Tuesday, June 3, 2014

நீத்தல் விண்ணப்பம் - பிழைக்கே குழைந்து

நீத்தல் விண்ணப்பம் - பிழைக்கே குழைந்து 


எவ்வளவோ பிழைகள் செய்கிறோம்.

தெரிந்து சில. தெரியாமல் சில.

சில பிழைகளை மறக்கிறோம். சில பிழைகளை ஞாயப்படுத்துக்றோம். சில பிழைகளால் வருந்துகிறோம்.

மாணிக்க வாசகர் சொல்லுகிறார்.

பிழைக்கே குழைந்து...தான் செய்த பிழைகளை நினைத்து அப்படியே உருகி குழைந்து  போகிறாராம்.

இறைவா , நான் உன்னை  புகழ்ந்தாலும்,இகழ்ந்தாலும், என் குற்றங்களை நினைத்து நான் வருந்துகிறேன். என்னை கை விட்டு விடாதே. சிவந்த மேனி உடையவனே, என்னை ஆள்பவனே. சிறிய உயிர்களுக்கு இரங்கி அவை அமுது உண்ண நீ ஆலகால நஞ்சை உண்டாய். கடையவனான எனக்கும் அருள் புரி என்று உருகுகிறார் அடிகள்.

பாடல்

ஏசினும் யான்உன்னை ஏத்தினும் என்பிழைக் கேகுழைந்து
வேசறு வேனை விடுதிகண் டாய்செம் பவளவெற்பின்
தேசுடை யாய்என்னை ஆளுடை யாய்சிற் றுயிர்க்கிரங்கிக்
காய்சின ஆலமுண் டாய்அமு துண்ணக் கடையவனே.


பொருள்

ஏசினும் = உன்னை இகழ்ந்தாலும்

யான் உன்னை ஏத்தினும் = நான் உன்னை புகழ்ந்தாலும்

என் பிழைக்கே குழைந்து = என்னுடைய பிழைக்கு குழைந்து (வருந்தி)

வேசறு வேனை  = துன்பப்படுவேனை

விடுதிகண் டாய் = விட்டு விடாதே

செம் பவள = சிவந்த பவளம் போன்ற

வெற்பின் = மலையின் தோற்றம் போல

தேசுடை யாய் = தேகம் கொண்டவனே

என்னை ஆளுடை யாய் = என்னை ஆள்பவனே 

சிற் றுயிர்க்கிரங்கிக் = சிறிய உயிர்களுக்கு இரங்கி

காய்சின  = காய்கின்ற சினம் போன்ற

ஆலமுண் டாய் = நஞ்சை உண்டாய்

அமு துண்ணக் = மற்றவர்கள் அமுது உண்ணக்

கடையவனே = கடையவனான எனக்கும் அருள் புரி

கடையவனே என்று ஆரம்பித்து கடையவனே என்று முடித்து வைக்கிறார் நீத்தல் விண்ணபத்தை. அருமையான பாடல்  தொகுதி. ஒரு சில பாடலகளைத் தவிர்த்து அனைத்து பாடல்களையும் தந்து இருக்கிறேன்.

சமயம் கிடைக்கும் போது விடுபட்ட பாடல்களையும் மூல நூலில் இருந்து படித்துப் பாருங்கள்.

இதுவரை இவற்றை பொறுமையாக படித்தமைக்கு நன்றி.


2 comments:

  1. "பிழைக்கே குழைந்து வேசறுவேனை" என்பதைப் படிக்கும்போது என் கண்களில் நீர் வந்தது. நம் பிழைகளை நம்மில் எத்தனை பேர் உண்மையாக உணரத் தயாராக இருக்கிறோம்? உணர்ந்தபின் எத்தனை பேர் பிழைகளுக்காக வருந்துகிறோம்? நம்மை விட எவ்வளவோ உயர்ந்த மாணிக்க வாசகரே தனது பிழைகளுக்காக வருந்துகிறாராம்!

    "நீத்தல் விண்ணப்பம்" என்ற ஒன்று இருந்ததே எனக்குத் தெரியாது. இலை போட்டு விருந்து பரிமாறுவது போல, அதை எங்களுக்கு உண்ணத் தந்தாய். அதற்கு எப்படி நன்றி சொல்வது?

    சமய நூலாக இருந்தாலும் கூட, மனித உணர்ச்சிகளைத் தந்து, என் மனதைப் பல பாடல்கள் இந்த நீத்தல் விண்ணப்பத்தில் பிழிந்தன.

    ReplyDelete
  2. Outstanding explanation. Thank you so much sir.

    ReplyDelete