணம் படும்


யாரோடு வேண்டுமானாலும் சண்டை இட்டு வென்று விடலாம்....ஒரே ஒரு ஆளைத்  தவிர.அந்த ஒரு ஆளை இது வரை வென்றவர் யாரும் இல்லை. அவர் தான் எமன். கூற்றுவனை வென்றவர் யாரும் இல்லை. எல்லோரும் ஒரு நாள் அவனிடம் தோற்றுத்தான் போவோம்.

அவன் வந்து நம்மை வேண்டு, நம்மை கட்டி இழுத்துக் கொண்டு போவான். அப்போது தண்ணம் என்ற பறை தழீஇம் தழீஇம் என்று கொட்டும். (டண்டனக்கா மாதிரி ).

நம்முடைய நாள் அளவு கடந்தது அல்ல. அதற்கு ஒரு எல்லை உண்டு. அது முடியும் போது அவர் வந்து  விடுவார்.

அவர் வருவதற்குள் நிறைய பொருள் சேர்த்து வைத்திருப்பவர்கள் மற்றவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்.  எல்லாவற்றையும் கொண்டா போகப் போகிறீர்கள்.

பாடல்

இழைத்தநாள் எல்லை இகவா ; பிழைத்தொரீஇக்
கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை; ஆற்றப்
பெரும்பொருள் வைத்தீர் வழங்குமின் ; நாளைத்
தழீஇம் தழீஇம் தண்ணம் படும்.


பொருள் 

இழைத்தநாள் = வாழ் நாள்

எல்லை இகவா = எல்லை கடந்து அல்ல

பிழைத்தொரீஇக் = பிழைத்தது இல்லை

கூற்றம் குதித்துய்ந்தார் ஈங்கில்லை = கூற்றுவனொடு சண்டை இட்டு தப்பித்தவர் இங்கு இல்லை. எங்கு குதித்து, என்ன பாய்ச்சல் காட்டினாலும் பிடித்துக் கொள்வான் 

ஆற்றப் பெரும்பொருள் வைத்தீர் = நிறைய பொருள் சேர்த்து வைத்து உள்ளவர்கள்

வழங்குமின் = மற்றவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்

 நாளைத் = நாளை

தழீஇம் தழீஇம் =  தழீஇம் தழீஇம் என்ற ஒலியோடு 

தண்ணம் படும் = தண்ணம் என்ற  இழவு பறை ஒலிக்கும்



1 comment:

  1. தழீஇம் தழீஇம் தண்ணம் படும் என்ற வரி அருமை. சும்மா நம்ம மண்டையிலே இந்த செய்தியைப் போட்டு இடிப்பது போல இருக்கிறது.

    ReplyDelete