Friday, May 1, 2015

திருவெம்பாவை - சித்தம் அழகியோர் பாடாரோ நம் சிவனை - பாகம் 2

திருவெம்பாவை - சித்தம் அழகியோர் பாடாரோ நம் சிவனை - பாகம் 2


அவள் ஒரு அழகான இளம் பெண். அவளுடைய தோழிகளோடு பேசிக் கொண்டிருக்கிறாள்.

"டீ , நாளைக்கு காலைல நாம எல்லாம் கோவிலுக்குப் போவோமா "

தோழிகள்: அம்மாடி, நம்மால முடியாதுடி...மார்கழி குளிரு...எலும்பு வர எட்டி பாஞ்சு கடிக்கும்...நம்மால எழுந்திருக்க முடியாதுடி ..நீ வேண்ணா போயிட்டு வா தாயி...

அவள்: சரி, உங்களுக்கு என்ன பிரச்சனை...காலைல எழுந்திருக்கிறது தான...கவலைய விடுங்கடி...நான் வந்து உங்க எல்லாரையும் எழுப்புறேன்...போதுமா

என்று சொன்னவள் தூங்கிப் போனாள் ....அவளுடைய தோழிகள் எல்லோரும் அவள் வீட்டு வாசலில் வந்து நிற்கிறார்கள் அவளை எழுப்ப.

தோழிகள்: எங்கள வந்து எழுப்புறேன்னு சொல்லிட்டு, இங்க நல்லா தூங்குறதப் பாரு....எந்திரிடி

அவள்: சரிடி...ஏதோ தூங்கிட்டேன்...ரொம்பத்தான் ரேக்குரீங்களே ...கோவிச்சுகாதடி ...இதோ இப்போ வந்துர்றேன் என்று  குளியல் அறை நோக்கி ஓடினாள் ...

தோழிகள்: ஆமண்டி...உன் பேச்ச கேட்டு வந்தோம் பாரு...எங்களுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.....


பாடல்

`முத்து அன்ன வெள் நகையாய்! முன் வந்து, எதிர் எழுந்து, "என்
அத்தன், ஆனந்தன், அமுதன்" என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய், வந்து உன் கடை திறவாய்'.
`பத்து உடையீர்! ஈசன் பழ அடியீர்! பாங்கு உடையீர்!
புத்து அடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால், பொல்லாதோ?'
`எத்தோ நின் அன்புடைமை? எல்லோம் அறியோமோ?'
`சித்தம் அழகியார் பாடாரோ, நம் சிவனை?'
`இத்தனையும் வேண்டும் எமக்கு' ஏல் ஓர் எம்பாவாய்!பொருள்

`முத்து அன்ன = முத்தைப் போன்ற

வெள் = வெண்மையான

நகையாய்! = புன்முறுவலைக் கொண்டவளே

முன் வந்து, = எங்கள் முன்னாள் வந்து

எதிர் எழுந்து, = எங்களுக்கு முன்னால் எழுந்து

"என் அத்தன் = என் தந்தை

ஆனந்தன் = என்  ஆனந்தம் ஆனவன்

அமுதன் = எனக்கு அமுதம் போன்றவன்

என்று = என்று

அள்ளூறித் = வாயில் எச்சில் ஊறி

தித்திக்கப் பேசுவாய் = இனிக்க இனிக்கப் பேசுவாய்

வந்து உன் கடை திறவாய் = வந்து உன் வாசல் கதவை திற

`பத்து உடையீர்! = இறைவன் மேல் பற்று உடையீர்

ஈசன் பழ அடியீர்! = ஈசனுக்கு ரொம்ப நாளாகவே அடியவர்களாக இருப்பவர்களே

பாங்கு உடையீர்! = நல்ல குணம் நலம் உள்ளவர்களே

புத்து அடியோம் = நான் புதிதாக வந்த அடியவள்

புன்மை தீர்த்து = என்னுடைய குறைகளை பொறுத்து

ஆட்கொண்டால், பொல்லாதோ? = என்னையும்  உங்களோடு சேர்த்துக் கொண்டால் பொல்லாதோ

`எத்தோ நின் அன்புடைமை? = "ஆஹா !, என்ன  உன்னுடைய அன்பு"

எல்லோம் அறியோமோ?' = எங்களுக்கு எல்லாம் தெரியும்டி

`சித்தம் அழகியார் , = நல்ல சிந்தனை உள்ளவர்கள்

 பாடாரோ நம் சிவனை?' = நம் சிவனைப் பாடுவார்கள்

`இத்தனையும் வேண்டும் = இத்தனயும் வேண்டும்

எமக்கு' ஏல் ஓர் எம்பாவாய்! = எங்களுக்கு, என் பாவையே

மிக மிக இனிய பாடல்.

