Sunday, June 29, 2014

இராமாயணம் - வினை அறு நோன்பினாள்

இராமாயணம் - வினை அறு நோன்பினாள் 


நோய், பிணி என்று இரண்டு சொல் உண்டு.

நோய் என்றால் வரும், மருந்து உட்கொண்டால் போய் விடும்.

பிணி, போகவே போகாது. அதனால் தான் நம் முன்னவர்கள் பசிப் பிணி, பிறவிப் பிணி என்றார்கள்.

எவ்வளவு சாப்பிட்டாலும் சிறிது நேரத்தில் மீண்டும் பசிக்கும்.

பிறவியும் அப்படித்தான்....

நல்ல வினை செய்தாலும் அதை அனுபவிக்க மறு பிறவி உண்டு.

தீ வினை செய்தாலும் அதை அனுபவிக்க மறு பிறவி உண்டு.

அறம் பாவம் என்னும் அருங்கையிற்றால் கட்டி என்பார் மணிவாசகர்.

அறமும், பாவமும் நம்மை இந்த பிறவியோடு சேர்த்து கட்டும் கயிறுகள்.

தவம் இரண்டில் இருந்தும் நம்மை விடுவிக்கும்.

வினை அறு நோன்பினாள்  .என்றான் கம்பன்.

இராமனும், இலக்குவனும் அன்று இரவு அவளுடைய ஆசிரமத்தில் தங்கி இருந்தார்கள். அது மதங்க முனிவரின் ஆசிரமம்.

அது வரை தனக்கு வேண்டி தவம் செய்த சவரி , இனி இராம இலக்குவனர்களுக்கு எது நல்லது என்று நினைப்பதற்கு கடினமானதும், ஆராய்ந்து அறிந்தால் மட்டுமே அறியக் கூடியதுமான வழிகளை ஆராய்ந்து சொன்னாள். அந்த வழி சுக்ரீவன் இருக்கும் ரிஷ்ய முகம் என்ற மலைக்கு செல்லும் வழி.

பாடல்

அனகனும் இளைய கோவும் அன்று 
     அவண் உறைந்தபின்றை, 
வினை அறு நோன்பினாளும் மெய்ம்மையின் 
     நோக்கி, வெய்ய 
துனை பரித் தேரோன் மைந்தன் இருந்த 
     அத் துளக்கு இல் குன்றம் 
நினைவு அரிது ஆயற்கு ஒத்த 
     நெறி எலாம் நினைந்து சொன்னாள்.

பொருள்


அனகனும் = குற்றம் இல்லாத இராமனும்

இளைய கோவும் = இலக்குவனும்

அன்று = அன்று

அவண்  = அங்கு

உறைந்தபின்றை = இருந்த பின்

வினை அறு நோன்பினாளும் = வினைகளை அறுக்கும் தவத்தினை கொண்ட சவரி 

மெய்ம்மையின் நோக்கி = உண்மையை ஆராய்ந்து

வெய்ய = வெப்பம் உள்ள

துனை பரித் தேரோன் மைந்தன் = குதிரைகளை கொண்ட தேரை கொண்டவனின் மைந்தன். (சூர்ய குமாரன் சுக்ரீவன் )

 இருந்த = வாழும்

அத் துளக்கு இல் குன்றம் = அந்த குற்றமற்ற மலை

நினைவு அரிது = நினைவுக்கு எட்டாத

ஆயற்கு ஒத்த = ஆய்ந்து அறியக் கூடிய

நெறி எலாம் நினைந்து சொன்னாள். = வழிகளை நினைந்து சொன்னாள்.நெறி என்றால் நல்ல நெறி மட்டும் தான் என்று பெரியவர்கள் கொள்வார்கள். நெறி என்று தானே சொல்லி இருக்கிறது.....நல்ல நெறியா தீய நெறியா என்று சொல்லவில்லையே என்று நினைக்கக் கூடாது. பெரியவர்கள் நல்லதையே நினைப்பார்கள்.

நெறி அல்லா நெறி தன்னை நெறியாகக் கொள்வேனை என்பார் மணிவாசகர்.

"நெறி அல்லா நெறி" என்றால் தீய நெறி.

நெறி என்றாலே நல்ல நெறிதான்.


நான் நினைத்தது உண்டு....ஏன் இராமன் வாலியின் துணையை நாடாமல் அவனிடம்  தோத்துப் போன சுக்ரீவனின் துணையை நாடினான் என்று ?

வாலி , இராவணனை விட பலசாலி.

பின் ஏன் இராமன் சுக்ரீவனிடம் போனான் ?

சவரி சொல்லித் தான் இராமன் சுக்ரீவன் துணையைப் பெற்றான்.

ஏன் அவ்வாறு செய்தான் ?

அது நம் நினைவுக்கு எட்டாத ஒன்று.  ஆராய்ந்து அறிய வேண்டிய ஒன்று என்கிறான்  கம்பன்....

நினைவு அரிது ஆயற்கு ஒத்த
     நெறி எலாம் நினைந்து சொன்னாள்.

நீங்களும் நானும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. 

இராமனின் அவதார நோக்கம் நிறைவேற எது சிறந்த வழியோ அதை நினைந்து சொன்னாள். 

பெரியவர்கள் சொல்லியதை அப்படியே கேட்டு நடக்கிறான் இராமன்.

ஆகமப் பிரமாணம். பெரியவர்கள் சொல்லியதில் நம்பிக்கை. 

சவரி வழி நடத்தாவிட்டால் இராமன் வேறு எங்கோ போய் இருப்பான். காப்பியத்தின் போக்கு மாறி இருக்கும். 

கதையின் போக்கை, அவதார நோக்கை நிறைவேற்றினாள் சவரி.

இதை இன்னொரு கோணத்தில் யோசித்துப் பார்ப்போம்.


இராவணன் தீங்கு செய்கிறான். அவன் தீமையின் உச்சம் மாற்றான் மனைவியை கவர்ந்தது. அவன் அழிக்கப் பட வேண்டியவன். அதற்கு வழி கோல எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்து தவம்  செய்த சவரி உதவுகிறாள். 

தீமை பிறக்கும் போதே அதை அழிக்க ஒரு நல்லதும் எங்கோ தோன்றுகிறது. 

சவரியின் நோக்கம் இராவணனை அழிப்பது  அல்ல.ஆனால் அவள் உதவினாள். 

அறம் ஒரு மிகப் பெரிய சக்தி. தீமை அழிந்தே தீரும். 

தசரதனின் கன்னத்தில் தோன்றிய ஒரு நரை மயிர், கூனியின் கோபம், கைகேயின் வரம், சூற்பனகையின் காமம், சீதையின் அழகு, சவரியின் அறிவு என்று ஒன்றோடு  ஒன்று தொடர்பில்லாதவை எல்லாம் ஒன்று சேர்ந்து இராவணன் என்ற  தீமையை அழிக்க துணை நின்றன. 

அறம் வெல்லும். மறம் தோற்கும். 

நம் இலக்கியங்கள் மீண்டும் மீண்டும் சொல்வது இதைத்தான். 

1 comment:

  1. ஒருவேளை இராமன் வாலியின் துணையைக் கொண்டிருந்தாள் என்ன ஆயிருக்கும்? அப்போதும் இராவணன் அழிந்து, சீதை விடுதலை அடைந்திருக்க மாட்டாளா?

    ReplyDelete