Monday, November 24, 2014

தேவாரம் - காக்கைக்கே இரை ஆகி கழிவரே

தேவாரம் - காக்கைக்கே இரை ஆகி கழிவரே


இத்தனை ஆட்டமும் பாட்டமும் ஓட்டமும் எதற்கு ?  எதை அடைய இத்தனை முயற்சிகள் ?

படித்து, மணம் முடித்து, பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, அவர்களை திருமணம் செய்து கொடுத்து....பின் என்ன ?

ஒன்றும் இல்லை ! ஒன்றும்  இல்லாமல் போவதற்கா இத்தனை பாடு ?

நாவுக்கரசர் சொல்கிறார்

"பூவைக் கையில் கொண்டு அவன் பொன் போன்ற அடிகளை போற்றுவதில்லை. நாக்கினால் அவன் நாமம் சொல்வதில்லை. இந்த உடம்புக்கே நாளும் இரை தேடி அலைந்து, முடிவில் காக்கைக்கு இரையாக இந்த உடலை விட்டு, வாழ்நாட்களை கழிப்பார்களே"

பாடல்

பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி அலமந்து
காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.

பொருள்

பூக் = பூவைக்

கைக் கொண்டு = கையில் கொண்டு

அரன் = சிவனின்

பொன்னடி= பொன் போன்ற திருவடிகளை

போற்றிலார் = போற்ற மாட்டார்கள்

நாக்கைக் = நாக்கினைக்

கொண்டரன் = கொண்டு + அரன்

நாமம் நவில்கிலார் = பெயரைச் சொல்ல மாட்டார்கள்

ஆக்கைக் கேயிரை தேடி = ஆக்கைக்கே + இரை + தேடி = இந்த உடம்புக்கு தீனி தேடி

அலமந்து = அலமந்து (அலைந்து)

காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே = காக்கைக்கே இரை ஆகிக் கழிவரே

இந்த உடல் எப்படியும் மடிந்து போகப் போகிறது.  மடிந்த உடன் மக்கிப் போகும்.

அதற்கு முன் இந்த உடலை வைத்து என்ன செய்யலாம் என்று யோசிப்போம் ....

 காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே
பாலுண் கடைவாய் படுமுன்னே - மேவிழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலந் தானையே கூறு.

என்பார் பட்டினத்தார்.

கடைசி காலம் வருமுன்னே குற்றாலத்தானையே கூறு என்றார்.


2 comments:

  1. இந்தத் தமிழ் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், வயதாகுமுன், இறக்குமுன் இந்தக் கடவுள் அல்லது அந்தக் கடவுள் பெயரை தியானம் செய் என்பதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. சிற்றின்பம் தேடி அலையாத மனத்தைப் பெறலாம் என்று கொள்வதா? அதை விட, "சிற்றின்பத்தில் அலையாதே, அதெல்லாம் தற்காலிகமானவை" என்று மட்டும் சொல்லி விட்டுப் போகலாமே? "கடவுளை நினை" என்பதன் அவசியம் என்ன?

    ReplyDelete
  2. நிலையாமை என்று ஒரு அதிகாரமே அமைத்த வள்ளுவர் அதே அதிகாரத்தில் வழி சொல்லியிருக்கிறாரே!

    நாச்சென்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
    மேச்சென்று செய்யப் படும் (355)

    அறம் செய்வதால் வரும் புகழ் மட்டுமே நிலைத்திருக்கும்!!

    ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
    பொன்றாது நிற்பதொன்று இல் (233)

    அதனால், நிலையாத இந்த மானிட வாழ்க்கை முடியுமுன் நல்வினைகள் பல செய்து அழியாப்புகழ் பெறவேண்டும்.

    ReplyDelete