Sunday, December 14, 2014

தேவாரம் - அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

தேவாரம் - அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.


பயம்.

நமக்குத்தான் எவ்வளவு பயங்கள் ?

வேலை போய் விடுமோ என்ற பயம், உடல் நிலை குறித்து பயம், பிள்ளைகள் படித்து நல்ல வேலை கிடைக்க வேண்டுமே என்ற பயம், காதல் கீதல் என்று தவறான முடிவை எடுத்து விடுவார்களோ என்று பயம், நெருங்கியவர்களின் உடல் நிலை குறித்துப் பயம், வருமான வரி குறித்துப் பயம்...

பயம் இல்லாத வாழ்க்கை  இருக்க முடியுமா ?

எதைப் பற்றியும் பயம் இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் ?

அச்சம் இல்லை, அச்சம் இல்லை , அச்சம் என்பது இல்லையே என்று மார் தட்டிய பாரதியும் பயந்து புதுச்சேரி  சென்றார்.

பிணி,  மூப்பு,மரணம் என்ற மூன்று பயமும் மனிதனை விடாது துரத்திக் கொண்டிருக்கிறது.
 
நாவுக்கரசர் சொல்லுகிறார்...

அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. இப்போது மட்டும் இல்லை, இனிமேல் நம்மை பயப் படுத்துவதற்கு ஒன்றும் வராது என்றும்  சொல்கிறார்.

சொல்லுவது யார் ?

ஏதோ பெரிய பணக்காரர், சக்கரவர்த்தி, படை பலம்  உள்ளவர்,செல்வாக்கு உள்ளவர்  ...அந்த மாதிரி எதுவும் இல்லாதவர்...

இளமையில் தாய் தந்தையை இழந்தவர்.

அக்காவின் வளர்ப்பில்  வளர்ந்தவர்.

அக்காவும், கணவனை இழந்த கைம்பெண்.

சொன்னது எப்போது தெரியுமா ?

அவர் இருந்த நாட்டின் அரசனின் கோபத்திற்கு உள்ளாகி, அந்த அரசன் யானையைக் கொண்டு அவரின் தலையை மிதிக்கச் சொன்ன நேரத்தில்...

மதம் கொண்ட யானை வருகிறது...நாவுக்கரசரின் தலையை இடற...

அப்போது சொல்லுகிறார் "அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை."

எங்கிருந்து இந்த தைரியம் வந்தது ?

"மேலே பூசிய திரு வெண்ணீறும், சுடர் விடும் சந்திரனைப் போன்ற சூடாமணியும், புலித்தோல் உடையும், சிவந்த நிறமும், காளை வாகனமும், பாம்பும், கெடில நதி நீரும், கொண்ட அவர் இருக்கும் போது நாம் அஞ்சுவதும் இல்லை , நமக்கு அஞ்ச வருவதும் இல்லை...."

பாடல்

சுண்ணவெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கள் சூளாமணியும்,
வண்ண இரிவை உடையும், வளரும் பவள நிறமும்,
அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும்,
திண்ணென் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-
அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.

பொருள்

சுண்ண = பொடியான

வெண் = வெண்மையான

சந்தனச்  சாந்தும் = சந்தன சாந்தும்

சுடர்த் = சுடர் வீசும்

திங்கள் = நிலவை

சூளாமணியும் = தலையில் சூடாமணியாக சூடியவரும்

வண்ண = வண்ண மயமான

இரிவை = புலித்தோல்

உடையும் = உடையும்

வளரும் பவள நிறமும் = நாளும் மெருகு ஏறும் பவளம் போன்ற சிவந்த நிறமும்

அண்ணல் = பெரியவன்

அரண் = மதில் போன்ற

முரண் ஏறும் = எதிரிகளை அழிக்கும் காளை வாகனமும்

அகலம் வளாய அரவும் = அகலமான படத்தைக் கொண்ட பாம்பும்

திண்ணென் கெடிலப் புனலும் = குளிர்ந்த கெடில நதியின் நீரும்

உடையார் ஒருவர் = உடையார் ஒருவர்

தமர் = நம் உறவினர்

நாம்!- = நாம்

அஞ்சுவது யாதொன்றும் இல்லை; = அஞ்சுவது யாதொன்றும் இல்லை

அஞ்ச வருவதும் இல்லை. = நாம் அஞ்சும்படி வருவதும் ஒன்றும் இல்லை

ஆழ்ந்த திடமான பக்தி. அசைக்க முடியாத நம்பிக்கை.

சொல்லிப் பாருங்கள் - ஒரு தைரியம் வரும்.

"அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை."




8 comments:

  1. கொஞ்சம் கஷ்டம்தான். சிவன் என்று ஒருவர் இருப்பதே சந்தேகமாக இருக்கிறது! அந்த சிவனை நம்பி எப்படி அஞ்சாமல் இருப்பது?!

    ReplyDelete
    Replies
    1. சார் , வாழ்க்கை என்பது நம்பிக்கையே !
      ஏசப்பாவோ , அல்லாவோ - இதே நிலைதானே சார் .

      Delete
  2. Naamarkkum kudiyallom hymn is another one

    ReplyDelete
  3. சிறந்த எடுத்துக்காட்டு புரட்சி தலைவி ஜெயலலிதா

    ReplyDelete
  4. அருமையான விளக்க உரை 🙏🙏

    ReplyDelete
  5. அருமையான விளக்கம்!
    'உடையார் தமர் நாம்' என்பதை
    சொல் விளக்கத்தில் குறிப்பிட்ட தைப் போலவே பொருள் விளக்கத்திலும் குறிப்பிட்டால்
    சிறப்பாக இருக்கும்!

    ReplyDelete