Friday, July 25, 2014

ஐந்திணை ஐம்பது - உன்னைத் காற்று வந்து என்னைத் தொட்டது

ஐந்திணை ஐம்பது - உன்னைத்  காற்று வந்து என்னைத் தொட்டது 


காதலர்கள் பிரிந்து இருந்தால் அவர்கள் காதலோ காதலியோ தந்த ஏதோ ஒரு பொருளை கையில் வைத்து பார்த்துக் கொண்டே இருப்பார்கள். அது கையில் இருக்கும் போது ஏதோ அவர்களின் மனம் கவர்ந்தவர்கள் அருகில் இருப்பது போலவே அவர்களுக்குத்  தோன்றும்.

அவர்கள் தந்த சாக்லேட்-ன் பேப்பர், அவள் தலையில் இருந்த உதிர்ந்த பூவின் இதழ், அவள் எழுதிய கடிதம்  என்று ஏதோ அவளை நினைவூட்டும் ஒன்று அவனுக்கு.

அவளுக்கும் அப்படித்தான்.

இங்கே, ஒரு சங்க காலப் பெண். அவளின் காதலன் கொஞ்ச நாளாகவே அவளைப் பார்க்க  வரவில்லை.அவளின் தோழி "அவ்வளவுதான், அவன் உன்னை மறந்து விட்டான்...இனி மேல் வரமாட்டான் " என்று பயமுறுத்திக் கொடிருக்கிறாள்.

அவள் அதற்கெல்லாம்    பயப் படுபவள் அல்ல.

"அவன் என் தோள்களைச் சேர மாட்டான் என்றா சொல்கிறாய். பரவாயில்லை. அவன் ஊரின் வழியே வரும் ஆறு நம் ஊருக்கும் வருகிறது. அந்த ஆற்றில் நான் நீராடுவேன் என்கிறாள் "

அவனும் அந்த ஆற்றில் நீராடி இருப்பான். அவன் மேல் பட்ட நீர் என் மேலும் படும். அதுவே அவன் என்னை அணைத்த மாதிரி என்கிறாள்.

இந்த ஆறு, அவனின் நீண்ட கைகள் போல என்னை வந்து தீண்டும் என்கிறாள்.

நாங்கள் ஒருவர் இந்த நீர்க் கைகளால் பற்றிக் கொள்வோம் என்கிறாள்.

பாடல்


கானக நாடன் கலவானென் றோளென்று
மானமர் கண்ணாய் ! மயங்கனீ ;- நானங்
கலந்திழியு நன்மலைமேல் வாலருவி யாடப்
புலம்பு மகன் றுநில் லா.


சீர்  பிரித்த பின்

கானக நாடன் கலவான் என் தோள் என்று 
மான் அமர் கண்ணாய் ! மயங்க நீ ; - நானம் 
கலந்து இழியும் நன் மலை மேல் வால் அருவி ஆடப் 
புலம்பும்  அகன்று நில்லா 


பொருள்

கானக நாடன் = காண்க நாட்டின் தலைவன்

கலவான் = கலக்க மாட்டான்

என் தோள் என்று = என்னுடைய தோள்களை என்று

மான் அமர் கண்ணாய் ! = மான் போன்ற கண்களைக் கொண்ட என் தோழியே

 மயங்க நீ ;  = நீ மயங்காதே

நானம் = நறுமணப் பொருள்கள்

கலந்து இழியும் = கலந்து இறங்கி வரும் (அருவி)

 நன் மலை மேல் வால் அருவி = நல்ல மலை மேல் உள்ள அருவி

ஆடப் = நீர் ஆடினால்

புலம்பும்  அகன்று = அவன் வரவில்லையே, அவனைக் காண முடியவில்லையே, அவன் என் தோள்களைச் சேரவில்லையே என்ற புலம்பல் அகன்று

நில்லா = நில்லாமல் ஓடி விடும்

எவ்வளவு மென்மையான காதல். எவ்வளவு நம்பிக்கை. எவ்வளவு குழந்தைத் தனம். எவ்வளவு  தாபம்.

உணர்சிகள் இந்த அளவு மென்மை பட்டு , ஆழமாக இருக்க வேண்டும் என்றால், அவர்களின் பண்பாடு எந்த அளவு உயர்ந்து இருக்க வேண்டும் - அந்தக் காலத்தில்

நம் முன்னவர்கள் எப்படி வாழ்ந்து  இருக்கிறார்கள்.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே என்றானே பாரதி அது போல.

யார் கண்டது...அந்தப் பெண் நம் பாட்டியின், பாட்டியின் .....பாட்டியாகக்... கூட இருக்கலாம்.

நம் பரம்பரை அப்படி.

நம் பாரம்பரியம் அப்படி.

எப்பேற்பட்ட பாரம்பரியத்தில் வந்தவர்கள் நீங்கள்.

சற்றே நிமிர்ந்து நடவுங்கள்.



2 comments:

  1. அற்புதமான கற்பனை கொண்ட பாடல்.

    ஆனால் சூது வாது அறியாத ஒரு பேதப் பெண்ணின் பாடல் போல இருக்கிறது. "உணர்ச்சிகள் இந்த அளவு மென்மை பட்டு , ஆழமாக" இருப்பதாக நீ சொல்வது புரியவில்லை! அவன் காதலனை நம்பி வெகுளித்தனமாக இருக்கிறாள், வந்தால் வரலாம் - வராவிட்டால் இல்லை... என்பதே சரியாகப் படுகிறது.

    ReplyDelete
  2. க‌வலைப்ப‍டாதே தோழி, கானக நாடன் வரவில்லை என்றால், இந்த நறுமணம் வீசும் அருவியில் குளித்து ஒரு முழுக்க‍ப் போட்டுருவோம். அப்பொழுதாவது உன் புலம்பல் நில்லாது ஓடுதாவென்று பார்ப்போம். -- இப்ப‍டியும் இருக்க‍லாமோ?

    ReplyDelete