Friday, October 3, 2014

கார் நாற்பது - வானம் கருவிருந்து ஆலிக்கும் போது

கார் நாற்பது - வானம் கருவிருந்து ஆலிக்கும் போது 


ஒருவர் மேல் ஒருவர் அன்பு கொண்டு இருக்கும் போது , பிரிவு படுத்தத்தான் செய்கிறது.

மழைக் காலத்தில் வருவேன் என்று சொல்லிவிட்டுப் போனான். வரவில்லை.

தவிக்கிறாள் அவள்.

மாலை நேரம். வானத்தைப் பார்க்கிறாள். கரு மேகங்கள் பன்னீர் தெளிக்கிறது. வான வில் ஜாலம் காட்டுகிறது.

வர்றேன்னு சொன்னானே, ஒரு வேளை வரமாட்டானோ என்று தவிக்கிறாள்.

பாடல்  

பொருகடல் வண்ணன் புனைமார்பிற் றார்போல்
திருவில் விலங்கூன்றித் தீம்பெயல் தாழ1
வருதும் எனமொழிந்தார் வாரார்கொல் வானங்
கருவிருந் தாலிக்கும் போழ்து.

பொருள்

பொருகடல் = அலை அடிக்கும் கடல். பொருதல் என்றால் எதிர்த்தல், சண்டை இடுதல். கடல் அலை கரையோடு எதிர்க்கிறது.

பொன்னங் கானல் வெண்டிரை சூழ்ந்த பொருகடல் வேலி இலங்கை
மன்ன னொல்க மால்வரை யூன்றி மாமுரண் ஆகமுந் தோளும்
முன்னவை வாட்டிப் பின்னருள் செய்த மூவிலை வேலுடை மூர்த்தி
அன்னங் கன்னிப் பேடையொ டாடி அணவு பெருந்துறை யாரே.

என்பார் திருஞான சம்பந்தர்



வண்ணன் = அந்த நிறம் கொண்டவன். கரிய நிறம் கொண்ட திருமால். கடல் வண்ணன்

திறம்பாமல் மண் காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலையெடுத் தேனே என்னும்,
திறம்பாமல் அசுரரைக்கொன் றேனே என்னும்
திறங்காட்டி யன்றைவரைக் காத்தேனே என்னும்,
திறம்பாமல் கடல்கடைந் தேனே என்னும்
திறம்பாத கடல்வண்ண னேறக் கொலோ?
திறம்பாத வுலகத் தீர்க்கென் சொல்லுகேன்
திறம்பா தென்திரு மகளெய் தினவே?

என்பது நாலாயிர திவ்ய பிரபந்தம்.


புனைமார்பிற் றார்போல் = புனைந்து மார்பில் இருப்பது போல

திருவில் = திரு வில். வான வில்.

விலங்கூன்றித் = குறுக்கே நிறுத்தி

தீம்பெயல் தாழ = இனிமையான மழை வீழ, (அந்நேரத்தில்)

வருதும் = வருவேன்

எனமொழிந்தார் = என்று சொன்னார்

வாரார்கொல் = வர மாட்டாரோ

வானங் = வானம்

கருவிருந் = கருக் கொண்டு

தாலிக்கும் போழ்து = ஆலிக்கும் பொழுது. ஆலுதல் என்றால் ஒலித்தல், சந்தோஷத்தில் ஆடுதல்.

குயில் ஆலுவ குளிர் சீர்காழியுள் என்பார் திரு ஞான சம்பந்தர்.

வெம்புந்திய கதிரோன் ஒளி விலகும் விரி சாரல் 
அம்புந்தி மூ எயிலெய்தவன் அண்ணாமலை அதனைக் 
கொம்புந்துவ குயிலாலுவ குளிர் காழியுள் ஞான 
சம்பந்தன தமிழ் வல்லவர் அடி பேணுதல் தவமே. 

இது இந்த பாடலில் உள்ள சொற்களுக்கு அர்த்தம். அதன் கீழே ஓடும் அந்த பெண்ணின் மன நிலையை சிந்திப்போம்.

கடல் எப்போதும் போல இருக்கிறது. அவளுக்கு ஏனோ அது கரையோடு சண்டை போடுவது போல இருக்கிறது. அவள் மன போராட்டத்தை கடலின் மேல் ஏற்றிக் கூறுகிறாள்.


வானவில், திருமாலின் கழுத்தில் உள்ள மாலை போல இருக்கிறதாம். அவளுக்கும் மாலை சூடிக் கொள்ள, அவளுடைய காதலனுக்கு மாலை சூடிப் பார்க்க  ஆசை.

மேகம் கருக் கொண்டு சந்தோஷத்தில் சப்தம் இடுகிறது என்கிறாள். அது போல தானும் தாய்மை நிலை அடைய வேண்டும், அதனால் மகிழ்வு அடைய வேண்டும் என்று நினைக்கிறாள்.

இயற்கை எல்லாம் அவளின் வாழ்வோடு பின்னி பிணைந்து இருப்பது போல இருக்கிறது அவளுக்கு.

பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா நிந்தன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா என்று பாரதி பாடியது போல ...பார்ப்பது எல்லாம் அவளுக்கு அவனை  நினைவு படுத்துகிறது.

அன்பு !

 
 

2 comments:

  1. "வானங் கருவிருந் தாலிக்கும் போழ்து" - இந்த ஒரு வரிக்கே காசு!

    ஆலிப்பது என்பது என்ன ஒரு அழகான வார்த்தை. இந்த மாதிரி வார்த்தைகள் எல்லாம் எப்படி மறைந்து விடுகின்றன.

    ReplyDelete
  2. பல குறுக்கு மேற்கோள்கள் போட்டு அசத்திட்டீங்க!

    ReplyDelete