Monday, March 17, 2014

பெரிய புராணம் - வாய் மலர்ந்து அழுத

 பெரிய புராணம் - வாய் மலர்ந்து அழுத 


அழுவது ஒரு அழகா ?

அழகுதான் என்கிறார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

திரு ஞான சம்பந்த நாயனாரை அறிமுகப் படுத்தும் முதல் பாடல்.

ஞான சம்பந்தர் என்ற குழந்தை அழுததாம்.

எதற்கு அழுதது ?

பசித்து பாலுக்கு அழவில்லை....பின் எதற்கு அழுதது ?

வேத நெறி தழைத்து ஓங்கவும்,
சைவத் துறை விளங்கவும்,
பூதப் பரமபரை பொலியவும்

ஞான சம்பந்தர் என்ற குழந்தை வாய் மலர்ந்து அழுதது.

பாடல்

வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப் 
 பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத
 சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
 பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம் 

பொருள்

வேத நெறி = வேதங்களில் சொல்லப் பட்ட நெறிகள்

தழைத்து ஓங்க = தழைத்து ஓங்க

மிகு = மிகுந்த

சைவத் துறை விளங்கப் = சைவத் துறை விளங்க

பூத பரம்பரை = பூதப் பரம்பரை என்றால் இந்த அனைத்து உயிர்களும்

பொலியப் = சிறப்புடன் வாழ

புனித வாய் = புனிதம் நிறைந்த வாய்

மலர்ந்து அழுத = மலர்ந்து அழுத

சீத = குளிர்ந்த

வள = வளமையுள்ள

வயல்= வயல்கள்

புகலித் = சீர்காழி என்ற ஊரில்

திருஞான சம்பந்தர் = திருஞான சம்பந்தர்

பாத மலர் = பாதம் என்ற மலரை

தலைக் கொண்டு = தலையில் சூடிக் கொண்டு

திருத் தொண்டு பரவுவாம் = உயர்ந்த தொண்டை பரப்புவோம்

 
வேத நெறி தழைத்து ஓங்க .....மனிதன் பொல்லாதவன். நல்லது எதைத் தந்தாலும்  அதை குழப்பி, தானும் குழம்பி, அதை தன் சுயநலத்துக்கு பயன் படுத்திக்  கொள்வான். இதனால், மற்றவர்கள் எது சரி எது தவறு என்று குழம்புவார்கள்.  குரங்கு கை பூமாலை போல, எதை தந்தாலும் தன் குற்றங்களை அதில்  ஏற்றி, தன் சாமர்த்தியத்தை காட்டுகிறேன் என்று பாலில் நஞ்சைக் கலக்கும்  வேலையில் அவன் தேர்ந்தவன். இதனால் , உயர்ந்த  கோட்பாடுகளில்  களைகள் சேர்ந்து விடுகின்றன. உண்மை எது பொய் எது என்று தெரியாத குழப்பம்  வருகிறது. களைகளை நீக்கி , வேத நெறிகள் தழைத்து ஓங்கவும். 



சைவத் துறை விளங்கவும்: சமயம் என்ற ஆறு இறைவன் என்ற கடலை நோக்கி ஓடிக் கொண்டே இருக்கிறது. அந்த ஆற்றில் பல கிளைகள். ஒவ்வொரு  கிளைக்கும் பல துறைகள்  உள்ளன.அதில் சைவத் துறை விளங்க அவர்  மலர் வாய் திறந்து அழுதார். 

பூதப் பரம்பரை பொலிய : சைவத் துறை என்றால் அது சைவர்களுக்கு மட்டும் அல்ல. எல்லா மனிதர்களுக்கும் அது பொது. மனிதர்களுக்கு மட்டும் அல்ல, எல்லா உயிர்களுக்கும்  பொது அது. எனவே பூதப் பரம்பரை பொலிய என்றார். எல்லா உயிர்களும்  சிறந்து வாழ வேண்டும் என்ற அளவற்ற கருணை. 

புனித வாய்: பார்வதியிடம் ஞானப் பால் உண்பதற்கு முன்பே அது புனித வாய் என்றார். விட்ட குறை தொட்ட குறை என முன் பிறப்பில் கொண்ட இறை உணர்வு  கொண்டு  பிறந்தார்.

1 comment:

  1. அருமையான பாடல். நன்றி.

    ReplyDelete