Friday, January 2, 2015

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வைகுந்தம் புகுவது விதியே

நாலாயிர திவ்ய பிரபந்தம் - வைகுந்தம் புகுவது விதியே எத்தனையோ மக்கள் பிறக்கிறார்கள், வளர்கிறார்கள், மடிகிறார்கள். எல்லோரும் ஒரு ஆழ்வாரகவோ, நாயன்மாரகவோ, எசுவாகவோ, புத்தராகவோ ஆக முடிவதில்லை.

ஏன் ?

ஒரு சிலருக்குத்தான் விதித்து இருக்கிறதா ?

மற்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள் ?

எல்லோரும் சுவர்க்கம் போக முடியுமா ?

முடியும் என்கிறார் நம்மாழ்வார்.

அது மட்டும் அல்ல, நீங்கள் வைகுண்டம் போக வேண்டியது உங்கள் விதி.  போகாமல் இருப்பது விதிவிலக்கு. நாம் எல்லோரும் கட்டாயம் வைகுண்டம் போவோம்.

அவர் போனார். போன போது என்ன நிகழ்ந்தது என்று சொல்கிறார். நீங்களும் போகலாம் என்றும் கூறுகிறார்.

பாசுரம்

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமரெமர் எமதிடம் புகுகென்று
வைகுந்தத் தமரரும் முனிவரும் வியந் தனர்
வகுந்தம் புகுவது மண்ணவர் விதியே

பொருள்

வைகுந்தம் புகுதலும் = வைகுந்தத்தில் புகும் பொழுது

வாசலில் = அதன் வாசலில்

வானவர் = வானவர்கள்

வைகுந்தன் =  வைகுண்ட வாசன் திருமால்

தமரெமர் = தமர் + எமர் = தமர் என்றால் சொந்தம். திருமால் நம்ம சொந்தக் காரன். அதாவது , உமக்கும் எமக்கும் அவன் பொதுவான சொந்தக்காரன். அவன் மூலம் நீரும் நாமும் சொந்தமாகி விட்டோம்.  

எமதிடம் புகுகென்று = எங்கள் இடத்திருக்கு வாருங்கள் என்று

வைகுந்தத் தமரரும் = வைகுந்தத்து + அமரரும். வைகுந்தத்தில் உள்ள அமரர்களும்.

முனிவரும் = அங்குள்ள முனிவர்களும்

வியந்தனர் = ஆச்சரியத்தோடு அழைத்தனர்

வகுந்தம் புகுவது = வைகுந்தம் செல்வது

மண்ணவர் விதியே = மண்ணில் வாழ்பவர்களின் விதியே

எல்லோரும் வைகுந்தம் போகலாம். அது நமக்கு விதிக்கப்பட்ட விதி என்கிறார்.

அது அவருடைய பரந்த மனத்தைக் காட்டுகிறது. மக்கள் மேல் அவர் கொண்ட அன்பை வெளிப் படுத்துகிறது.

இங்கே ஒன்றை சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன்.

வைணவ உரை   எழுதிய பெரியவர்கள் இந்த பாடலுக்கு சற்று வேறு  விதமாக பொருள் சொல்லி இருக்கிறார்கள்.  அதை கீழே தந்திருக்கிறேன். அதையும் படியுங்கள்.


 -அங்குள்ள நித்யஸூரிகள் இவர்களைக் கண்டு ‘இப்படி பரமபதத்திலே வருவதே இதென்ன பாக்யம்! இதென்ன பாக்யம்!!’ என்று வியந்து மகிழ்ந்தனரென்கிறதிப்பாட்டில். வாசலில் வானவர்-திருவாசல் காக்கும் முதலிகள் என்ன சொன்னார்களென்னில்; (வைகுந்தன் தமர் எமர்) வைகுந்தநாதனுக்கு அடியவர்களாக வருகின்ற இவர்கள் எமக்கு ஸ்வாமிகள் என்றார்கள். இன்னமும் என்ன சொன்னார்கள்? (எமதிடம்புகுதென்று) எங்களுடைய பதவியை நீங்கள் வஹித்து நிர்வஹிக்கவேணுமென்று சொல்லிக் கையிலே பிரம்பையும் கொடுப்பர்களாம். வியந்தனர்-ஆச்சாரியப்பட்டார்கள்; மண்ணவர் விண்ணவராயினரே என்று வியப்படைந்தனர். அப்படி வியந்தவர்கள் யாவரென்னில்; (வைகுந்தத்து அமரரும் முனிவரும்) “ஸ்ரீ பரதாழ்வானையும் இளையபெருமாளையும் போலே குணநிஷ்டரூம் கைங்காரிய நிஷ்டரும்” என்பது ஈடு, வைகுண்டே து பரே லோகே ச்ரியா ஸாரித்தம் ஜகத்பத்:, ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்iதர் பாகவதைஸ் ஸஹ என்று பகவச் சாஸ்த்ரத்திலும் பக்தை பாகவதை: என்கிற இரண்டு சொற்களையிட்டுச் சொல்லிற்று. உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும் என்கிறாள் ஆண்டாளும். குணாநுபவமே போதுபோக்கா யிருப்பவர்களும் கைங்காரியமே காலNகூஷபமாயிருப்பவர்களுமான இருவகுப்பினருமுளரே!

“வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே” என்ற ஈற்றடியை “மன்னவர் வைகுந்தம் புகுவது விதியே” என்று அந்வயித்துக்கொள்வது பாங்கு. ஸம்ஸாரிகள் பரமபதத்தே வந்து சேரும்படியாக நாம் பாக்யம் பண்ணினோமே! என்று சொல்லி வியந்தனராயிற்று. தைவம் தீஷ்டம் பாகதேயம் பாக்யம் ஸத்ர் நியதிரி வீதி: என்ற அமரகோசத்தின்படி விதியென்னுஞ் சொல் பாக்யத்தைச் சொல்லக்கடவது. இதன் பரமதாற்பாரியம் யாதெனில்; திருமங்கையாழ்வார் ஏரார்துமுயல்விட்டுக் காக்கைப்பின் பேரவதே என்று சொல்லி லீலாவிபூதியில் அநுபவந்தான் உண்மையில் சிறக்குமாகையாலே அப்படிச் சிறந்ததான தேச விசேஷத்திலே சென்று நாங்கள்; அநுபவிக்கப் பார்த் திருக்கையில் நீங்கள் அங்கிருந்து இங்கே வந்தீர்களே! இது எங்களுடைய பரம பாக்கியமன்றோ வென்று கொண்டாடினார்களென்கை.1 comment:

  1. ஏனப்பா இப்படி ஒரு சித்திரவதை! அந்த வேறு பொருளையும் "தமிழில்" நீயே எழுதக் கூடாதா?

    அவைகள் எழுத்தில் "மண்ணவர்" எப்படி "மன்னவர்" ஆனார்கள்?!?

    ReplyDelete