Tuesday, November 25, 2014

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 3 - கண்ணியர் காதல் நீர்

இராமாயணம் - தாரையின் ஆளுமை - பாகம் 3 - கண்ணியர் காதல் நீர் 


தன் முன்னால் நிற்கும் குரங்குக் கூட்டத்தை பார்த்து மேலும் தாரை சொல்கிறாள்.

"மனைவியை பிரிந்த அந்த தேவர்களின் மேலோன், உயிர் பிரிந்த மாதிரி சோர்வடைவான். அதை நீங்கள் நினைத்துப் பார்க்காமல், கருங்குவளை மலர் போன்ற கண்களை கொண்ட உங்கள் மனைவியருடன் காதல் நீரைப் பருகிக் கொண்டு இருக்கிறீர்கள்"

பாடல்

தேவி நீங்க, அத் தேவரின் சீரியொன்
ஆவி நீங்கினன்போல் அயர்வான்; அது
பாவியாது, பருகுதிர் போலும், நும்

காவி நாள்மலர்க் கண்ணியர் காதல் நீர்.

பொருள்

தேவி நீங்க = சீதை நீங்க

அத் தேவரின் சீரியொன் = தேவர்களை விட சிறந்தவனான அவன்

ஆவி நீங்கினன்போல் = உயிர் பிரிந்ததைப் போல

அயர்வான் = சோர்வடைவான்

அது பாவியாது = அந்தி நினைத்துப் பார்க்காமல்

பருகுதிர் போலும் = சுவைப்பீர்கள் போலும்

நும் = உங்கள்

காவி நாள்மலர்க்  = அன்று பூத்த குவளை மலர் போன்ற

கண்ணியர் = கண்களை கொண்டவர்களின்

காதல் நீர் = காதல் நீர்

காதல் நீர் என்பதற்கு என்ன அர்த்தமாக இருக்கும் என்ற ஆராய்ச்சியை உங்களிடமே விட்டு விடுகிறேன்....:)

ஒரு பெண், முன்னால் நிற்கும் பெரிய ஆண்கள் கூட்டத்தைப் பார்த்து இவ்வளவு  உரிமையோடு கண்டித்து திட்டுகிறாள் என்றால் அவளின் ஆளுமை எந்த அளவுக்கு இருந்திருக்க வேண்டும்.

முன்ன பின்ன தெரியாத ஒரு கூட்டத்தைப் பார்த்து ஒரு பெண் இப்படி பேச முடியுமா .....

அது மட்டும் அல்ல, இந்தப் பகுதியை கம்பன் ஏன் வைத்து இருக்கிறான் ?

சுக்ரீவன் தண்ணி அடித்துவிட்டு சொன்ன வாக்கை மறந்து விட்டான். இலக்குவன்  கோபித்து வந்தான். தாரை சமாதானப் படுத்தினாள். எல்லாம் சரியாகி விட்டது.

இந்த பகுதி இல்லாவிட்டால் , காப்பியம் என்ன ஆகி இருக்கும் ? ஒன்றும் ஆகி இருக்காது.  கதையின் ஓட்டத்திற்கு இந்த பகுதி தேவை இல்லை தான்.

குறித்த காலத்தில் சுக்ரீவன் வந்தான் என்று ஒரு வரியில் சொல்லி விட்டுப் போயிருக்கலாம்.

மாறாக, இவ்வளவு நீட்டி கம்பன் சொல்லக் காரணம் என்ன....?

காரணம் இருக்கிறது.

முதலாவது, ஒரு தலைவன் ஒழுங்காக இல்லை என்றால் அவன் அமைச்சர்களும், குடிகளும் ஒழுங்காக இருக்க மாட்டார்கள்.  சுக்ரீவன் இன்பத்தில் மூழ்கி சொன்ன சொல்லை மறந்தான். அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி  என்று மற்றவர்களும் அப்படியே இருந்து விட்டார்கள்.

இது ஒரு முதல் பாடம் - தலைவன் ஒழுங்காக இல்லை என்றால் அவனுக்கு கீழே உள்ளவர்களும்  ஒழுங்காக இருக்க மாட்டார்கள்.

அதை விட முக்கியமான பாடம் என்ன என்றால், மனிதன் ஏன் கடமை தவறுகிறான் ?

முதல் காரணம் போதை. போதைக்கு அடிமையானதால் சுக்ரீவன் தன் நிலை மறந்தான்.

இரண்டாவது, காமம். கண்ணியர் காதல் நீர் பருகிக் கிடந்ததால் மற்றவர்களும் சொன்ன சொல்லை காக்கத் தவறினார்கள்.

மதுவும் மாதுவும் மனிதனை தடம் புரளச் செய்யும்.

மேலும் சிந்திப்போம்.



No comments:

Post a Comment