Saturday, September 20, 2014

சிவ புராணம் - இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே - பாகம் 5

சிவ புராணம் - இன்பமும் துன்பமும்  இல்லானே உள்ளானே  - பாகம் 5



பாடல்

நேச அருள் புரிந்து, நெஞ்சில் வஞ்சம் கெட,
பேராது நின்ற பெரும் கருணைப் பேர் ஆறே!
ஆரா அமுதே! அளவு இலாப் பெம்மானே!
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!
நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!
இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!

பொருள்

நேச = அன்பு

அருள் = கருணை

புரிந்து =  புரிந்து

நெஞ்சில் வஞ்சம் கெட = மனதில் உள்ள  வஞ்சனைகள் கெட

பேராது நின்ற = விலகாமல் நின்ற

பெரும் கருணைப் =  பெரிய கருணை

பேர் ஆறே = பெரிய ஆறே

ஆரா அமுதே! = அருமையான அமுதம் போன்றவனே

அளவு இலாப் பெம்மானே! = அளக்க முடியாத பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே! = ஆராய்ந்து அறியாதவர்கள் மன்னதில் ஒளிக்கும் ஒளி போன்றவனே

நீராய் உருக்கி, =  நீர் போல உருக்கி

என் ஆர் உயிர் ஆய் நின்றானே = என் உயிர் போல  நின்றவனே

இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே! = இன்பமும் துன்பமும் இல்லாதவனே , உள்ளவனே

இவ்வளவுதான் பாட்டின் சொல் பொருள்  .விளக்கம்

இதன் உள் அர்த்தத்தை    சிந்திக்க சிந்திக்க விரியும்



சிந்திப்போம்

-------------------பாகம் 2 -----------------------------------------------------------------------------


"நேச அருள் புரிந்து"

நேசம் என்றால்  அன்பு.  

அது என்ன அன்பு - அருள் புரிந்து ?

அன்புக்கும் அருளுக்கும் என்ன வேறுபாடு ?

அன்பு என்பது தொடர்புடையவர்கள் மேல்  கொள்வது.

அருள் என்பது பொதுவாக அனைத்து உயிர்கள் மேலும் கொள்வது.

அதனால் தான் வள்ளுவர் அன்புடைமையை இல்லறவியலிலும் , அருளுடைமையை  துறவரவியலிலும் வைத்தார்.

இறைவன் தன்னை வழிபடுபவர்கள் மேல் மட்டும் அல்ல, எல்லா உயிர்கள் மேலும்  அன்பு செலுத்துபவன்.

தமிழால் அன்று வைத்தாரையும் வாழ வைப்போன் என்பார் அருணகிரிநாதர்.

"நெஞ்சில் வஞ்சம் கெட"

வஞ்சம் என்பது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது அல்லது    செய்வது.

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும்.

என்பார் வள்ளுவர்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்பார்  வள்ளலார்.

அப்படி, இறைவன் நம் மனதில் உள்ள வஞ்சனைகளை எல்லாம் போகும்படி
செய்வான்.

"அளவு இல்லாப் பெம்மானே "

அளவு என்பது மனிதன் வைத்துக் வைத்துக்  கொண்டது. காலம், பருமன், நீள அகலங்கள் , நிற அளவுகள் என்று எல்லாம் மனிதன் தன் வசதிக்காக  வைத்துக்  கொண்டது.  இறைவன் இந்த அளவுக்கெல்லாம் அப்பாற்பட்டவன்.

அவனை கால அளவில் அடைக்க முடியாது - எப்போது  தோன்றினான், எப்போது  முடிவான் என்று அளந்து சொல்ல முடியாது.

அளவு இல்லாத ஒன்றை மனித மனம் கற்பனை  செய்து கூட பார்க்க முடியாது.

ஒரு நாள் கடலில் உள்ள ஒரு ஆமை கிணற்றுக்குள் இருக்கும்   இன்னொரு ஆமையை சந்தித்தது.

அப்போது கடல் ஆமை கிணற்று ஆமையிடம் சொன்னது, "நான் கடலில் இருந்து  வருகிறேன் "என்றது.

கி. ஆமை:  கடல் எப்படி இருக்கும் ?

க. ஆமை: கடல் இந்த கிணறு மாதிரிதான் ஆனால் ரொம்ப பெரியது என்றது.

கி. ஆமை ஒரு கரையில் இருந்து கிணற்றின் மத்திய பாகம் வரை தவ்வியது..."இவ்வளவு  பெரிசா இருக்குமா "என்று கேட்டது.

கடல் ஆமை சிரித்துக் கொண்டே சொன்னது, "இல்லை இல்லை...இதை விட  மிகப்  பெரியது "என்றது.

