Tuesday, July 7, 2015

திருக்குறள் - தீயவையும் நிழலும்

திருக்குறள் - தீயவையும் நிழலும் 


கெடுதல் செய்பவன், அயோக்கியத்தனம் செய்வபன், பொய், புரட்டு, பித்தலாட்டம் செய்பவன் எல்லாம் நல்லா இருக்கான்.

நீதிக்கும், நேர்மைக்கும் பயந்து ஒழுக்கமாக வாழ்பவன் துன்பப்படுகிறான். அவனுக்குத்தான் ஆயிரம் சோதனைகள் வருகின்றன.

பேசாமல், நாமும் கெட்ட வழியில் போகலாமா என்று நல்லவனும் சிந்திக்கத் தலைப் படுகிறான்.

இந்த சிக்கல், இன்று நேற்று அல்ல, வள்ளுவர் காலம் தொட்டே இருந்திருக்கிறது.

வள்ளுவர் சொல்கிறார், தீமை செய்பவன் கெட்டுப் போவான் என்பது எவ்வளவு உறுதியானது என்றால் எப்படி நிழல் ஒருவனை விட்டு விலகாதோ அது போல உறுதியானது.

பாடல்

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்து அற்று

பொருள் 

தீயவை = தீமையானவைகளை

செய்தார் = செய்தவர்கள்

கெடுதல் = அழிதல்

நிழல் தன்னை = நிழலானது

வீயாது = விடாமல் , அழியாமல்

அடி உறைந்து அற்று = காலைப் பற்றிக் கொண்டு வருவது போன்றது

சரி, அது என்ன நிழல் உவமை ?

நிழலை நாம் உருவாக்குவது இல்லை. அதுவே உண்டாகிறது.

தீயவை செய்தவனின் அழிவு தானே வரும். யாரும் ஒன்றும் செய்ய வேண்டாம்.

இராவணனை அழிக்கவா இராமன் கானகம் போனான் ? தன் மகனுக்கு முடி சூட்ட வேண்டும் என்று சின்னம்மா நினைத்து செய்த சதி, அவன் கானகம் போனான். எங்கேயோ இருந்த இராவணன், சீதையை தூக்கிக் கொண்டு போக, இராமன்  கையால் அழிந்தான்.  இராவணனை அழித்தது எது ? அவன் செய்த  தீவினை.

தீங்கு இழை இராவணன்
     செய்த தீமைதான்
ஆங்கு ஒரு நரையது
     ஆய் அணுகிற்றாம் என,
பாங்கில் வந்திடு நரை
     படிமக் கண்ணடி
ஆங்கு அதில் கண்டனன் -

     அவனி காவலன்.

தசரதனுக்கு, கன்ன ஓரத்தில் ஒரு நரை முடி வந்தது. அதன் காரணம், இராவணன் செய்த தீவினை என்கிறார் கம்பர்.  அவன் செய்த தீவினை, தசரதனுக்கு  ஒரு நரைமுடியாக வந்தது.

இரணியனைக் கொல்ல நரசிம்மம் தூணுக்குள் ஒளிந்து இருக்கவில்லை. இங்கே இருக்கிறதா, இங்கே இருக்கிறதா என்று தேடித்  தேடி போய் , தூணை பிளந்து அழிவைக் தேடிக் கொண்டான் இரணியன்.

அது மட்டுமல்ல, 

இரவில் நிழல் இருக்காது. தவறு செய்யும் போது, பாவத்தின் வீரியம் தெரியாது. 

விடியும் போது நிழலின் நீளம்  தெரியும். 

முதலில் மிக நீளமாக இருக்கும். சூரியன் மேலே ஏற ஏற, நிழலின் நீளம் குறையும்.  தீமை செய்பவன் நினைப்பான், இத்தனை செய்தோம், யாரும் கண்டு பிடிக்கவில்லை,  இனிமேலா கண்டு பிடிக்கப் போகிறார்கள் என்று.  மாலை வரும்போது  நிழல் நீளும். பாவத்தின் வீரியம் கூடும். 

அது மட்டும் அல்ல, 

நிழல் நம்மை விட்டு ஒரு வினாடி கூட பிரிந்து இருக்காது. எப்போதும் நம்மை தொட்டுக் கொண்டே  தொடரும். எங்கு போனாலும் விடாது. காவி உடுத்து துறவறம் செல்லலாம், நாடு நாடு விட்டு நாடு போகலாம், நம் நிழல் நம்மை விடாது. 


சிந்தித்துப் பார்ப்போம்.



2 comments:

  1. நீதி, நேர்மை என்று பிரித்தறிந்து புரிந்துகொளபவர்களுக்கு தாங்கள் கூறுவது சரிதான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அற விதிகள் மாறிவருகிறது. லஞ்சம் கொடுப்பதோ வாங்குவதோ தவறு கிடையாது என்று உண்மையில் நம்புபவர்களும் இருக்கிறார்கள். நீதிபதிகளே அப்படி நம்புகிறார்கள். இங்கு நிழலே இல்லை. அப்புறம் எப்படி துரத்துவது?

    ReplyDelete
  2. A good conscience is a soft pillow

    ReplyDelete