Saturday, March 12, 2016

அபிராமி அந்தாதி - பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே.

அபிராமி அந்தாதி -  பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே.


பாடல்

தைவந்து நின் அடித் தாமரை சூடிய சங்கரற்கு 
கைவந்த தீயும், தலை வந்த ஆறும், கரந்தது எங்கே?-- 
மெய் வந்த நெஞ்சின் அல்லால் ஒருகாலும் விரகர் தங்கள் 
பொய்வந்த நெஞ்சில், புகல் அறியா மடப் பூங் குயிலே.

பொருள்

தைவந்து = மலர்களோடு வந்து (தைத்த மலர்கள் என்று கூறுகிறார்கள்)

நின் = உன்

அடித் தாமரை = திருவடியாகிய தாமரையில்

சூடிய சங்கரற்கு  = தலையை வைத்த சங்கரற்கு

கைவந்த தீயும் = கையில் உள்ள தீயும்

தலை வந்த ஆறும் = தலையில் உள்ள கங்கை ஆறும்

கரந்தது எங்கே? = மறைந்தது எங்கே

மெய் வந்த நெஞ்சின் அல்லால் = உண்மை ஒளி விடும் மனதைத் தவிர

ஒருகாலும் = ஒருபோதும்

விரகர் தங்கள் = தீயவர்கள்

பொய்வந்த நெஞ்சில் = பொய் இருக்கும் மனதில்

புகல் அறியா = செல்லத் தெரியாத

மடப் பூங் குயிலே = பூங்குயிலே

பெரும்பாலான துன்பங்களுக்குக் காரணம் நான் எனது என்ற எண்ணங்களே.

எனக்கு வேண்டும் என்ற ஆசை. என் பொருள், என் மனைவி, என் சொத்து , என் கார் , என் வீடு என்ற பெருமிதம்.

அவை கை விட்டுப் போய் விடுமோ என்ற பயம்.

என்னை விட மற்றவன் அதிகம் வைத்து இருக்கிறானே என்ற பொறாமை, ஆதங்கம்.

என் திறமை மேல் கொண்ட பெருமிதம். அதற்கு ஒரு பங்கம் வரும் போது வரும் அவமானம்.

என்று நமக்கு வரும் அத்தனை துபங்களுக்கும் காரணம் நான், எனது என்ற அகங்காரம், மமகாரங்களே.

இவற்றை எப்படி விடுவது ? இவற்றைத் தாண்டி எப்படி போவது ?

மனிதன் எத்தனையோ வழிகளை தேடிகொண்டிருக்கிறான்.

சிலர் மதுபானம் அருந்தி தன்னை மறக்கிறார்கள்.

சிலர் சினிமா, நாடகம், விளையாட்டு என்று அதில் மூழ்கி தங்களை மறக்கிறார்கள்.

சிலர் படிப்பு, இசை, ஊர் சுற்றுவது என்று தன்னை மறக்கிறார்கள்.

அனைத்து முயற்சிகளும் "நான்" என்ற இந்த அகங்காரத்தை இழந்து, அதன் சிறையில் இருந்து  விடுபடுவதுதான்.

தன்னை மறப்பது பெரிய சுகம்.

எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய் முருகா சுரபுபதியே என்பார் அருணகிரிநாதர்.

சரி அதற்கும் இந்த பாடலுக்கும் என்ன சம்பந்தம் ?

அபிராமியைக் காண சிவன் வருகிறான்.

அவளுடைய பாதங்களில் விழுந்து வணங்குகிறான். அவளுடைய திருவடிகளை   தன் தலையில் சூடிக் கொண்டான்.

அந்த சமயத்தில், அவன் தன்னையே இழக்கிறான்.

அவன் கையில் உள்ள தீயும், தலையில் உள்ள கங்கையும் மறைந்து போய் விட்டது என்கிறார் பட்டர்.

நான் பெரிய ஆள், கங்கையை தலையில் கொண்டவன், தீயைக் கையில் கொண்டவன் என்பவை போய் விட்டது.

அவளில் அவன் கரைந்தான்.

தான் என்ற ஒன்று இல்லாமல் சிவம் சக்தியில் கரைவதுதான் உலகம் முழுதும் நடக்கும் லீலை.

கைலாய காட்சி கண்டபின் நாவுக்கரசர் உலகம் முழுவதும் ஆண் சக்தியும் பெண் சக்தியும் பின்னி பிணைந்து கிடப்பதைக் காண்கிறார். அதைத் தவிர வேறு எதுவும் அவர் கண்ணுக்குப் படவில்லை.

ஆண் யானையும், பெண் யானையும், (மடப் பிடியோடு களிறு) வருவன கண்டேன், கண்டேன் அவர் திருபாதம், கண்டறியாதன கண்டேன் என்று வியக்கிறார்.

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர் சுமந்தேத்திப் புகுவாரவர் பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டேனவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்.

இதில் இன்னும் ஆழமான கருத்து என்ன என்றால்,

இந்த ஆணும் பெண்ணும்  வெளி உருவங்கள் அல்ல.

நாம் ஒவ்வொருவரும் தாய் (பெண்) மற்றும் தந்தையின் (ஆண் ) கலப்பில் தான் உருவாகிறோம்.

நமக்குள் ஆணும், பெண்ணும் சரி விகிதத்தில் இருக்கிறது.

இதை அறிந்த நம்  முன்னவர்கள்,அர்த்த நாரி என்ற வடிவை படைத்துக் காட்டினார்கள். ஒவ்வொருவரும் ஆணும் பெண்ணும் கலந்த கலவை தான் என்று சொல்லும் வடிவம் அது.

நம் சமூகச் சூழ்நிலை ஆணுக்கு சில குணங்கள் என்றும் பெண்ணுக்கு சில குணங்கள் என்று வரையறத்து வைத்து இருக்கின்றது. நாம் அந்த வரையறைக்கு உட்பட்டு  வாழ்கிறோம்.

நாளடைவில், ஒரு ஆணுக்கு, அவனுக்குள் இருக்கும் பெண் குணங்கள் அழுந்திப் போகிறது.

அதே போல் பெண்ணுக்கும், அவளுக்குள் இருக்கும் ஆண் குணங்கள் அழுந்திப் போகிறது.

அழுந்திக் கிடக்கிறதே தவிர , அழிந்து போவது இல்லை.

ஒவ்வொருஆணும், தனக்குள் இருக்கும் பெண்ணை வெளியே தேடுகிறான். பெண்ணும் அப்படியே.

உள்ளுக்குள் இருக்கும் பெண்ணோடு ஒரு ஆண் இணைவதுதான் உண்மையான திருமணம். அப்போது அந்த ஆணோ பெண்ணோ முழுமை அடைகிறார்கள். அது வரை, ஒரு பாதி இன்னொரு பாதியைத் தேடி அலைந்து கொண்டே தான்  இருக்கும்.

தேடுங்கள்,

நீங்கள் ஒரு ஆணாக இருந்தால், உங்களுக்குள் இருக்கும் பெண்ணையும்,
நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், உங்களுக்குள் இருக்கும் ஆணையும் தேடுங்கள்.

அதுதான் உண்மையான கலவி. கலப்பு. கரைதல்.

சிவன் அபிராமியோடு கரைந்தான்.

உங்கள் அபிராமியை ,உங்களுக்குள்ளேயே கண்டு பிடியுங்கள்.

(For other poems - http://interestingtamilpoems.blogspot.in/2016/03/blog-post_12.html )

1 comment: