Monday, August 3, 2015

கம்ப இராமாயணம் - மகனின் பிரிவு

கம்ப இராமாயணம் - மகனின் பிரிவு 


பிரிவு என்றுமே சோகத்தைத்தான் தருகிறது.

பிரிவு வரும் என்று தெரிந்தாலும், அது வரும்போது மனதை ஏனோ பிசையத்தான் செய்கிறது.

இராமனை தருவாய் என்று தசரதனிடம் கேட்கிறான் விஸ்வாமித்திரன்.

துடித்துப் போகிறான் தசரதன். அவன் வலியை கம்பன் பாட்டில் வடிக்கிறான்.

மார்பில் வேல் பாய்ந்து புண்ணாகி இருக்கிறது. அந்த புண்ணில் தீயை வைத்து சுட்டால் எப்படி இருக்குமோ அப்படி துன்பப் பட்டான் தசரதன்.

விச்வாமித்ரனின் அந்த சொல்லைக் கேட்டு தசரதனின் உயிர் அவன் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் போவதும் வருவதுமாக இருக்கிறது. உயிர் ஊசலாடியது.

கண் இல்லாதவன் , கண்ணைப் பெற்று பின் அதை இழந்தால் எப்படி இருக்குமோ அது போல பிள்ளை இல்லாமல் பின் இராமனைப் பெற்று இப்போது அவனை இழப்பது அப்படி இருந்தது தசரதனுக்கு.


பாடல்

எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல்
   மருமத்தின் எறி வேல் பாய்ந்த
புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தா
   லெனச் செவியில் புகுதலோடும்.
உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த.
   ஆர் உயிர் நின்று ஊசலாட.
‘கண் இலான் பெற்று இழந்தான்’ என உழந்தான்
   கடுந் துயரம் - கால வேலான்.


பொருள்

எண் இலா  = எண்ணிக்கை இல்லாத

அருந் தவத்தோன் = அரிய தவங்களைச் செய்த (விஸ்வாமித்திரன்)

இயம்பிய சொல் = "இராமனைத் தா"என்று சொல்லிய சொல்

மருமத்தின் = மார்பில்

எறி வேல் பாய்ந்த புண்ணில் ஆம் = எறிந்த வேல் பாய்ந்த புண்ணில்

பெரும் புழையில் = பெரிய துவாரத்தில்

கனல் நுழைந்தாலெனச் = தீயை வைத்து சுட்டதைப் போல


செவியில் புகுதலோடும். = காதில் நுழைந்தது. அது மட்டும் அல்ல

உள் நிலாவிய துயரம் = உள்ளத்தில் இருந்த துயரம்

பிடித்து உந்த.= பிடித்துத் தள்ள

ஆர் உயிர் நின்று ஊசலாட = அருமையான உயிர் நின்று ஊசலாட
.
‘கண் இலான் பெற்று இழந்தான்’ என உழந்தான் = கண் இல்லாதவன் , அதைப் பெற்று பின் இழந்தவனைப் போல துன்பப்பட்டான்

கடுந் துயரம் = கடுமையான துயரத்தில்

கால வேலான். = எதிரிகளுக்கு காலனைப் போல உள்ள அவன்.

மகனை , முனிவரோடு அனுப்ப இப்படி கிடந்து சங்கடப் படுகிறானே இவன் ஒரு  கோழையோ என்று தோன்றலாம். இல்லை, அவன் மிகப் பெரிய வீரன் என்று  கட்டுகிறான் கம்பன். எதிரிகளுக்கு காலனைப் போன்றவன் அவன்.

என்றோ ஒரு நாள் இராமன் தன்னை விட்டுப் போகப் போகிறான் என்று தசரந்தனுகுத் தெரியும் . சிரவணன் என்ற அந்தணச் சிறுவனை அறியாமல் கொன்று, அதன் மூலம் சிரவணனின் பெற்றோர் தசரதனுக்கு ஒரு சாபம் இட்டார்கள்   " நாங்கள் எப்படி புத்திர சோகத்தில் இறக்கிறோமோ , நீயும் அப்படியே இறப்பாய் " என்று சாபம் இட்டு விடுகிறார்கள்.

அந்த சோகம் தசரதனின் உள்ளத்தில் நின்று உலாவியது.



1 comment:

  1. "கண் இலான் பெற்று இழந்தான்" என்பது சிறப்பான வரி. கண் பார்வை இல்லாத ஒருவர், பார்வையைப் பெற்றபின் இழந்தால், தான் என்ன இழந்தோம் என்பதை இன்னும் ஆழமாக உணர்ந்து வருந்துவார். கண்ணே இல்லாமல் இருந்துவிடுவதை விட அது இன்னும் சோகம்.

    அதேபோலே, தசரதன் பிள்ளை இல்லாமல் இருந்து, வேள்விகள் செய்து பிள்ளையைப் பெற்றான்; பின் அந்தப் பிள்ளையை இழக்கப் போகிறான். அவனுக்குப் பிள்ளை இன்பம் தெரிந்தபின் இழப்பது, பிள்ளையே இல்லாமல் இருந்து விடுவதைவிட சோகம்.

    என்ன அருமையான பாடல். நான்கு வரிகளில் மூன்று விஷயங்கள்!

    நன்றி.

    ReplyDelete