Wednesday, March 5, 2014

கந்தர் அலங்காரம் - வேல் மறவேன்

கந்தர் அலங்காரம் - வேல் மறவேன் 


நம் உணர்சிகளிலேயே மிகவும்  ஆழமானது, அழுத்தமானது, சக்தி வாய்ந்தது காம உணர்ச்சி.

கள் கூட உண்டால் தான் மயக்கம்  தரும்.காமம் நினைத்த மாத்திரத்திலேயே மயக்கத்தை தரும் இயல்பு உடையது.

காமம் தலைக்கு ஏறி விட்டால், எது சரி, எது தவறு என்றெல்லாம் ஒன்றும் தெரியாது.

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியும்.

காமம் - சாம்ராஜ்யங்களை புரட்டிப் போட்டிருக்கிறது.

சக்ரவர்திகளை காலில் விழ வைத்திருக்கிறது.

ஆயிரக் கணக்கான உயிர்களை கொன்று  குவித்திருக்கிறது.

அருணகிரி நாதர் காம வயப் பட்டு விலை மகள்கள் பின்னால்  போனவர்தான். எவ்வளவுதான் தவறான வழியில் போனாலும், அவர் மனம் என்னமோ, ஒரு மூலையில், முருகனின் வேலையே நினைத்துக் கொண்டிருந்திருக்கிறது.

காம மயக்கத்தில் கூட முருகனை மறக்கவில்லை என்கிறார்.

சுந்தரர் சொன்ன மாதிரி "சொல்லும் நா நமச்சிவாயவே" என்று மனமும் உடலும் என்ன செய்து கொண்டிருந்தாலும், நாக்கு மட்டும் நமச்சிவாய என்று சொல்லிக்  .கொண்டே இருக்கிறது.

பெற்ற தாய்தனை மகமறந் தாலும் 
          பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும் 
     உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும் 
          உயிரை மேவிய உடல்மறந் தாலும் 
     கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும் 
          கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும் 
     நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும் 

          நமச்சி வாயத்தை நான்மற வேனே. 

என்று உருகினார் வள்ளலார்.

பாடல்

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண் டயர்கினும் வேல்  மறவேன் முதுகூளித்திரள்
குண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே.


பொருள்

கண்டுண்ட = கண்டு + உண்ட. கண்டு என்றால் கற்கண்டு. கற்கண்டை உண்ட என்றால் அவ்வளவு இனிமையான 

சொல்லியர் = குரலை உடையவர்கள். இனிமையான சொல்லுக்கு மயங்காதவர் யார்

சீதை , இராமனிடம் மான் கேட்கிறாள். எப்படி ?

ஆயிடை, அன்னம் அன்னாள், 
     அமுது உகுத்தனைய செய்ய
வாயிடை, மழலை இன்சொல் 
     கிளியினின் குழறி, மாழ்கி, 
'நாயக! நீயே பற்றி 
     நல்கலைபோலும்' என்னா, 
சேயரிக் குவளை முத்தம் சிந்துபு 
     சீறிப் போனாள்.

மழலை + இன் சொல் + கிளியின் + குழறி (தட்டுத் தடுமாறி) + மாழ்கி (வருந்தி) .

இப்படி கேட்டால் எந்த கணவன் தான் மறுக்க முடியும் ? நம் பெண்களுக்கு எங்கே தெரிகிறது. எனக்கு இல்லாத உரிமையா என்று அதிகாரம் செய்ய வேண்டியது. அப்புறம் ஒன்றும் கிடைக்காமல் கண்ணை கசக்க வேண்டியது. இராமாயணம் படிக்க  வேண்டும். கணவன் மனைவி உறவு  பலப் படும்.


மெல்லியர் = மென்மையானவர்கள்

காமக் = காமம் என்ற

கலவிக் கள்ளை = கலவியில் விளைந்த கள்ளை .

மொண்டுண் டயர்கினும் = மொண்டு + உண்டு +  அயர்கினும். கொஞ்சம் குடித்தால் பரவாயில்லை. மொண்டு மொண்டு  குடித்தாராம்.குடித்த பின் அயர்ச்சி வந்து  விட்டது.வராதா பின்ன?


வேல்  மறவேன் = அந்த அயர்ச்சியிலும் வேலை மறக்கவில்லை.

முது = முதுமையான

கூளித் = பேய்

திரள் = திரண்டு வந்து.

நமக்கு வயது ஆகும். பின் இறந்து போவோம். ஆனால், பேய்களுக்கு ஏது சாவு ? அவைகளுக்கு வயது ஆகிக் கொண்டே  போகும்.முதுமையான பேய்கள், கூட்டம் கூட்டமாக வந்து

குண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக் = ஒரே குஷி. ஆட்டம் போடுகின்றன ? ஏன் ?

கொட்டி யாட = வெறும் ஆட்டம் அல்ல. மேள தாளம் முழங்க , கொட்டி ஆடின.

வெஞ் சூர்க் = வெம்மையான சூரனையும் அவன் அரக்க கூட்டத்தையும் 

கொன்ற = போரில் கொன்ற 

ராவுத்தனே = இராவுத்தனே

முருகன், அரக்கர்களை அக்ரோணி கணக்கில் கொன்று குவித்தார். அந்த பிணங்களை தின்ன பேய்கள் கூட்டம் கூட்டமாக வந்தன. நல்ல விருந்து கிடைத்ததால் அவைகளுக்கு ஒரே  குஷி.

கலவியிலும் கடவுளை மறவா மனம் !

1 comment:

  1. கலவியிலும் கடவுளை மறவா மனம் !

    சரிதான்!

    ReplyDelete