உடனே கிணற்று ஆமை - மீண்டும் கரைக்கு வந்து இப்போது முக்கால் கிணறு  தாண்டியது...."இவ்வளவு பெரிசா இருக்குமா "என்று கேட்டது.

கிணற்று ஆமைக்கு கடலின் அளவை எப்படி சொல்வது ? கிணற்று ஆமைக்கு தெரிந்தது  எல்லாம் கிணற்றின்  அளவுதான்.

மணிவாசகர் கடல் ஆமை. நாம் கிணற்று ஆமை. நமக்குச் சொல்கிறார்

"அளவு இல்லாப் பெம்மானே " என்று.

 (மேலும் சிந்திப்போம் )
===============================பாகம் 3 ==================================

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!


ஓர்தல் என்றால் ஆராய்தல்; எண்ணுதல்; உணர்தல்; அறிதல்; தெளிதல் என்று பொருள்.


 மலையாளத்தில் "ஓர்மை" என்று ஒரு சொல் உண்டு. நினைவு , ஞாபகம் என்ற  அர்த்தத்தில்.

ஓராதார் உள்ளத்து - ஆராயாமல், சிந்திக்காமல் இருப்பவர்கள் உள்ளத்தில் ஒளிக்கும்  ஒளியானே.


அது என்ன ஒளிக்கும் ஒளி ?

ஒளியை, வெளிச்சத்தை யாராலும் ஒளித்து வைக்க முடியாது. அது எங்கும்  இருக்கிறது.

இறைவனைப் பற்றி சிந்திக்காதவர்கள் மனதிலும் அவன் இருக்கிறான். ஆனால்  ஒளிந்து இருக்கிறான். வெளிப் படாமல் இருக்கிறான்.

எப்படி என்றால் ....

விறகில் தீயினன் பாலில் படு நெய்போல் 
மறைய நின்றுளான் மாமணிச் சோதியன் 
உறவு கோல் நாட்டி உணர்வு கயிற்றினால் 
முறுக வாங்கி கடைய முன் நிற்குமே என்று நாவுக்கரசர் கூறியது போல.

விறகினுள் தீயைப்  போலவும்,பாலினுள் நெய்யைப்  போலவும், மணியின் உள்ளே உள்ள   ஒளி போலவும் மறைந்து   .நிற்கிறான் .அவன்.

விறகை கடைந்தால் ஜோதி வெளிப் படும்.

தயிரைக் கடைந்தால் நெய் வெளிப்படும்

மணியை பட்டை தீட்டினால் ஒளி வெளிப்படும்

அது போல இறை சிந்தனை இருந்தால் இறைவன் வெளிப்படுவான்.

இங்கே சற்று நிறுத்தி ஆழமாக சிந்திப்போம்.


இறை சிந்தனை என்று தான்  கூறுகிறார்.

இறைவன் இல்லை என்று சொல்லும் நாத்திகமும் இறை சிந்தனை பற்றித்தான்.  இல்லை என்று சொல்பவனும் இறைவனை பற்றி சிந்திக்கிறான். இறைவன் யார்,  அவன் எப்படி இருக்க  முடியும்,நமக்கு ஒரு சாட்சியும் இல்லையே, அவன் இருக்கிறானா, இல்லையா என்று அவனும் சிந்திக்கிறான். அந்த சிந்தனையின் முடிவில் அவனுக்கும் அந்த இறை சக்தி வெளிப் படலாம். எனவே தான் சைவ சிந்தாந்தம் நாத்திகத்தையும் தன்னுள் கொண்டு இருக்கிறது.  இறைவன் இல்லை என்று சொல்லுபவனும் சைவ மதத்தைச் சார்ந்தவன் தான்.  

"நம்பாதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே" என்று மணிவாசகர் சொல்லவில்லை.

நம்பச் சொல்லவில்லை. சிந்திக்கச் சொல்கிறார்.

அந்த இறை சக்தி எல்லோர் மனத்திலும் இருக்கிறது. சிலரிடம் மறைந்து கிடக்கிறது, சிலரிடம் வெளிப்பட்டு இருக்கிறது.

ஓராதார் உள்ளத்தும் அது இருக்கிறது. ஆனால் மறைந்து இருக்கிறது.

ஒரு அரிக்கேன் விளக்கு இருக்கிறது. உள்ளே சுடர் எரிகிறது. வெளியே உள்ள கண்ணாடில்   கரி படிந்து  இருக்கிறது. வெளிச்சம் வெளியே  தெரியாது.

கரியை சுத்தமாக துடைத்தால் வெளிச்சம் பளீரென்று வெளிப்படும்.

அந்த கரி தான்  ஆணவம்,கன்மம் மாயை என்ற அழுக்குகள் (மும்மலம்) என்று சொல்லுவார்கள்.

