Saturday, March 15, 2014

திருக்குறள் - எதைச் செய்வது, எதைச் செய்யக் கூடாது ?

திருக்குறள் - எதைச் செய்வது, எதைச் செய்யக் கூடாது ?


நமக்கு வரும் மிகப் பெரிய சிக்கல் என்னவென்றால், எதைச் செய்வது, எதை செய்யக் கூடாது என்று அறியாமல் குழம்புவதுதான்.

இந்த வேலையில் சேரலாமா வேண்டாமா ? இந்த course ஐ எடுக்கலாமா வேண்டாமா ? உடற் பயிற்சி மையத்தில் சேரலாமா வேண்டாமா ?

சரி எப்படியோ, பல பேரிடம் கேட்டு மண்டையை உடைத்து ஒரு முடிவுக்கு வந்து விட்டோம் என்று வைத்துக் கொள்வோம், எடுத்த முடிவை எப்படி செயல் படுத்துவது.

ஒரு மாதிரி மண்டையைக் குழப்பி ஒரு வேலையில் சேர்ந்து விட்டோம், அல்லது ஒரு course இல் சேர்ந்து விட்டோம், அடுத்து என்ன செய்வது ?

இத்தனை சிக்கலான கேள்விக்கு இரண்டே வரிகளில்  தருகிறார் வள்ளுவர்.....

முதலில் பாடலைப் பார்ப்போம்.


என்று மொருவுதல் வேண்டும் புகழொடு  
நன்றி பயவா வினை


சீர் பிரித்த பின்

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

புகழோடு நன்றி தரதா செயலை ஒரு போதும் செய்யக் கூடாது.

அர்த்தம் என்னவோ அவ்வளவுதான். ஆழமாக சிந்திக்க வேண்டிய குறள் .

எந்த வேலையை செய்தாலும் பயனும் வர வேண்டும், புகழும் வர வேண்டும் . அப்படி பட்ட  வேலையைதத் தான் செய்ய வேண்டும். அப்படி புகழும் பயனும் தராத  வேலையைச் செய்யக் கூடாது.

அது என்ன பயன், புகழ் ?

எந்த வேலையை செய்தாலும், நமக்கு அதில் ஒரு பலன் கிடைக்கும்.

படித்து , பரீட்சை எழுதினால் அதற்கு தகுந்த மதிப்பெண் வரும்.

புகழ் வர வேண்டும் என்றால்  என்ன செய்ய வேண்டும் ?

தங்கப் பதக்கம் வாங்க வேண்டும்,  அகில இந்திய அளவில் முதலாவதாக வர வேண்டும்....

அதற்கு என்ன செய்ய வேண்டும்  ? அதிகமாக உழைக்க வேண்டும்.

கொஞ்சமாக உழைத்தால் பயன் கிடைக்கும்.

மிக மிகக்  கடினமாக உழைத்தால் புகழ் கிடைக்கும்.

அப்படி புகழும் பயனும் கிடைக்காத செயலை ஒரு போதும் செய்யக் கூடாது.

எதையும் மிக மிக சிறப்பாக செய்து பழக வேண்டும்.

யோசித்துப் பாருங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும், புகழ் பெற என்ன செய்ய வேண்டும் என்று.



No comments:

Post a Comment