Monday, September 22, 2014

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வாளான நாட்கள்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வாளான நாட்கள் 


அவசர கதியில் வாழ்க்கை சென்று கொண்டு இருக்கிறது. இருந்து யோசிக்க நேரம் இல்லை. பர பரப்பான வாழ்க்கை சூழ்நிலை.

இந்த சூழலில் வாழ்க்கையைப் பற்றியோ, அதன் அர்த்தத்தைப் பற்றியோ சிந்திக்க நேரம் இல்லை.

முதலில் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும், அதுகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் முடிக்க வேண்டும்,  இருக்கிற கடனை எல்லாம் அடைக்க வேண்டும், அப்புறம் நிம்மதியா செட்டில் ஆகி இதை எல்லாம் பற்றி யோசிக்கலாம் என்று தள்ளி போட்டுக் கொண்டே போகிறோம்.

அந்த நாளும் வரும்.

அப்போது உடலிலும் மனத்திலும் வலு இருக்காது. தளர்ந்து போவோம்.

நோய் நிறைந்து விடும் வாழ்வில். புலன்கள் சோர்ந்து போகும்.

ஒவ்வொரு நாளும் கத்தி போல நம் வாழ்க்கையை அறுத்துக் கொண்டே இருக்கிறது.



காலம் என்ற கயிற்றில் தொங்கிக் கொண்டு இருக்கிறோம். நாட்கள் என்ற கத்தி அந்த கயிற்றை ஒவ்வொரு நாளும் அறுத்துக் கொண்டே இருக்கின்றது. எப்போது கயிறு அறும் என்று தெரியாது.

இதையே வள்ளுவரும்

நாள் என ஒன்றுபோல் காட்டி, உயிர், ஈரும்
வாளது-உணர்வார்ப் பெறின்.

நாள் என ஒன்று போல் காட்டி உயிரை அறுக்கும் வாள் அது உணர்வார் அதை அறிவார்கள் என்றார்.


அதற்கு முன் அவன் திருவடிகளை நினையுங்கள் என்று திருமழிசை பிரான் கூறுகிறார்.

பாடல்

வாள்களாகி நாள்கள்செல்ல நோய்மைகுன்றி மூப்பெய்தி
மாளுநாள தாதலால்வ ணங்கிவாழ்த்தென் நெஞ்சமே
ஆளதாகு நன்மையென்று நன்குணர்ந்த தன்றியும்
மீள்விலாத போகம்நல்க வேண்டும்மால பாதமே. (863)


பொருள்

வாள்களாகி = வாள் , கத்தியாகி

நாள்கள் செல்ல = நாட்கள் செல்லச் செல்ல

நோய்மை = நோயுற்று

குன்றி = உடல் வலு குறைந்து 

மூப்பெய்தி = வயதாகி

மாளுநாள தாதலால் = இறக்கின்ற நாள் வரும் ; ஆதலால்

வணங்கி = வணங்கி

வாழ்த்தென் நெஞ்சமே = வாழ்த்து என் நெஞ்சமே

ஆளதாகு நன்மையென்று = ஆகும் நன்மை என்று

 நன்குணர்ந்த  = நன்கு உணர்ந்து

அன்றியும் = அதுமட்டும் அல்லாமல்

மீள் விலாத போகம் = எல்லையற்ற இன்பத்தை

நல்க = தருவதற்கு 

வேண்டும் = வேண்டும்

மால பாதமே = திருமாலின் பாதமே



No comments:

Post a Comment