Sunday, November 2, 2014

கம்ப இராமாயணம் - நன்றி மறவாமை என்றொரு அறம்

கம்ப இராமாயணம் - நன்றி மறவாமை என்றொரு அறம் 


இராமயணத்தை ஏதோ ஒரு கதையாகப் பார்க்கக் கூடாது.

கதை என்று பார்த்தால் அது ஒன்றும் பெரிய கதை இல்லை.

இராமாயணம், காலம் கடந்து நிற்கக் காரணம் அது சொல்லும் வாழ்கை அறங்கள் .

மனிதனை நல்வழிப் படுத்த அது சொல்லும் அறங்கள் .


கார் காலம் முடிந்து சீதையைத் தேட உதவி செய்கிறேன் என்று சொன்ன சுக்ரீவன் தண்ணி அடித்துவிட்டு மட்டையாகி விட்டான். இலக்குவன் மிகுந்த சினத்தோடு வருகிறான். என்ன செய்வது என்று அறியாத வானரங்கள் அனுமனிடம் சென்று யோசனை கேட்டன.

அனுமன், அறிவில் சிறந்தவன், ஆதித்யனிடம் கல்வி பயின்றவன், சொல்லின் செல்வன் , உலகுக்கு அச்சாணி என்று இராமானால் பாராட்டப் பட்டவன்.

அப்பேற்பட்ட அனுமன், இந்த பிரச்சனையை தாரை தான் தீர்க்க முடியும் என்று அவர்களை  தாரையிடம் அழைத்துக் கொண்டு போகிறான்.


தாரை எல்லாவற்றையும் கேட்கிறாள்.

பின் சொல்கிறாள் ,

"என்ன செய்வது என்று இப்ப வந்து கேட்கிறீர்கள். யாரும் செய்ய முடியாத தீய காரியத்தை செய்துவிட்டு வந்து நிற்கிறீர்கள். நன்றி கொன்ற தீய செயலை செய்துவிட்டு அதை தீர்க்க என்ன வழி என்று திகைக்கிரீர்கள். நீங்கள் பிழைப்பது அரிது " என்கிறாள்

பாடல்

 எய்தி, 'மேல் செயத்தக்கது என்?' என்றலும்,
'செய்திர், செய்தற்கு அரு நெடுந் தீயன;
நொய்தில் அன்னவை நீக்கவும் நோக்குதிர்;
உய்திர் போலும், உதவி கொன்றீர்?' எனா,

பொருள்

 எய்தி, = இங்கு வது

 'மேல் செயத்தக்கது என்?' = மேலே என்ன செய்வது

 என்றலும் என்று அவர்கள் கேட்டதும்

'செய்திர், = செய்தீர்கள்

செய்தற்கு அரு நெடுந் தீயன =செய்ய முடியாத பெரிய தீய செயலை

நொய்தில் = அதுவும் மிக எளிதாக 

அன்னவை நீக்கவும் = அதனால் வரும் சிக்கலை நீக்கவும்

நோக்குதிர்;= வழி தேடுகிறீர்கள்

உய்திர் போலும்,= நீங்கள் பிழைத்த மாதிரிதான்

உதவி கொன்றீர்?' எனா, = நன்றி கொன்றீர்.

ஒருவர் செய்த நன்றியை ஒரு போதும் மறக்கக் கூடாது என்பதை ஒரு அறமாகவே  நம் முன்னவர்கள் சொல்லி இருக்கிறார்கள். நன்றி மறவாமையை  பெரிய அறமாகவும், நன்றி மறப்பதை மன்னிக்க முடியாத குற்றமாகவும்  நம் முன்னவர்கள் நினைத்தார்கள்.

சுக்ரீவன் மது அருந்தி மறந்திருந்தாலும், அதை வேலை மெனக்கிட்டு கம்பன் சொல்ல  வேண்டிய அவசியம் என்ன ? அதைச் சொல்லாவிட்டால் காப்பியத்தின்  போக்கில் , கதையின் போக்கில் ஒன்றும் குறைந்து விடாது.

இருந்தும், கம்பன் அதை குறிப்பாக சொல்கிறான் என்றால், கம்பன் ஏதோ முக்கியமான  ஒன்றை நமக்குச் சொல்ல நினைக்கிறான் என்று தான் அர்த்தம்.

அந்த முக்கியமான ஒன்று, நன்றி மறவாமை.


No comments:

Post a Comment