Thursday, April 24, 2014

நீத்தல் விண்ணப்பம் - வேட்கை வெந்நீரில் மூழ்கி

நீத்தல் விண்ணப்பம் - வேட்கை வெந்நீரில் மூழ்கி 


காமம் சுடும்.

எல்லா ஆசையும் சுடும். ஆசைகள் மனிதனை ஆட்டுவிக்கும்.  மனத்திலும்,உடலிலும் சூட்டினை ஏற்றும்.

பெண்ணின் இதழ்கள் எவ்வளவு மென்மையானது. இனிமையானது. அழகானது.  சுவையானது.

அது முதலையின் வாயைப் போலத் தெரிகிறது மாணிக்க வாசகருக்கு. பிடித்தால்  விடாது. உயிரை வாங்கிவிடும் என்பதால்.

பயப்படுகிறார்.

உலகிலேயே பெரிய சுமை எது ?

இந்த உடல் தான்.  இதை தூக்கிக் கொண்டு அலைய வேண்டி  இருக்கிறது. ஒரு நிமிடம் இறக்கி வைக்க முடியுமா ?

இதை எவ்வளவு காலம்தான் பொறுத்துக் கொண்டு இருப்பது. என்னால் முடியவில்லை என்கிறார்  மணிவாசகர்.

பாடல்


முதலைச்செவ் வாய்ச்சியர் வேட்கைவெந் நீரிற் கடிப்பமூழ்கி
விதலைச்செய் வேனை விடுதிகண் டாய்விடக் கூன்மிடைந்த
சிதலைச்செய் காயம் பொறேன்சிவ னேமுறை யோமுறையோ
திதலைச்செய் பூண்முலை மங்கைபங் காஎன் சிவகதியே.


பொருள்

முதலைச் = முதலை போல்

செவ் வாய்ச்சியர் = சிவந்த வாயை கொண்ட பெண்களின்

வேட்கை = ஆசை என்ற

வெந் நீரிற் = வெந்நீரில் 

கடிப்பமூழ்கி = ஆழ்ந்து மூழ்கி

விதலைச் செய் வேனை  = நடுக்கம் கொண்ட என்னை

விடுதி கண்டாய் = விட்டு விடாதே

விடக்கு  ஊன் மிடைந்த = மாமிச நாற்றம் கொண்ட

சிதலைச் = நோய்

செய் காயம் = உண்டாக்கும், அல்லது இடமான இந்த உடலை

பொறேன் = பொறுத்துக் கொண்டு இருக்க  மாட்டேன். பொறுக்க முடியவில்லை 

சிவனே = சிவனே 

முறை யோ முறையோ = இது சரிதானா, இது சரிதானா

திதலைச் செய் = தேமல் படர்ந்த 

பூண் முலை = ஆபரணம் அணிந்த மார்பை கொண்ட

மங்கை பங்கா = மங்கையை பாகமாகக் கொண்டவனே

என் சிவகதியே = என் சிவகதியே



1 comment:

  1. முதலை மட்டுமல்ல, வெந்நீரும் கூட!

    அற்புதமான பாடல். நன்றி.

    ReplyDelete