Thursday, November 20, 2014

நந்திக் கலம்பகம் - பெண்ணில்லா ஊரில் பிறந்தார்

நந்திக் கலம்பகம் - பெண்ணில்லா ஊரில் பிறந்தார் 


பெண்மை, மென்மை படுத்துகிறது. தாய், சகோதரி, காதலி, மனைவி, நண்பி என்று பெண்கள் எங்கெங்கும் ஆண்களை மென்மை படுத்துகிறார்கள்.

பெண் தொடர்பு இல்லாதவர்கள் கொஞ்சம் ஈரம் குறைந்தவர்களாக இருப்பார்களோ என்னவோ.

"தாயினும் சாலப் பரிந்து " என்பார் மணிவாசகர்.

"தாயினும் நல்லான் " என்று குகனை சொல்வார்  கம்பர்.

நந்தியின் ஊரில் வாழும் ஒரு பெண். அவளுக்கு நந்திவர்மன் மேல் காதல். ஒரு தலைக் காதல்.

அவளுக்கு ஏதாவது ஒன்றின் மேல் பயம் என்றால், அது இந்த மாலைப் பொழுதின் மேல்தான்.

அது எப்ப வருமோ என்று பயந்து கொண்டே இருப்பாள்.

அவள் பயத்தை இன்னும் அதிகரிக்கும் படி, அந்த நிலவும், சீக்கிரம் சீக்கிரம் வந்து விடுகிறது.

கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல், வேகமாக வந்து விடுகிறது.

"பெண்கள் இல்லாத ஊரில் பிறந்தவர்கள் மாதிரி கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாமல்  இப்படி வருகிறாயே நிலவே " என்று அந்த நிலவின் மேல் கோபம் கொள்ளுகிறாள்.


பாடல்

மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குகரத்
                தண்ணுலாமாலைத் தமிழ் நந்தி நன்னாட்டில்
பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்
                வெண்ணிலாவே இந்த வேகம் உனக்காகாதே.



1 comment:

  1. அருமையான வாசகம்! "பெண் இல்லாத ஊரில் எப்படிப் பிறக்க முடியும்?" என்று அறிவியல் கேள்வி மட்டும் கேட்கக் கூடாது!

    ReplyDelete