Friday, February 27, 2015

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - வேதாந்த மரத்தில் ஒரு வேரைக் கண்டேன்

பாரதியார் பாடல்கள் - குரு தரிசனம் - வேதாந்த மரத்தில் ஒரு வேரைக் கண்டேன் 


குள்ளச் சாமியை துரத்திக் கொண்டு வந்த பாரதி அவரை அருகில் இருந்த ஒரு பாழடைந்த வீட்டின் பின் புறத்தில் மடக்கிப் பிடித்தார்.

சரி இவன் நம்மை விடமாட்டான் போல் இருக்கிறது என்று அறிந்த கொண்ட அந்த குள்ளச் சாமி, இவன் ஒரு நல்ல சீடன்...இவனுக்கு உபதேசம் செய்ய வேண்டியதுதான் என்று உபதேசம்  செய்கிறார்.

அருகில் இருந்த குட்டிச் சுவரைக் காட்டினார், பின் சூரியனைக் காட்டினார், அப்புறம் கிணற்றுக்குள் எட்டிப் பார்த்து அந்த சூரியனின் நிழலைக் காட்டினார்...இந்த மூன்றையும் காட்டி விட்டு "என்ன புரிந்ததா?" என்று கேட்டார்.

"புரிந்தது " என்றார் பாரதி.

குள்ளச்சாமியும் மகிழ்வுடன் சென்று விட்டார்.

வேதாந்த மரத்தில் ஒரு வேரைக் கண்டேன் என்கிறார் பாரதி.

பாடல்

குள்ளச் சாமியும் சந்தோஷமாக 
பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே;பரமயோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒருகுட்டிச் சுவர்காட்டிப் பரிதி காட்டி,
அக்கணமே கிணற்றுளதன் விம்பங் காட்டி,
“அறிதிகொலோ?”எனக்கேட்டான் “என்றேன்”
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான்; யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.

சரி, இது என்ன உபதேசம் ?

குட்டிச் சுவர், சூரியன், பழைய கிணறு...இந்த மூன்றையும் காட்டி  என்ன புரிந்ததா  என்று கேட்டார், பாரதியும் புரிந்தது என்றார். மொத்தம் அவ்வளவுதான் உபதேசம்.

நமக்கு ஏதாவது புரிகிறதா.

தலை சுற்றுகிறது அல்லவா ?

பாரதி இந்த மூன்றின் விளக்கம் தருகிறார்.

நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாத விளக்கம்.

பாரதியின் அறிவின் வீச்சை நாம் அறிந்து கொள்ள உதவும் பாடல்.

எவ்வளவு பெரியவர்கள் இருந்திருக்கிறார்கள் இந்த மண்ணில்.

நாம் வாழும் காலத்திற்கு மிக அருகில் இருந்திருக்கிறார்கள்.

அவர்களின் பெருமை அறியாமல் இருக்கிறோம்.

பாரதியின் விளக்கத்தை அடுத்த ப்ளாகில் பார்ப்போம்.


No comments:

Post a Comment