Thursday, July 10, 2014

இராமாயணம் - மூன்று கவடாய் முளைத்து எழுந்த மூலமோ

இராமாயணம் - மூன்று கவடாய் முளைத்து எழுந்த மூலமோ 


சாபம் தீரப் பெற்ற கவந்தன் இராமனின் பெருமைகளைச் சொல்கிறான்.

இறை சக்தியின் மூலத்தை பற்றி மிக உயர்ந்த கருத்துகளை கவந்தன் வாயிலாக கம்பர் எடுத்து உரைக்கிறார்.

அனைத்து பொருள்களையும் தோற்றுவித்தவன் நீ தானோ ? எல்லை அற்ற அறத்தின் சான்றாக இருப்பவன் நீ தானோ ? தேவர்கள் செய்த தவத்தின் பயனோ ? மூன்று கிளைகளாக பிரிந்த மூல மரமோ ? என்னுடைய சாபத்தை துடைத்தவன் நீ தானா ?

என்று இராமனை துதிக்கிறான்

பாடல்

“ஈன்றவனோ எப்பொருளும்?
    எல்லைதீர் நல் அறத்தின்
சான்றவனோ? தேவர்
    தவத்தின் தனிப்பயனோ?
மூன்று கவடாய்
    முளைத்து எழுந்த மூலமோ?
தோன்றி, அருவினையேன்
    சாபத் துயர் துடைத்தாய்! ‘‘


பொருள்

“ஈன்றவனோ எப்பொருளும்? = அனைத்து பொருளையும் தோற்றுவித்தவன் நீ தானோ ?


எல்லைதீர் நல் அறத்தின் சான்றவனோ? = எல்லை அற்ற அறத்தின் சான்றாக இருப்பவன் நீ தானோ ? அறத்திற்கு எல்லை இல்லை. எங்கும் நிறைந்து இருப்பது அறம். அனைத்து காலத்திலும் நிரந்தரமாக இருப்பது அறம் . வள்ளுவனும், கம்பனும் பிறப்பதற்கு முன்னும் அறம் என்பது  இருந்தது. இவர்கள் அதை கண்டு சொன்னார்கள்.

நம் தமிழ் இலக்கியம் அறம் அறம் என்று  எப்போதும்  சொல்லிக் கொண்டே  இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் இடமெல்லாம் அறம் பற்றி பேசும் நம் இலக்கியம். 


தேவர் தவத்தின் தனிப்பயனோ? = தேவர்கள் செய்த தவத்தின் பயனோ

மூன்று கவடாய் முளைத்து எழுந்த மூலமோ? = மூன்று கிளையாய் முளைத்து எழுந்த மூலமோ ?  இராமன் என்பவன் திருமாலின் அவதாரம் என்ற நிலை தாண்டி பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மூவர்க்கும் மூலம் அவன் தான் என்கிறார்.   ஆக்குதல், காத்தல்,அழித்தல்  என்ற மூன்றுக்கும் காரணம் அவன்தான்.

அந்த மூலமான இறைவன் - தவத்தின் பயன், அறத்தின் சான்று. சைவம், வைணவம், என்று வேறுப்பாடு இல்லாமல், அனைத்தையும் தாண்டி நிற்பவன் அந்த இறைவன்.  நம் வசதிக்கு நாம் இறைவனுக்கு பல பெயர்களையும், குணங்களையும்   தருகிறோம்.அவன் அனைத்தையும் கடந்தவன்.

இதை சொல்ல வந்த வில்லி புத்துராழ்வார் ,

  
மேவரு ஞானா னந்த வெள்ளமாய் விதித்தோ னாதி
மூவரு மாகி யந்த மூவர்க்குண் முதல்வ னாகி
யாவரும் யாவு மாகி யிறைஞ்சுவாரிறைஞ்சப் பற்ப
றேவரு மாகி நின்ற செங்கண்மா லெங்கள் கோவே

மூவரும் ஆகி, அந்த மூவர்க்கும் முதல்வனாகி என்று குறிப்பிடுகிறார்.



 தோன்றி = அவ்வாறு தோன்றி

அருவினையேன் சாபத் துயர் துடைத்தாய்!  = வினை கொண்ட என் சாபம் தீர்த்தாய்.

செயலுக்கு பலன் உண்டு.

நல்லது செய்தால் நல்லது வரும். அல்லது செய்தால் துன்பம் வரும். வினைக்கு, பதில் வினை உண்டு என்பது விதி.  

அப்படி வினையின் பலனாக வரும் துன்பங்களை வழிபாடு தீர்க்கும், குறைக்கும் என்பது நம் மதங்கள், இலக்கியங்கள் கண்ட முடிவு.

வினையின் பலனாக வரும் சாபத்தை இறை அருள் போக்கும் என்பது  நம்பிக்கை.

வினை ஓட விடும் கதிர் வேல் என்பார் அருணகிரி.

வினையோட விடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ
சுனையோடு அருவித் துறையோடு பசும்
தினையோடு இதணோடு திரிந்தவனே.

இறை அருள் வினையை ஓட விடும்.  சாபம் தீர்க்கும்.

படித்துப் படித்து சொல்கிறது நம் இலக்கியங்கள்.

ஒரு வேளை அது உண்மையாக இருக்குமோ ?





1 comment:

  1. பல பாடல்களைத் தந்திருப்பது நன்றாக இருக்கிறது. நன்றி.

    ReplyDelete