Thursday, February 11, 2016

நற்றிணை - என்றும் என் தோள் பிரிவது அறியார்

நற்றிணை - என்றும் என் தோள் பிரிவது அறியார்




நின்ற சொல்லரநீடுதோன் றினியர்
என்றும் என்றோள் பிரிபறி யலரே
தாமரைத் தண்டா தூதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந்தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின் றமையா வுலகம் போலத்
தம்மின் றமையா நந்நயந் தருளி
நறுநுதல் பசத்த லஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்பறி யலரே.


தலைவன் உன்னை விட்டு பிரிந்து போகப் போகிறான் என்று தலைவியிடம் தோழி சொல்கிறாள்.

அவர்களுக்குள் இன்னும் திருமணம் ஆகவில்லை. காதல்தான்.

அவனுக்கு, அவள் மேல் உள்ள காதலை விட, அவளுக்கு, அவன் மேல் உள்ள காதல்  அதிகம். அது மட்டும் அல்ல, அவன் தன்னை அளவு கடந்து நேசிக்கிறான்  என்றும் அவள் நினைக்கிறாள். மேலும், அவனைப் பிரிந்து அவளால் இருக்க முடியாது என்பதையும் அவன் அறிவான் என்றும் நினைக்கிறாள்.


இவை எல்லாம் உண்மையா ? தெரியாது.

அவன் தன்னை விட்டுப் பிரிந்து போகப் போகிறான் என்று சொன்னவுடன், தலைவி  உருகுகிறாள்.

அப்படியெல்லாம் இருக்காது.

"அவன் எப்போதும் என் தோள்களை விட்டுப் பிரிய மாட்டான். இந்த உலகுக்கு நீர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு அவன் எனக்கு முக்கியம் என்பதை அவன் அறிவான். அவனை விட்டுப் பிரிந்தால், நான் வாடிப் போய்விடுவேன் என்பது அவனுக்குத் தெரியும். எனவே  அவன் என்னை விட்டுப் பிரிய மாட்டான்"

சீர் பிரித்த பின்

நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர் 
என்றும் என் தோள் பிரிவு அறியலரே 
தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச்
சாந்தின் தொடுத்த தீந் தேன் போலப்
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீரின்ற்றி அமையா உலகம் போலத்
தம் இன்றி அமையா நன்மை நயந்து அருளி 
நறு நுதல் பசத்தல் அஞ்சி 


சிறுமை உறுபவோ செய்வது அறியலரே 

பொருள் 

நின்ற சொல்லர் = நிலைத்த சொல்லை உடையவர். பேச்சு மாறாதவர். ஒன்று சொன்னால், அதில் எப்போதும் நிலையாக நிற்பவர்

நீடு தோன்று இனியர் = எப்போதும் இனிமையானவர். நீடு என்பதற்கு நீண்ட நாட்களாக என்று பொருள் கொள்ளலாம். நீண்ட நாள் இனிமையாக இருப்பவர் என்பதால், இப்போதும் அந்த இனிமை மாறமாட்டார் என்ற பொருள் மறைந்து நிற்கிறது.

என்றும் = எப்போதும்

என் தோள் = என் தோள்களை

பிரிவு அறியலரே = பிரிவு என்ன என்றால் அறியாதவர். பிரிந்தால் அல்லவா , பிரிவு என்ன என்பதை அறிய

தாமரைத் = தாமரை மலரின்

தண் = குளிர்ந்த

தாது = மகரந்தமும்

ஊதி = பறந்து

மீமிசைச் = மேலே சென்று

சாந்தின் தொடுத்த = சந்தன மரத்தில் உள்ள

தீந் தேன் போலப் = சுவையான தேனைப் போல

புரைய மன்ற = புரை என்றால் உயர்ந்த என்று பொருள். புரைய மன்ற என்றால் உயர்ந்தது அன்றோ

புரையோர் கேண்மை = உயர்ந்தவர் நட்பு

நீரின்ற்றி அமையா உலகம் போலத் = தண்ணீர் இல்லாமல் இயங்க முடியாத உலகம் போல. பயிர் வளர்க, உயிர் வளர்க நீர் எவ்வளவு முக்கியமோ அவன் எனக்கு அவ்வளவு முக்கியம். நீர் இல்லாவிட்டால், பயிர் வாடி, வதங்கி கருகி விடும். அது போல, அவன் இன்றி நான் வாடி வதங்கி இறந்து போய் விடுவேன். மழைத் துளி விழுந்தவுடன் செடிகள் சிலிர்த்து புத்துயிர் பெற்று விளங்கும். அது போல, அவன் வந்தால் நான் மலர்ந்து, சிலிர்த்து புதுப் பொலிவுடன் இருப்பேன்.

தம் இன்றி = அவர் இன்றி

அமையா = என்னால் உயிர் வாழ முடியாது

நன்மை நயந்து அருளி = என் மேல் அன்பு வைத்து நன்மையை விரும்பி அருளிச் செய்த

நறு நுதல் = என் நெற்றி

பசத்தல் அஞ்சி = பசலை நிறம் அடைவதை நினைத்து



சிறுமை உறுபவோ = என்னை விட்டுப் பிரியும் அந்த சிறிய செயலை

செய்வது அறியலரே = செய்வது எப்படி என்று அறிய மாட்டார்

தன்னை விட்டு அவன் பிரியப் போகிறான் என்ற கவலையால் இவற்றை சொல்கிறாள்  என்பது பாட்டில் நேரடியாக இல்லை. அது ஊடாடும் சோகம்.

கவிதை என்பது வார்த்தைகளைத் தாண்டி, வரிகளைத் தாண்டி, உள்ளாடும் உணர்வு.

அந்த உணர்வு , இந்தக் கவிதையில் உங்களுக்குப் புரிந்தால், நீங்கள் பாக்கியசாலிகள்.



3 comments:

  1. So fantastic. I feel like talking to that girl and telling her to wake up and gather her strength. I feel she is soon going to face a huge disappointment. I wish she were in front of me, and I would be able to tell her not to leave herself so vulnerable and open to disappointment. I feel so sad for her. Poor girl!

    What a poem! It speaks so much to me from so many centuries ago. It was born in someone's imagination and she's not even a real girl, but I'm feeling so scared for her.

    ReplyDelete
    Replies
    1. நன்கு ரசித்திருக்றீர்கள்! உங்கள் உணர்வு கண்டு யம் மிக்கு மகிழ்ந்தோம்.இவ்வுணர்வைத் தமிழ்வழி உணர்த்தலாமே!?

      Delete
  2. நற்றிணை படிக்க ஆரம்பித்துள்ளேன். இந்த பாடலுக்கு உங்கள் விளக்கம் மிக் எளிமையாக விளக்கமாக உள்ளது. நன்றி நண்பரே

    ReplyDelete