Monday, October 26, 2015

திருக்குறள் - பெய் எனப் பெய்யும் மழை

திருக்குறள் - பெய் எனப் பெய்யும் மழை 


எல்லோருக்கும் தெரிந்த குறள் தான். தெய்வத்தை தொழாமல், கணவனை தொழுது எழுவாள். அவள் பெய் என்றால் மழை பெய்யும்.

குறள்

தெய்வம் தொழாஅள், கொழுநன்-தொழுது எழுவாள்,
‘பெய்’ என, பெய்யும் மழை.

பொருள்

தெய்வம்= தெய்வத்தை

தொழாஅள் = தொழ மாட்டாள்

கொழுநன் = கணவனை

தொழுது எழுவாள் = தொழுது எழுவாள்

‘பெய்’ என, பெய்யும் மழை.= அவள் பெய் என்றால் மழை பெய்யும்

அஹா, இந்த வள்ளுவர் பெரிய ஆணாதிக்க வர்கத்தை சேர்ந்தவராக இருப்பார் போல் இருக்கிறதே.

மனைவி எதற்காக கணவனை தொழ வேண்டும் ? ஏன் கணவன் மனைவியை தொழக் கூடாது ?

பெண் அடிமை தனத்திற்கு வக்காலத்து வாங்குவது போல் இருக்கிறதே இந்தக் குறள் என்று கொடி பிடிப்பதற்கு முன்னால் சற்று ஆழ்ந்து யோசிப்போம்.


இது யாருக்குச் சொல்லப் பட்ட குறள் ?

பெண்ணுக்கா ? கணவனை தொழுது எழு என்று பெண்ணுக்கு சொல்லவா இந்த குறள் முனைகிறது ?

இல்லை, இது கணவனுக்குச் சொல்லப் பட்ட குறள் .

உன் மனைவி உன்னை தெய்வமாக நினைத்து தொழ வேண்டும் என்றால், நீ தெய்வம் போல நடந்து கொள் என்று கணவனுக்குச் சொல்லப் பட்ட குறள் .

தெய்வம் என்ன செய்யும் ?

படைத்து, காத்து, அழிக்கும் முத்தொழிலையும் செய்யும்.

மனைவிக்கு வேண்டியதை கொடுத்து, அவளை காப்பாற்றி, அவளுக்கு எதிரான எல்லாவற்றையும்  அழிக்கும் கணவன் , அந்த பெண்ணுக்கு தெய்வம் தான்.

அப்படி ஒரு கணவன் வாய்த்தால் , எந்த பெண்ணும் அவனை தொழத் தயங்க மாட்டாள்.

நிஜமாவே இந்த குறளுக்கு இதுதான் அர்த்தமா ?

வள்ளுவர் கணவன் என்ற சொல்லைப் போடவில்லை. கொழுநன் என்ற சொல்லை உபயோகப் படுத்துகிறார்.

கொழு கொம்பு, கொடியை தாங்குவதைப் போல கணவன் மனைவியை தாங்க வேண்டும் என்ற கருத்து வரும்படி கொழுநன் என்ற சொல்லை இங்கே போடுகிறார் வள்ளுவர்.

அது தொழுது எழுவாள் ? எழுந்த பின் தானே தொழ முடியும் ? தொழத பின் எழுந்தாள் என்றால் படுத்துக் கொண்டே தொழுவதா ?

அதாவது, கணவனுக்கு அருகில் மனைவி படுத்திருக்கிறாள்.

விழிப்பு வந்து விட்டது. எழுந்திருக்கவில்லை. கணவனை பார்க்கிறாள். அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறான். நாள் எல்லாம் உழைத்த அசதி.

நமக்காகத்தானே இத்தனை பாடு படுகிறான், பாவம்,  என்று அவள் மனதில் ஒரு  அன்பு பிறக்கிறது அவன் மேல். அவளை அறியாமலேயே அவள் கைகள் அவனை  வணங்குகின்றன. இது நீ பெரியவன், நான் தாழ்தவள் என்பதால் வந்தது அல்ல.

எனக்காக நீ எவ்வளவு கஷ்டப் படுகிறாய் என்ற நன்றி உணர்வில் வந்த தொழுதல்.


அதெல்லாம் போகட்டும், கடவுளை தொழ மாட்டாள் என்று எதுக்குச் சொல்லணும்  ?

கணவன் அருகில் படுத்து இருக்கிறான். கணவனும் எழவில்லை. அவளும் இன்னும் எழுந்து நீராடி தூய்மையாக வில்லை. எனவே தெய்வத்தை தொழ முடியாது. கணவன் அருகில் தானே இருக்கிறான் ...அவனை தொழுகிறாள்.


அவ்வளவு அன்யோன்யம் அவர்களுக்குள்ளே.

சரி, அது போகட்டும், அது என்ன பெய் எனப் பெய்யும் மழை ? ஊருக்குள் போய் எந்தப்  பெண்ணிடமாவது மழை பெய்ய சொல்லி பாருங்கள். எந்த பெண் சொன்னாலும் மழை  பெய்யாது. அப்படி என்றால் வள்ளுவர் அப்படி ஒரு உதாரணத்தை ஏன் போட்டார் ?

மழை பெய்தும் கெடுக்கும், காய்ந்தும் கெடுக்கும். வேண்டிய நேரத்தில் பெய்யாது. வேண்டாத நேரத்தில் பெய்து துன்பத்தை கொடுக்கும்.

நமக்கு எப்போது வேண்டுமோ அப்போது மழை பெய்தால் அது எவ்வளவு இனிமையாக இருக்கும் ?

அந்த அளவு இனிமையானவள் பெண் - பெய் என்றால் பெய்யும் மழை எவ்வளவு இனிமையோ  அது போன்றவள் பெண்.

இப்போது சொல்லுங்கள், வள்ளுவர் ஆணாதிக்க சிந்தனை கொண்டவரா ?

ஒவ்வொரு வார்த்தையையும் தேர்ந்து எடுத்து குறளை வடித்து இருக்கிறார்.








3 comments:

  1. எனக்குத் தெரிந்தவரை நாள் முழுவதும் தொடர்ந்து வேலை செய்வது பெண்கள்தான். அந்தக் காலத்தில் வீட்டு வேலைகள் மட்டும் செய்தால் போதுமானது. இன்றோ அலுவலகத்திலும் வேலை மற்றும் வீட்டிலும் வேலை. இதில் நமக்குத்தானே இத்தனை பாடுபடுகிறான் என்று நினைப்பதாக இருப்பது சரியா?

    ReplyDelete
  2. நல்ல சிந்தனை தான். எவ்வளவு தான் பெண் உழைத்தாலும், அந்தப் பெண்ணை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆணுக்கு உண்டு. அவளின் உயிரை, மானத்தை காக்கும் பெரும் பொறுப்பு அவனுக்கு இருக்கிறது. அதுவும் கூட ஒரு நாள் மாறலாம். யார் அறிவார். அதுவரை, இந்த உரை செல்லும். அதற்குப் பின்....பாப்போம்....:)

    ReplyDelete
  3. ஆண் உழைக்கிரானா, பெண் உழைக்கிராளா என்ற வாதம் ஒரு புறம் இருக்கட்டும். முதல் முறையாக "பெய் எனப் பெய்யும் மழை" என்பதற்கு ஒரு புதுப் பொருள் கண்டேன். பெண்தான் மழை என்ற பொருள் நன்றாக இருக்கிறது. நன்றி.

    ReplyDelete