Saturday, January 23, 2016

பிரபந்தம் - பந்தனை தீர பல்லாண்டு பாடுதமே

பிரபந்தம் - பந்தனை தீர பல்லாண்டு பாடுதமே 


எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே

ஒரு நாள் கொஞ்சம் அதிகமா வேலை செய்து விட்டால் உடம்பு அசந்து போகிறது. ஒரு நாள் கொஞ்சம் அதிகம் வெயிலில் நடந்து விட்டால் தலை வலி வந்து விடுகிறது. எங்காவது வரிசையில் கொஞ்ச நேரம் அதிகம் நின்று விட்டால் கால் வலிக்கிறது.

பெருமாள் எத்தனை காலம் அவன் பக்தர்களுக்காக எவ்வளவு வேலை செய்கிறான். அவனுக்கு அசதி வராதா ?

அதைப் பற்றி யோசிக்காமல் , பெருமாளே எனக்கு இதைச் செய்து கொடு, அதைச் செய்து கொடு என்று கேட்டுக் கொண்டே இருக்கிறோம். எப்போதாவது அவனுக்கு கொஞ்சம் ஓய்வு தரவேண்டும் என்று நமக்குத் தோன்றியது உண்டா ? 

பெருமாளுக்கு அசதி வருமோ வராதோ தெரியாது. ஆனால் வருமே என்று நினைத்து பெரியாழ்வார் உருகுகிறார். அவன் உடல் அசதி தீர்ந்து அவன் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பல்லாண்டு பாடுகிறார். 

அது, அவரின் பக்தியின் உச்சம்.

"பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே"

பந்தம் என்றால் கட்டுதல், பிணைத்தல். இங்கே கட்டப் பட்டதால் வரும் வலி அல்லது  அசதி என்று கொள்வது சரியாக இருக்கும்.

எங்கே கட்டப்பட்டு கிடந்தான் ?


"அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை"

அந்தி நேரத்தில் சிங்க உருவாகி அரக்கனை அழித்தவனை

அவன் பக்தனான பிரகலாதனுக்காக தூணுக்குள் அடங்கி இருந்தான். இரணியன் தூணைப் பிளந்தவுடன் அதில் இருந்து வெளிப் பட்டு அவனைக் கொன்றான்.

பக்தனுக்காக கல் தூணுக்குள் அடைந்து கிடந்தான். 

கல்லுக்குள் அடைந்து கிடந்தால் உடம்பு வலிகுமா இல்லையா ?

பெருமாள் எவ்வளவு பெரிய ஆள் என்று நினைத்து வியந்திருக்கிறோமே தவிர கல் தூணுக்குள் அடைந்து கிடந்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தோமா ?

அடுத்த முறை நரசிங்க பெருமாளை பார்க்கும் போது , பாவம் நமக்காக எவ்வளவு எல்லாம்  கஷ்டப் பட்டு இருக்கிறார் என்று ஒரு நிமிடம் யோசியுங்கள். 

இந்த பக்தி , எந்த பேரன்பு, பெரியாழ்வாருக்கு மட்டும் எப்படி சாத்தியமாயிற்று ?

அவரே சொல்கிறார்.

இது இன்று நேற்று வந்தது அல்ல. "என் தந்தை, அவரின் தந்தை என்று போய்க் கொண்டே இருந்தால் எல்லோருக்கும் முதலாக ஒரு தந்தை இருப்பானே அவனில் இருந்து  தொடங்கி இன்று வரை அவனுக்காக நாங்கள் பக்தி செய்கிறோம் " என்கிறார். 

பெரியாழ்வார் என்ன சொல்கிறார் என்றால்...உங்கள் முன்னோர்கள் செய்த  புண்ணியம்  நீங்கள் இன்று அவன் மேல் பக்தி செய்யும் நிலை அடைந்து இருக்கிறீர்கள். அந்தத் தொடர்பை துண்டித்து விடாதீர்கள். அந்த பாரம்பரியத்தை  தொடர்ந்து கொண்டு செல்லுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப் பிள்ளைகளுக்கும் சொல்லித் தாருங்கள். 

அவர்களுக்கு பிரபந்தத்தையும், கீதையையும், இராமாயணத்தையும் சொல்லித் தாருங்கள். 

அது உங்கள் கடமை. உங்கள் முன்னோர்கள் , உங்கள் வரை இதை கொண்டு வந்து சேர்த்து  விட்டார்கள். இதை மேலே கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கு  இருக்கிறது. 

பாடல் 

எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே

பொருள் 

எந்தை = என் தந்தை

தந்தை தந்தை = தந்தையின் தந்தை

தம் மூத்தப்பன் = இவர்களின் மூத்த தந்தை

ஏழ்படி கால்தொடங்கி = எழேழு தலை முறையாக

வந்து வழி வழி ஆட் செய்கின்றோம் = வழி வழியாக அவனுக்கு ஆட்பட்டு தொண்டு செய்கிறோம்

திரு வோணத் திருவிழவில் = திருவோணத் திருவிழாவில்

அந்தியம் போதில் = அந்தி நேரத்தில்

அரியுரு வாகி = சிம்ம உருவாகி

அரியை யழித்தவனை = அரக்கனை (இரணியனை) அழித்தவனை

பந்தனை தீரப் = அனுக்கம் , உடல் அசதி தீர 

பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு என்று பாடுதுமே = பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு என்று  பாடுவோமே


3 comments:

  1. அசதி தீர என்பது இனிமையான கற்பனை! நன்றி.

    ReplyDelete
  2. ஏழேழு தலைமுறையாக பக்தர்களாகிய நம்மைக் காக்கும் பொறுப்பை ஓயாது மேற்கொண்டு வருவதால் ஏற்படும் அசதி தீரட்டும். பல்லாயிரம் ஆண்டுகள் அவன் புகழ் ஓங்கி இருக்க .. இன்னும் "எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே ஆவோம் உமக்கே நாம் ஆட்செய்வோம்" என்ற நமது சபதத்தின் பொருட்டு அவனது அசதி தீர, அவனை வாழ்த்தி பரவுவோமாக !

    ReplyDelete
  3. திருவோணத் திருவிழாவில் அந்தியம்போதில் அரியுருவாகி அரியை அழித்தவன்.....தயவு செய்து விளக்கவும். (நரசிம்மனின் நட்சத்திரம் சுவாதி. ஏனிங்கு ஆழ்வார் திருவோணத்தைப் பார்கிறார்

    ReplyDelete