இதன் ஆழ்ந்த அர்த்தங்களை மேலும் சிந்திப்போம்.
================ பாகம் 2 ================================================

உலகில் எது வேண்டுமானாலும் நடக்கும், ஆனால் ஒரு பெண் இன்னொரு பெண்ணை அழகானவள்  என்று சொல்லுவது மட்டும் நடக்கவே நடக்காது. 

இங்கு, தோழியர்கள் "முத்தைப் போன்ற வெண்மையான புன்னகை உள்ள பெண்ணே"  என்று கூறுகிறார்கள். இது நடக்கவே நடக்க முடியாத ஒன்று. 

அதற்கு ஒரு காரணமும் பின்னால் சொல்கிறார் மணிவாசகர்....

"சித்தம் அழகியோர்" சித்தம் அழகானால் பொறாமை போகும், மற்றவர்களை மனம் நிறைய புகழ முடியும். 

உடல் மட்டும் அழகாக இருந்தால் போதாது சித்தமும் அழகாக இருக்க வேண்டும். 

உடல் அழகாக இருக்க என்னனமோ செய்கிறோம். உணவுக் கட்டுப்பாடு, உடற் பயிற்சி, நல்ல உடைகள், வண்ணச் சாயங்கள், முடி திருத்துதல், என்று ஆயிரம் செய்கிறோம். 

என்றாவது நம் சித்தம் அழகாக இருக்கிறதா என்று சிந்தித்துப் பார்த்து இருக்கிறோமா ?

அதை எப்படி அழகு படுத்துவது ?

சித்தம் கோணல் மாணலாக இருக்கிறது. அதை சரி செய்ய முயல வேண்டும்...உயர்ந்த கருத்துகளை படிக்க வேண்டும், நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டும்.  கண்ணாடி முன் நின்று உடலை அழகு படுத்துவது போல  கேள்வி  கேட்டு, சிந்தனை செய்து மனதையும் அழகு படுத்த வேண்டும். 

பொறாமை, கோபம், காமம், களவு, சோம்பேறித்தனம், அறியாமை  என்று ஆயிரம் அழுக்குகள் நம் சித்தத்தின் மேல் படிந்து கிடக்கிறது.  அவற்றை எல்லாம் விலக்கி , சித்தத்தை அழகு படுத்த வேண்டும். 


அத்தன், ஆனந்தன், அமுதன்" என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய்,

பேச்சு தித்திக்க வேண்டும். நம் பேச்சு மற்றவர்களுக்கு இனிமை தருகிறதா என்று  சிந்திக்க வேண்டும். சிலர் பேசினால் கசக்கும், உரைக்கும், கரிக்கும்....அப்படி இருக்கக் கூடாது....பேச்சு தித்திக்க வேண்டும்.

இந்தப் பெண்ணின் பேச்சு தித்ததாம்...ஏன் ? அத்தன், ஆனந்தன், அமுதன் என்று இறைவனின்  பெருமைகளை கூறி கூறி அவள் பேச்சு தித்திப்பாக இருந்தது.

எதைப் பேசினாலும் தித்திப்பாக பேசி பழகுங்கள்.

சித்தம் அழகானால், அதில் இருந்து வெளிப்படும் பேச்சும் தித்திப்பாக இருக்கும்.


சித்தம் அழகாகும் போது சிரிப்பும் அழகாகும். முத்தைப் போன்ற சிரிப்பு பிறக்கும்.  

முத்தில் அப்படி என்ன சிறப்பு ? பட்டை தீட்டாமலேயே ஒளி விடுவது முத்து. இயற்கையாகவே  அதற்கு ஒளி உண்டு. 

சித்தம் அழகாகும் போது முகம் மலர்ந்து சிரிப்பும் அழாக மாறும். 

பேச்சு அழகாக மாறும். 

இன்று முதல் சித்தத்தை அழகு செய்யத் தொடங்குங்கள். 

மன மாசுகளை அகற்றுங்கள். 

சித்தம் அழகியோர் பாடாரோ நம் சிவனை 

சித்தம் அழகானால் இறைவன் வெளிப் படுவான்...இறை உணர்வு தானே தோன்றும். 

பாடினால் ஒரு வேளை சித்தம் அழகாகுமோ ?No comments:

Post a Comment