Monday, April 21, 2014

திருக்குறள் - வாழ்க்கைத் துணை

திருக்குறள் - வாழ்க்கைத் துணை 


வாழ்க்கைக்கு சிறந்த துணைவி எப்படி இருக்க வேண்டும் என்று வள்ளுவர்  சொல்லுகிறார்.

முதலாவது, இல்லற வாழ்க்கைக்குத் தகுந்த பண்புகளுடன் இருக்க வேண்டும்.  அது என்ன இல்லற வாழ்க்கைக்கு தகுந்த பண்புகள் ?

பரிமேல் அழகர் சொல்கிறார் ....


நல்ல குணங்கள் :  துறவிகளை பாதுகாத்தலும் மற்றும் போற்றுதலும், விருந்தினர்களை உபசரித்தலும் ,  ஏழைகள் மேல் அருளுடமையும் முதலாயின.

நல்ல செயல்களாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், தொழில் வன்மையும், சமுதாயத்தோடு ஒத்து வாழ்தலும் முதலாயின.

இரண்டாவது, கணவனின் வருவாய்க்குத் தக்கபடி வாழ்கை நடத்துதல்.


பாடல்

மனைத் தக்க மாண்பு உடையள் ஆகி, தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத்துணை.

பொருள்

மனைத் தக்க = வீட்டிற்கு வேண்டிய

மாண்பு உடையள் ஆகி = மாண்புகளை கொண்டு

தற் கொண்டான் = தன்னைக் கொண்டவனின்

வளத்தக்காள் = வளத்திற்குள் வாழ்பவள்

வாழ்க்கைத்துணை = வாழ்க்கைத் துணையாவாள்

என்ன தெரிகிறது ?

அந்தக்  காலத்தில் வீட்டுச் செலவை பார்த்துக் கொண்டது மனைவிதான்.  கணவனின்  வருமானத்திற்குள் செலவு செய்பவள் நல்ல மனைவி.

அதே போல் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை உபசரிப்பது மனைவிதான்.

துறவிகளைப் போற்றுவதும், ஏழைகளுக்கு உதவுவதும் அவள் தான்.

மொத்தத்தில் வீட்டை முழுவதும் ஏற்று நடுத்துபவள் அவளாகவே இருந்திருக்கிறாள்.

திருமணம் ஆனவுடன் தனிக் குடித்தனம் போய் , வீட்டை வாங்கு, காரை வாங்கு என்று  வருமானத்திற்கு அதிகமாக செலவை அதிகரிப்பவள் அல்ல நல்ல துணை  என்று வள்ளுவர் சொல்லுகிறார்.

 

No comments:

Post a Comment