Wednesday, November 18, 2015

இராமாயணம் - அறம் கடந்தவர் செயல் இது

இராமாயணம் - அறம் கடந்தவர் செயல் இது


எவ்வளவோ தவறு செய்பவர்கள் எல்லாம் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.  பணம், செல்வாக்கு, அரசியல் அதிகாரம் , புகழ் என்று திருப்தியாகத்தான் இருக்கிறார்கள். நல்ல வழியில் செல்பவர்கள் துன்பப் பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதை எல்லாம் பார்க்கும் போது , நல்ல வழியில் செல்ல வேண்டும் என்று யாருக்கு நாட்டம் வரும்?  பேசாமல் நாமும் அல்லாத வழியில் சென்று நாலு காசு பார்த்தால் என்ன என்றுதான் நல்லவர்கள் மனத்திலும் தோன்றும்.

இராவணனைப் போல் அதிகாரமும், செல்வாக்கும், புகழும், வீரமும் , செல்வமும் கொண்டவர் யார் ?

இராவணன் காலத்தில் வாழ்ந்தவர்கள், இராவணனைப் பற்றி என்ன நினைத்திருப்பார்கள் ? இவனுக்கு அழிவே இல்லை. இவனை யார் எதிர்க்க முடியும் என்றுதான் நினைத்து இருப்பார்கள்.

ஒரே ஒரு தவறு செய்தான்.

மாற்றான் மனைவியை அபகரித்தான்.

அந்த ஒரு அறம் பிறழ்ந்த செய்கை அவனை எங்கு கொண்டு நிறுத்தியது தெரியுமா ?

இராவணனின் முதல் நாள் போர். அனைத்து ஆயுதங்களையும் இழந்து தனியாக நிற்கிறான். யுத்தத்தில் தோல்வி என்றால் என்ன என்று முதல் முதலில் அறிகிறான்.

அப்படி நிற்கும் இராவணனின் நிலையை கம்பன் படம் பிடிக்கிறான்.

தனிமையில் நிற்கிறான் இராவணன். ஆயுதம் எல்லாம் இழந்து, இருபது கைகளும் ஆல மரத்தின் விழுதுகள் போல தொங்குகின்றன. வெட்கத்தில் தலை குனிந்து நிற்கிறான். காலினால் தரையை கீறிக் கொண்டு நிற்கிறான். அறம் பிறழ்ந்து நடப்பவர்கள் கதி எல்லாம் இப்படிதான் ஆகும் என்று உலகே அவனைக் கண்டு நகைத்ததாம்.

பாடல்

'அறம் கடந்தவர் செயல் இது' என்று, உலகு எலாம் ஆர்ப்ப,
நிறம் கரிந்திட, நிலம் விரல் கிளைத்திட, நின்றான்--
இறங்கு கண்ணினன், எல் அழி முகத்தினன், தலையன்,
வெறுங் கை நாற்றினன், விழுதுடை ஆல் அன்ன மெய்யன்.

பொருள்

'அறம் கடந்தவர் செயல் இது' என்று, = அறத்தை மீறியவர்களின் நிலை இது என்று

உலகு எலாம் ஆர்ப்ப, = அனைத்து உலகும் ஆரவாரிக்க . நல்லா வேணும். நல்லா வேணும் என்று உலகம் சந்தோஷத்தில் குதிக்க.

நிறம் கரிந்திட = முகம் கருத்து

நிலம் விரல் கிளைத்திட = கால் விரல் நிலத்தை கிண்ட

நின்றான் = நின்றான்

இறங்கு கண்ணினன் = கண் தரையைப் பார்க்க, தலை கவிழ்ந்து

எல் அழி முகத்தினன் தலையன் = எழில் அழிந்த முகத்தோடு

 ,
வெறுங் கை நாற்றினன் = வெறும் கையுடன்

விழுதுடை ஆல் அன்ன மெய்யன் = விழுதுகள் போல கைகள் தொங்கும் உடலைக் கொண்டவன் ஆனான்.

இராவணின் கதி இது.

இராமாயணம் படிப்பது கதைக்கோ, கவி நயத்துக்கோ அல்ல. வாழ்கையை செம்மையாக  வாழ.




 

No comments:

Post a Comment