Tuesday, October 21, 2014

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கூடுவதில்லை யான்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கூடுவதில்லை யான்



நாம் யாரோடு சேர்கிறோமோ அவர்களின் குணம் தான் நமக்கும் வரும். நம்மை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் நம்மை போலவே சிற்றின்பங்களை தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களோடு சேர்ந்தால் நாமும் அவர்களைப் போலத்தானே ஆவோம்

எனவேதான் பெரியவர்கள் எப்போதும் நல்லவர்கள் மற்றும் அடியார் கூட்டத்தோடு சேரும்படி மீண்டும் மீண்டும் கூறுகிறார்கள்.

நல்லவர்கள் , அறிவுள்ளவர்கள் கிடைக்கவில்லையா, பரவாயில்லை. கெட்டவர்களோடு சேராமல் இருந்தாலே போதும்.

குலசேகர ஆழ்வார் சொல்கிறார், பெண் இன்பம் தேடி அலையும் இந்த உலகத்தினரோடு நான் சேர மாட்டேன். உலகில் உள்ள ஆட்களை விட்டு விட்டால் பின் யாரோடு தான் சேர்வது ? அரங்கா என்று அவன் மேல் அன்பு கொண்டேன்  என்கிறார்.


பாடல்

நூலி னேரிடை யார்திறத் தேநிற்கும்
ஞாலந் தன்னொடும் கூடுவ தில்லையான்
ஆலியா அழையா அரங்கா வென்று
மாலெ ழுந்தொழிந் தேனென்றன் மாலுக்கே

சீர் பிரித்த பின்

நூலின் நேர் இடையார் திறத்தே நிற்கும்
ஞாலந் தன்னொடும் கூடுவது இல்லை யான்
ஆலியா அழையா அரங்கா என்று
மால் அழுந்து ஒழிந்தேன் என்றன் மாலுக்கே


பொருள்


நூலின் நேர் = நூல் போல

இடையார் =  இடையைக் கொண்ட  பெண்களின்

திறத்தே = பின்னே

நிற்கும் = நிற்கும்

ஞாலந் தன்னொடும் = உலகில் உள்ளவர்களோடு

கூடுவது இல்லை யான் = சேர மாட்டேன்

ஆலியா = ஆலியா

அழையா = என்று அழைத்து

அரங்கா என்று = அரங்கா என்று

மால் அழுந்து ஒழிந்தேன் = அன்பால், ஆசையால்  மூழ்கி ஒழிந்தேன்

என்றன் மாலுக்கே = என்றன் திருமாலுக்கே



1 comment:

  1. "மால் அழுந்து ஒழிந்தேன்" என்பதன் பொருள் புரியவில்லை.

    ReplyDelete