Thursday, December 11, 2014

பெரிய புராணம் - ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன்

பெரிய புராணம் - ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் 


நமக்கு வாய்த்தது மாதிரி குருமார்கள் யாருக்கு வாய்த்து இருக்கிறார்கள் ?

சம்பவாமி யுகே யுகே என்றான் கண்ணன்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் நமக்கு நிறைய குருமார்கள் கிடைத்திருக்கிறார்கள்.

ஏனோ நாம் தான் அவர்கள் சொல்வதை எல்லாம் அறியாமலேயே, அறிந்தாலும் சரியாக புரிந்து கொள்ளாமலும், வாதம், எதிர்வாதம், குதர்க்கம் பேசியும் அவர்கள் சொன்ன நல்லதையெல்லாம் இழந்து நிற்கிறோம்.

அவர்கள் திருவருள் பெற்றார்கள். பெற்றவரை நல்லது என்று சுயநலத்தோடு இல்லாமல், பின் வரும் சந்ததியினரும் வாழ வேண்டும் என்று அவற்றை சொல்லி வைத்து விட்டுப் போனார்கள்.

நம் துர்பாக்கியம், அவற்றை எல்லாம் நாம் அறியாமலேயே போனது.

புதையலின் மேல் அமர்ந்து பிச்சை எடுக்கும் பிச்சைகாரானைப் போல இருக்கிறோம்.

திருநாவுக்கரசர் !

இவருடைய வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் போது நமக்கு பிரமிப்பு ஏற்படுகிறது.

வழி தவறிப் போய் இருக்கிறார்.

இளைய தலைமுறையினர் பல வழி தெரியாமல் செல்வதைப் போல அவரும் இளமையில் வழி தவறி சென்றிருக்கிறார்.

இறைவன் இல்லை, என்று நாத்திகம் பேசி இருக்கிறார். சிவ நிந்தனை செய்திருக்கிறார்.  தான் பிறந்த சைவ சமயத்தை விடுத்து சமண சமயத்தில் சேர்ந்து , சமண மத பிரச்சாரம் செய்து இருக்கிறார்.

ஏதோ கொஞ்ச காலம் இல்லை...நீண்ட காலம்.

பின் உண்மை உணர்ந்து, மீண்டும் சைவ சமயம் வந்து சேர்கிறார்.

சிவ நிந்தனை செய்த அவருக்கு "திருநாவுக்கரசர்" என்ற பட்டத்தை சிவனே

கொடுத்தான்.

அவர் பாடிய பாடல்களை தேவாரம் என்று சைவ சமயம் கொண்டாடுகிறது.

இன்று அகிம்சை என்பது ஏதோ காந்தி கண்டு பிடித்தது என்று நாம்  நினைக்கிறோம்.

அன்பால், பக்தியால் அரசனை எதிர்த்து வென்றவர் அப்பர் என்ற திருநாவுக்கரசர்.

அகிம்சை என்றால் கோழைத்தனம் இல்லை. "யாமார்க்கும் குடி அல்லோம், நமனை அஞ்சோம் " என்று வீர முழக்கம் செய்தவர் அவர்.

இறைவன் நேரில் வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது " எதுவும் வேண்டி  பக்தி செய்யவில்லை..." என்று இறைவனிடமே சொன்னவர் அவர்.

காதலையும், ஏன் காமத்தையும்  போற்றினார். ஆண் பெண் இன்பத்தின் உயர்வை சிறப்பித்துப் பாடினார்.

வாருங்கள், அவரின் வாழ்க்கையை அறிவோம்.

அவர் சொன்னவற்றை கேட்போம்.

கொட்டிக் கிடக்கிறது செல்வம். அள்ளிக் கொண்டு போங்கள். அள்ள அள்ள குறையாத செல்வம் இது.

திருநாவுகரசைப் பற்றிப் சொல்ல வந்த சேக்கிழார் இப்படி ஆரம்பிக்கிறார்.

உலகில் ஒரு நாவாலும் (ஒருவராலும்) சொல்ல முடியாத புகழ் உடைய அவரைப் பற்றி நான் சொல்ல நினைக்கிறேன் என்று அடக்கத்தோடு ஆரம்பிக்கிறார்.

பாடல்

திருநாவுக் கரசு, வளர் திருத்தொண்டி னெறிவாழ
வருஞானத் தவமுனிவர் வாகீசர், வாய்மைதிகழ்
பெரு நாமச் சீர்பரவ லுறுகின்றேன் பேருலகி
லொருநாவுக் குரைசெய்ய வொண்ணாமை யுணராதேன்.

சீர் பிரித்த பின்

திரு நாவுக்கரசு, வளர் திருத் தொண்டின் நெறி வாழ 
வரு ஞானத் தவ முனிவர் வாகீசர், வாய்மை திகழ்
பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன்  பேருலகில் 
ஒரு நாவுக்கு உரை செய்ய ஒண்ணாமை உணராதேன் 

பொருள்

திரு நாவுக்கரசு, = திரு நாவுக்கரசு

வளர் = வளர்ந்த, வளர்கின்ற, வளரும். இந்த உலகம் அறியாமை, ஆணவம், என்ற சேற்றில் அமிழ்ந்து கிடைக்கிறது. அதில் இருந்து முளைத்து வளர என்பது பொருள். துன்பத்தில், அறியாமையில் கிடந்து மக்கிப் போய் விடாமல், வளரும் படி என்று கொள்க.

திருத் தொண்டின் = சிறந்த திருத் தொண்டின்

நெறி வாழ = வழி முறைகள் வாழ

வரு = வந்த . நெறிகள் வாழ என்று பொருள். இன்னொரு பொருள், அந்த நெறியில் வாழ்ந்து வழி காட்டிய ஞான தவ முனிவர் என்பது இன்னொரு பொருள். சொல்லுவது எளிது. செய்வது கடினம். அப்பர் அந்த நெறியில் வாழ்ந்து வழி காட்டினார்.

ஞானத் = ஞானமும்

தவ  = தவமும்

முனிவர் = கொண்ட முனிவர்

வாகீசர், = வாகீசர் (வாகீசர் என்பது திருநாவுக்கரசரின் முந்திய பிறப்புப்  பெயர்)

வாய்மை திகழ் = வாய்மை திகழ

பெரு நாமச் சீர் பரவல் உறுகின்றேன்  = அவருடைய பெருமையை எல்லோரிடமும் பரப்ப நினைக்கின்றேன்

பேருலகில் = பெரிய உலகில்

ஒரு நாவுக்கு உரை செய்ய = ஒரு நாவாலும் உரை செய்ய

ஒண்ணாமை உணராதேன் = முடியாமையை உணராத நான்

No comments:

Post a Comment