Tuesday, January 6, 2015

திருக்குறள் - பெரும்பயன் இல்லாத சொல்

திருக்குறள் - பெரும்பயன் இல்லாத சொல் 


திருக்குறள் படித்த பின் பேசுவதற்கே பயமாக இருக்கிறது.

எதைப் பேச வேண்டும் ? எப்படி பேச வேண்டும் என்று சொல்கிறார் வள்ளுவர். அதன் படி பார்த்தால் நாமெல்லாம் பேசவே முடியாது போலிருக்கிறது. இது வரை பேசியதை நினைத்து வெட்கமாகவும் இருக்கிறது.

பெரிய நலன்களை ஆராயும்  அறிவுள்ளவர்கள் ஒருபோதும் பெரிய பயனைத் தராத சொற்களை பேச மாட்டார்கள்.

பாடல்

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார் 
பெரும்பயன் இல்லாத சொல்.

பொருள்

அரும்பயன் = பெரிய பயன்களை 

ஆயும் = ஆராய்ச்சி செய்யும்

அறிவினார் = அறிவு உள்ளவர்கள்

சொல்லார் = சொல்ல மாட்டார்கள்

பெரும்பயன் = பெரிய பயன்களைத்

இல்லாத = தராத

சொல். = சொற்களை

1. ஒரு சொல்லை சொல்வதற்கு முன், அந்த சொல்லினால் என்ன பயன் விளையும் என்று  சிந்தித்து சொல்ல வேண்டும். 

2. ஒரு சொல்லினால் கொஞ்சம் தான் பயன் விளையும் என்றால் இன்னும் நன்றாக  சிந்தித்து அதை விட சிறப்பாக எப்படி சொன்னால் பெரிய பயன் விளையும் என்று  சிந்தித்து சொல்ல  வேண்டும்.

3. ஒரு வேளை பெரிய பயன்களை தரும் சொற்களை சொல்ல முடியாவிட்டால் ஒன்றும் சொல்லாமல் இருப்பதே நலம். "சொல்லார் பெறும் பயன் இல்லாத  சொல்" என்கிறார் வள்ளுவர். 

4. இன்னும் சிந்தித்தால், எவன் ஒருவன் பெரிய நன்மை பயக்கும் சொற்களை சொல்லவில்லையோ அவன் பெரிய அறிஞன் அல்ல. அவன் சொல்வதை நாம்  கேட்டு நம் நேரத்தை வீணடிக்கக் கூடாது. பெரிய பயன்களை தரும் சொற்களை பேசுபவர்களை கண்டு அவர்கள் சொல்வதை கேட்க்க வேண்டும். 

5. வள வள என்று பேசிக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி பேசுபவர்களின் பேச்சை  கேட்டு நேரத்தை வீணடிக்கவும் கூடாது. 

6. பெறும் பயன் தரும் சொற்களை யார் பேசுவார்கள் என்றால், அரிய பயன்களைப் பற்றை ஆராய்ச்சி செய்பவர்கள் அப்படி பேசுவார்கள். அது என்ன அரிய  பயன் ? பரிமேல் அழகர் சொல்கிறார் அரிய பயன் என்றால் வீடு பேறு , முக்தி என்று. உங்களுக்கு அதில் உடன் பாடு இல்லை என்றால் நீண்ட இன்பம், அமைதி, சமாதானம், இவற்றைப் பற்றி சிந்திப்பவர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  யார் பெரிய விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறார்களோ  அவர்கள் பேசுவது நமக்கு பெரிய பயனைத் தரும். 

எனவே, 

பெரிய விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யுங்கள், 
அப்படி ஆராய்ச்சி செய்பவர்கள் சொல்வதை கேளுங்கள், 
இரண்டும் முடியாவிட்டால், பேசாமல் இருங்கள். 





1 comment:

  1. "தோன்றிற் புகழொடு" என்ற குறளுக்கு பிறந்தால் புகழோடு பிறக்க வேண்டும் என்றும் பொருள் விளக்கம் தருவார்கள்.

    ஆனால் இதற்கு மக்கள் முன் கோட்சேவைப் போல் தோன்றாதே, காந்தியைப் போல் தோன்று. அல்லது தோன்றாமல் இரு என்பது சரியான விளக்கம் என்று நினைக்கிறேன்.

    தாங்கள் கூறுவதிலும், இங்கே சொல்வது என்பது சபையில் சொல்வதை முதன்மைப்படுத்துவது என்று நினைக்கறேன்.

    ReplyDelete