Saturday, January 17, 2015

நந்திக் கலம்பகம் - ஆண்களோடு பகை

நந்திக் கலம்பகம் - ஆண்களோடு பகை 


இந்த பெண் இவ்வளவு அழகாக இருக்கிறாள். இவளை இப்படி தெருவில் நடமாட விட்டிருக்கிறார்களே இது எவ்வளவு பெரிய ஆபத்து. 

இவளுடைய பெற்றோருக்கு ஆண்கள் மேல் என்ன பகையோ. இவள் இப்படி தெருவில் திரிந்தால் ஆண் பிள்ளைகளின் மனம் என்ன பாடு படும். இவளை அடைய எல்லோரும் முயல்வார்கள். எல்லோருக்குமா அவள் கிடைத்து விடுவாள் ? கிடைக்காதவர்கள் என்ன ஆவார்கள்....

சரி, பெற்றோர் தான் போகட்டும்...இந்த நந்தி வர்மன் இருக்கிறானே....குடிகளை காக்க வேண்டியது அவன் கடமை அல்லவா ? இவள் இப்படி ஊரில் திரிந்தால் ஆண்கள் பாதிக்கப் படுவார்களே. அவர்களை காக்கவேண்டியது மன்னனாகிய நந்தியின் கடமை அல்லவா ? இப்படி கடமை தவறிய மன்னனாக இருக்கிறானே என்று அந்த பெண்ணைப் பார்த்து அவள் அழகில் மனதை பறிகொடுத்த கவிஞன் பாடுகிறான் 

பாடல் 


அரிபயில் நெடுநாட்டத் தஞ்சனம் முழுதூட்டிப்
 புரிகுழல் மடமானைப் போதர விட்டாரால்
 நரபதி எனும்நந்தி நன்மயி லாபுரியில்

 உருவுடை இவள்தாயர்க் குலகொடு பகை உண்டோ?

பொருள் 

அரிபயில் = அறிவு முற்றாத (இளைஞர்கள்) மத்தியில் 

நெடுநாட்டத் தஞ்சனம் = நீண்ட கண்களில் மையை 

முழுதூட்டிப் = முழுவதுமாக தீட்டி 

புரிகுழல் = முடியை சரி செய்து 

மடமானைப் = பேதை போன்ற இந்தப் பெண்ணை 

போதர விட்டாரால் = வெளியில் விட்டதால் 

நரபதி எனும் = மக்களின் தலைவன் என்ற 

நந்தி = நந்தி வர்மனின் 

நன்மயி லாபுரியில் = நல்ல நாட்டில் 


உருவுடை= அழகான 

இவள் தாயர்க் = இவளின் தாயார் 

குலகொடு பகை உண்டோ? = ஆண் குலத்தோடு பகை கொண்டவளோ ?



2 comments:

  1. "உலகு" என்றால் ஆண்கள் மட்டும் அல்ல, பெண்களும் சேர்ந்துதான். அவள் அழகைப் பார்த்தால் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் பாதிக்கப்படுவார்கள் - ஆசையாலோ, பொறாமையாலோ என்பதை நம் கற்பனைக்கு விட்டு விடுகிறான் கவிஞன்!

    இதே மாதிரி, இந்த blogஇல், இராமன் அழகைப் பற்றி ஒரு கவிதை படித்த மாதிரி ஞாபகம். சரிதானா?

    ReplyDelete