Sunday, August 10, 2014

சிவ புராணம் - இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க

சிவ புராணம் - இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க



நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

இது சிவ புராணத்தின் தொடக்கம். இது பற்றி ஏற்கனவே நாம் சிந்தித்து இருக்கிறோம். இருந்தும் ஒரு வரி விட்டுப் போய் விட்டது.


இறைவன் எங்கு இருக்கிறான் ?

கோவிலில் இருக்கிறானா ? நமது பூஜை அறையில் இருக்கிறானா ? இமய மலையில் இருக்கிறானா ? எங்கு இருக்கிறான் ?

அவன் எங்கு வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும். அவனை , அவன் இருக்கும் இடத்தில் சென்று பார்த்து விட்டு வந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா?

மாணிக்க வாசகர் இறைவன் இருக்கும் இடத்தை உறுதியாக சொல்கிறார்.

"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க"

ஒரு இமைப் பொழுது கூட பக்தர்களின், அடியவர்களின் மனதை விட்டு நீங்க மாட்டான் அவன். அடியவர்களின் மனதில் ஆண்டவன் எப்போதும் குடி இருப்பான்.

இதையே திருமூலர் சொல்லுவார் ....

படமாட பகவர்க்கொன்று ஈயில்
நடமாட நம்பர்க்கொன்று ஆகா
நடமாட நம்பர்க்கொன்று ஈயில்
படமாட பகவர்க்கு அதாமே.

இறைவனுக்கு என்று ஒன்று செய்தால் அது அடியவர்களுக்கு வந்து சேராது. ஆனால்  அவன் அடியவர்களுக்கு என்று ஒன்று செய்தால் அது இறைவனை சென்று அடையும். 

படமாட = படம் + ஆட = பாம்பு படம் எடுத்து ஆடும்

பகவர்க்கொன்று ஈயில் = பகவானுக்கு ஒன்று தந்தால்

நடமாட = நடமாடும்

நம்பர்க்கொன்று ஆகா = நண்பர்களுக்கு (அடியவர்களுக்கு ) ஒன்றும் ஆகாது

நடமாட நம்பர்க்கொன்று ஈயில் = நடமாடும் அடியவர்களுக்கு ஒன்று தந்தால்

படமாட பகவர்க்கு அதாமே = அது பாம்பு படம் எடுத்து ஆடும் பகவானுக்கு சென்று அடையும்.

அடியார்கள் மனதில் ஆண்டவன் இருப்பான்.

இதையே ஔவையாரும் , தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே என்றார்.

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே

"இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்" என்றால் என்ன அர்த்தம். 

எதை செய்தாலும் இறை தொண்டாகவே நினைக்கிறார், யாரைப் பார்த்தாலும் இறைவனையே  பார்க்கிறார்....அணித்திலும் இறைவனே நீக்கமற நிறைந்து இருப்பதால் , அவனன்றி வேறு எதுவும் இல்லாததால் இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்  என்றார். 


அவர்கள், உலகம் அனைத்தையும் ஒன்றாகக் கண்டவர்கள். வேறுபாடுகளை கடந்தவர்கள். 

அப்படிப்பட்ட மகான்கள் வாழ்ந்த பூமி இது. அவர்கள் விட்டுச் சென்ற பொக்கிஷங்கள்  இவை. 

அள்ளிச் செல்லுங்கள். 


1 comment:

  1. ஒரு வேண்டுகோள்... அவ்வையாரின் "பெரியது, அரியது, சிறியது" போன்ற பாடல்கள் பற்றி எழுத வேண்டும்.

    ReplyDelete