முத்தொள்ளாயிரம் - பழி ஒரு இடம், பாவம் ஒரு இடம்
ஊரில் விவசாயம் செய்வார்கள். நிலத்தை உழுது, அதில் உளுத்தம் செடியை பயிரிடுவார்கள். அந்த ஊரில் சில ஊர் கன்றுகள் திரியும். யாருக்கும் சொந்தம் இல்லாத கன்றுகள். கோவில் காளை மாதிரி திரிந்து கொண்டு இருக்கும். அந்த ஊர் கன்றுகள் , இரவில் வயலில் நுழைந்து அங்கு வளர்ந்து இருக்கும் உழுதஞ் செடிகளை மேய்ந்து விடும். காலையில் வயலுக்கு வரும் உழவன், பயிர்கள் நாசமானதைக் கண்டு, கோபம் கொண்டு, இந்த கழுதை தான் இந்த வேலையை செய்திருக்க வேண்டும் என்று நினைத்து, அதன் காதை அறுத்து விடுவான்.
தவறு செய்தது என்னவோ ஊர் கன்று. தண்டனை பெற்றது கழுதை.
அது போல,
தலைவி , தலைவனை கண்டு காதல் கொள்கிறாள். அவர்களுக்குள் பிரிவு நிகழ்கிறது. பிரிவினால் அவள் தோள் மெலிகிறது. காதல் கொண்டது கண்கள், மெலிவதோ தோள்கள்.
பாடல்
உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்
கழுதை செவி அரிந்தற்றால் - வழுதியைக்
கண்ட நம் கண்கள் இருப்பப் பெரும் பணைத்தோள்
கொண்டன மன்னோ பசப்பு
பொருள்
உழுத = உழப்பட்ட
உழுத்தஞ்செய் = உளுந்து வளர்ந்த நிலத்தில்
ஊர்க்கன்று மேயக் = ஊரில் உடையவன் இல்லாத கன்று மேய
கழுதை செவி = கழுதையின் காதை
அரிந்தற்றால் = அறுத்தது போல
வழுதியைக் = தலைவனை
கண்ட நம் கண்கள் இருப்பப் = கண்டு காதல் கொண்ட என்னுடைய கண்கள் இருக்க
பெரும் பணைத்தோள் = நீண்ட , பனை மரம் போன்ற தோள்கள்
கொண்டன மன்னோ பசப்பு = பசலை நிறம் படர்ந்தது
சரி, இதில் என்ன பெரிய விஷயம் இருக்கிறது. இந்த கண்கள் காதல் கொள்வதும் , இடை மெலிவதும் , வளை நெகிழ்வதும் எப்போதும் கவிஞர்கள் சொல்லுவதுதானே. இதில் என்ன இருக்கிறது ?
பேரின்பம், சொர்க்கம், கைலாயம், வைகுண்டம், இறைவன் திருவடி நீழல் என்று மனிதன் தேடிக் கொண்டு இருக்கிறான். எங்கெங்கோ தேடுகிறான்.தவம் இருக்கிறான்.
ஒரு வேளை அந்த பேரின்பம் கிடைத்துவிட்டால், இது தான் அவன் தேடிய பேரின்பம் என்று அவனுக்கு எப்படித் தெரியும் ? இதற்கு முன்னால் அனுபவித்து இருந்தால், தெரியும். ஆனால், அப்படி ஒரு இன்பத்தை அனுபவித்ததே கிடையாது. பேரின்பம் கிடைத்தால் கூட அது பேரின்பம் என்று அறிய முடியாது.
அறிவு என்பது தெரிந்ததில் இருந்து தெரியாதை அறிந்து கொள்வது.
புலி எப்படி இருக்கும் என்றால், பூனை மாதிரி இருக்கும் என்று சொல்வதைப் போல.
சிற்றின்பத்தை அறிந்தால் தான், பேரின்பம் என்பது என்ன என்று அறிய முடியும்.
அது தான் வாசல்.
அதன் வழியாகத்தான் போக வேண்டும் .
இதை அறிந்துதான் நம் முன்னவர்கள் சிற்றின்பத்தை தள்ளி வைக்காமல் அதை இலக்கியத்தோடு, பக்தியோடு இணைத்தார்கள்.
நாயக நாயகி பாவம் என்பது சிற்றின்பத்தை தொட்டுக் காட்டி, அதில் இருந்து பேரின்பம் எப்படி இருக்கும் என்று அறிய வைக்கும் ஒரு உத்தி.
கோவில் சிற்பங்களிலும், கதைகளிலும், காவியங்களிலும், பக்தியிலும் சிற்றின்பத்தை வைத்தார்கள்.
அறம் - பொருள் - இன்பம் - வீடு என்று வைத்தார்கள்.
காமமும் காதலும் தவறு என்றால், அறம் பொருள் வீடு என்று வைத்திருக்கலாம் தானே ?
பின்னாளில், ஏதோ சிற்றின்பம் என்றால் வெறுக்கத்தக்கது என்ற ஒரு மனோபாவம் வந்து விட்டது.
சிற்றின்பம் என்பது உடல் சார்ந்தது மட்டும் அல்ல.
காதல், கனிவு, அன்பு, பாசம், கருணை, தன்னை மறப்பது, தன்னில் தான் கரைவது, நெகிழ்வது என்று அத்தனையும் உண்டு.
இந்தப் படியில் கால் வைக்காமல் அடுத்த படிக்கு போக முடியாது.
சிற்றின்பத்தை அனுபவியுங்கள். ஒரு நாள் அது உங்களை பேரின்பத்திற்கு இட்டுச் செல்லும்.
(மேலும் படிக்க
http://interestingtamilpoems.blogspot.in/2016/06/blog-post.html
)