Friday, November 7, 2014

தேவாரம் - அவை ஒன்றும் இல்லையாம்

தேவாரம் - அவை ஒன்றும் இல்லையாம் 


சமண சமயத்தில் இருந்து மீண்டு மீண்டும் சைவ சமயத்தில் சேர்ந்தார் திருநாவுக்கரசர். அதனால் கோபம் கொண்ட சமணர்கள் திருநாவுக்கரசருக்கு மிகுந்த தொல்லை கொண்டுத்தனர். அரசனிடம் சொல்லி அவரை ஒரு அறையில் இட்டு, அந்த அறையில் நிறைய விறகுகளைப் போட்டு தீ மூட்டச் செய்தனர். தீயில் வெந்து மாளட்டும் என்று.

"விண் வரை அடுக்கிய விறகின் சூடான அழல் ஆனது உண்பதற்கு புகுந்தால் அந்த விறகு ஒன்றுக்கும் ஆகாது. பண்ணிய இந்த உலகில் நாம் பயின்ற பாவங்களை நம்முடன் இருந்து அறுப்பது நமச்சிவாய என்ற நாமமே"

பாடல்

விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை

நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.

சீர் பிரித்த பின்

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ் அழல் 
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம் 
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை 
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே 

பொருள்


விண்ணுற = விண் வரை

அடுக்கிய  = அடுக்கி வைக்கப்பட்ட

விறகின்  = விறகின்

வெவ் அழல் = சூடான தீ

உண்ணிய புகில் = உண்பதற்கு புகுந்தால்

அவை ஒன்றும் இல்லையாம் = அந்த விறகுகள் ஒன்றும் இல்லாமல் (எரிந்து) போகும்


பண்ணிய உலகினில் = செய்யப்பட்ட உலகில்

பயின்ற பாவத்தை  = பயின்ற பாவத்தை

நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே = அருகில் இருந்து அறுப்பது நமச்சிவாயவே

இது மேலோட்டமான பொருள்.

சொல்வது நாவுக்கு அரசர்.

ஆழ்ந்து சிந்தித்தால் மேலும் பலவற்றை நாம் உணர முடியும்.


எவ்வளவு பாவங்களை செய்கிறோம். நாம் செய்திருக்கிற பாவங்களுக்கு அளவு உண்டா.

இந்த ஒரு பிறவி மட்டும் அல்ல...முன் எத்தனையோ பிறவிகளில் எவ்வளவோ  பாவங்கள் செய்து வந்திருக்கிறோம்.

அவற்றை எல்லாம் அடுக்கி வைத்தால் அது வானம் வரை உயர்ந்து நிற்கும்.

இந்த பாவங்களை எப்படிப் போக்குவது. அனுபவித்துதான் தீர்க்க வேண்டும் என்றால், அனுபவிக்கும் நேரத்தில் இன்னும் பல பாவங்களை நாம் செய்து விடுவோம்.

இந்த பாவங்களை எல்லாம் ஒரேயடியாக எப்படி போக்குவது.

விறகுகள் எவ்வளவு இருந்தாலும், ஒரு சிறு நெருப்பு பத்திக் கொண்டால் அது அத்தனையும் கருகி சாம்பலாகிப் போகும். அது போல , இந்த சேர்த்து வைத்த அத்தனை   பாவங்களையும் எரிக்கும் ஒரு நெருப்பு "நமச்சிவாய " என்ற ஐந்தெழுத்து .

விறகுகள் இருந்த இடம் தெரியாமல் போவது போல நம் பாவங்களும் மறைந்து போகும்.

சரி, பாவம் என்றால் என்ன ? எது பாவம் ?

இது இயற்கை இல்லையோ அது பாவம்.

பாவங்களை நாம் "பயில்கிறோம்". அதாவது அது இயற்கையாக வராது. நாம் பாவம் செய்ய படிக்கிறோம்.

"பயின்ற பாவத்தை" என்றார்.

பாவத்தை எங்கிருந்து படிக்கிறோம் ? - தீயவர்களிடம் இருந்து, அவர்களின் சகவாசத்தால், அவர்கள் சொல்வதை கேட்பதால், அவர்கள் எழுதியவற்றை படிப்பதால்  நாம் பாவத்தை பயில்கிறோம்.


 பாவம் நம்மை இந்த உலகோடு கட்டிப் போடுகிறது.

நல்ல வலிமையான சங்கிலி அது. அந்த சங்கிலியை அறுப்பது நமச்சிவாய என்ற மந்திரம்.


நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.


நண்ணி என்றால் அருகில் இருந்து. 

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப் பொருளே! உன தொழுப்பு அடியோங்கள்,
மண்ணகத்தே வந்து, வாழச் செய்தானே! வண் திருப்பெருந்துறையாய்! வழி அடியோம்
கண் அகத்தே நின்று, களிதரு தேனே! கடல் அமுதே! கரும்பே! விரும்பு அடியார்
எண் அகத்தாய்! உலகுக்கு உயிர் ஆனாய்! எம்பெருமான்! பள்ளி எழுந்தருளாயே!


என்பது மணிவாசகர் வாக்கு. 



புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே


என்பது அபிராமி பட்டர் வாக்கு. 

நம் கூடவே இருந்து அந்த அறம் பாவம் என்ற அரும் கையிற்றை அறுப்பது அந்த மந்திரம். 



2 comments:

  1. கூடியளவில் தேவாரங்கட்கு பதவுரையுடன் விளக்கம் எழுதுவீர்கள் என விரும்புகின்றேண்.

    ReplyDelete
  2. விண்ணுற வடுக்கிய(4.11.3) தேவாரம் நாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் போட்டபோது பாடப்பட்ட சொற்றுணை வேதியன் (4.11.1)பதிகத்தில் வரும் மூன்றாம் பாடல்.

    சுண்ணாம்பறையில் மாசில் வீணை (5.90.1)

    ReplyDelete