அழுக்கை நீக்கினால் ஜோதி சுடர் விட்டு வெளிச்சம் தரும்.

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே


இப்படி ஒவ்வொரு வரிக்குள்ளும் மிக மிக ஆழ்ந்த அர்த்தங்கள் கொண்டது சிவ புராணம்.

வாசித்துக் கொண்டே போவதற்கு அல்ல. நீண்ட சிந்தனைக்கு உகந்தது சிவ புராணம்.

மேலும் சிந்திப்போம்

--------------------------------\பாகம் 4/-----------------------------------------------------------------------------

நீராய் உருக்கி, என் ஆர் உயிர் ஆய் நின்றானே!

மனம் நெகிழ வேண்டும். மனம் நெகிழாதவர்களை "சரியான கல் நெஞ்சக் காரன்" என்று  சொல்லுவோம்.

இறைவன் திருவடி நம் மனதில் பதிய வேண்டும் என்றால் மனம் இளகி மெத்தென்று இருக்க வேண்டும்.

கல்லின் மேல் பாதம் படியுமா ?

நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்துருக என்பார் அருணகிரிநாதர். மனமாகிய கல் நெகிழ்ந்து உருக வேண்டும்.


நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந்து உ ருகத்
தஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனைபதம் பணிவாம்

அவர்கள் மனம் கல் என்றால் நம் மனம் எல்லாம் இரும்பாக இருக்கும்.

உருகி என்றால் எவ்வளவு உருக வேண்டும் ? நீர் போல உருகி ஓட வேண்டும்.

இளகிய உள்ளத்தில் இறைவன் ஒன்றாகக் கலந்து  விடுவான்.

நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே

மனம்  உருகிய பின் சீவன் வேறு சிவன் வேறு அல்ல. நான் வேறு அவன் வேறு என்று நாம் பிரித்து வைத்துக் கொண்டு அல்லாடுகிறோம். மனம் உருகும்போது பிரிவினையும் உருகி  விடுகிறது.இரண்டும் ஒன்றாக கலந்து விடுகிறது.


(அடுத்த வரியை நாளை சிந்திப்போம்)

-------------------------------------------/பாகம் 5/------------------------------------------------------------------

இன்பமும் துன்பமும் இல்லானே! உள்ளானே!


இன்பம்  சரி. அது எப்படி இறைவனுக்கு துன்பம் வரும் ? 


குழந்தைக்கு  உடம்பு சரி இல்லை என்றால் தாய் வருந்துவாள். தான் பத்தியம் இருப்பாள். இல்லாத கோவிலுக்கு எல்லாம் வேண்டிக்  கொள்வாள்.கண் விழித்து  வைத்தியம் பார்ப்பாள். அவள் உடம்புக்கு ஒன்றும் இல்லை. பிள்ளைக்கு  உடம்பு சரி இல்லை. 


 அதே பிள்ளை,   பள்ளியில் படிப்பில் அல்லது விளையாட்டில் முதலாவதாக  வந்தால்  அந்த தாய் மகிழ்வாள். அவள்  வரவில்லை.அவளுடைய பிள்ளை 
 வந்தது.

ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய் என்பார்  வள்ளுவர்.

பிள்ளைக்கு துன்பம் என்றால், அவள் துன்பப் படுகிறாள். 

பிள்ளைக்கு இன்பம் என்றால், அவன் இன்பம்  அடைகிறாள்.

இங்கே அவளுக்கென்று இன்பமும் துன்பமும் இல்லை. பிள்ளையின் இன்பமும், துன்பமும் அவளை பற்றிக்  கொள்கிறது.

ஒரு தாய்க்கு இரண்டு பிள்ளை  இருந்து,ஒன்றுக்கு உடல் நலம் இல்லை, இன்னொன்று  வகுப்பில் முதலாவதாக வந்து  இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். 

அவள்  வருந்துவாளா? மகிழ்வாளா ?

இரண்டும் தான். 

இறைவனுக்கு ஆயிரம்  பிள்ளைகள்.

சிலது  வருந்தும், சிலது மகிழும் எனவே இறைவன் 

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே. 

அவனுக்கு இன்பமும் இல்லை, துன்பமும் இல்லை. 

பிள்ளைகளால் அவனுக்கு இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. 

மணிவாசகர் எவ்வளவு ஆழமாக சிந்தித்து எழுதி இருக்கிறார்....


1 comment:

  1. அருமையான விளக்கம். பலவேறு இலக்கியங்களை இணைத்து எழுதியிருப்பது அருமை. இதை எல்லாம் நம்புகிறோமோ இல்லையோ, உணர்கிறோமோ இல்லையோ, இந்த விளக்கத்தைப் படித்து அனுபவிக்க முடிகிறது! நன்றி.

    ReplyDelete