Tuesday, February 24, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 2

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - பாகம் 2 


புதுவை நகரில் பாரதியார் இருந்த காலம். உபநிடதங்களில் தமிழாக்கத்தை திருத்திக் கொண்டிருந்த ஒரு மதிய வேளை. யாரும் இல்லாத் தெரு. அங்கே குள்ளமாக ஒரு ஆள் வந்தான். பார்த்தால் அழுக்கு நிறைந்து, ஒரு குப்பை கோணியை சுமந்து வருகிறான். அவன் கண்ணில் ஒரு ஒளி . அவன் தான் தன் குரு என்று பாரதி கண்டு கொள்கிறான்....ஒரு பிச்சைக்காரனை போன்ற தோற்றம் உள்ள ஒருவனை குரு என்று அடையாளம் கண்டு கொள்ள ஆன்மீகத்தில் பக்குவப்பட்ட ஒருவரால் தான் முடியும்.

பாரதி ஓடிச் சென்று அந்த குள்ளச் சாமியின் கையைப் பற்றிக் கொள்கிறார்.



அப்போது நான் குள்ளச் சாமி கையை
அன்புடனே பற்றியிது பேச லுற்றேன்;
அப்பனே!தேசிகனே!ஞானி என்பார்.
அவனியிலே சிலர்நின்னைப் பித்தன் என்பார்;
செப்புறுநல் லஷ்டாங்க யோக சித்தி
சேர்ந்தவனென் றுனைப்புகழ்வார் சிலரென் முன்னே;
ஒப்பனைகள் காட்டாமல் உண்மை சொல்வாய்,
உத்தமனே! எனக்குநினை உணர்த்து வாயே.


அந்த குள்ளச் சாமியின் கையைப் பிடித்துக் கொண்டு பாரதி சொல்கிறான் 

"சிலர் உன்னை ஞானி என்கிறார்கள், சிலர் உன்னை பித்தன் என்கிறார்கள், வேறு சிலரோ  உன்னை சித்தி பெற்ற யோகி என்கிறார்கள், நீ யார் என்று எனக்குச் சொல் " 

ஞானிகள் தங்களை அடையாளம் காட்ட மாட்டார்கள். 

அடியாளம் காட்டுபவர்கள் ஞானியாக  இருக்க மாட்டார்கள். 

அறிவுத் தாகம் உள்ளவர்களுக்கு அவர்கள் தென் படுவார்கள். 

ஞானியை பித்தன் என்றும் இந்த உலகம் சொல்லி இகழ்ந்து இருக்கிறது.

ஞானிகள் அதைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள். 

"நீங்கள் யார் " என்று நம்மை யாராவது கேட்டால் நாம் எவ்வளவு சொல்வோம் நம்மைப் பற்றி ...

இந்த குள்ளச் சாமியிடம் பாரதி "எனக்கு நின்னை உணர்த்துவாய்" என்று கேட்டவுடன்  அந்த குள்ளச் சாமி என்ன செய்தார் தெரியுமா ?


No comments:

Post a Comment