Monday, July 11, 2016

இராமாயணம் - சுந்தர காண்டம் - முன்னுரை - பாகம் 2

இராமாயணம் - சுந்தர காண்டம் - முன்னுரை - பாகம் 2

துன்பம் வந்து விட்டால் ஏதோ  நமக்கு மட்டும் வந்து விட்டது போல துவண்டு போகிறோம். நமக்கு துன்பமே வரக்கூடாது, எப்படியோ வந்து விட்டது என்று அங்கலாய்கிறோம்.

அது உண்மையா ?

சாம்ராஜ்யத்துக்கு முடி சூட்ட இருந்த இராமனை காட்டுக்கு 14 வருஷம் போ என்று விரட்டி விட்டாள் கைகேயி. அதை விட பெரிய துன்பம் நமக்கு வந்து விடுமா ?

நாடு, நகரம், சொந்தம் , பந்தம், சொத்து , சுகம், பெருமை, புகழ் அனைத்தும் ஓர் இரவில் இழந்து, உடுக்க நல்ல துணி கூட இல்லாமல் கானகம் போன இராமனின் துன்பத்தை விட உங்கள் நட்டம் , உங்கள் அவமானம், உங்கள் இழப்பு பெரிய இழப்பா ?

சரி, அதுவாவது போகட்டும். 

இராமன் வலிமையான ஆடவன். அவனால் துன்பத்தை தாங்கிக் கொள்ள முடியும். 

சீதை, செல்லமாக வளர்ந்த பெண்.

காடு என்றால் என்ன என்றே தெரியாமல் வளர்ந்த பெண். அவளை காட்டுக்குப் போ என்று யாரும் சொல்லாவிட்டாலும் அவளும் கிளம்பி விட்டாள் . 

அதை விட நம் துயரம் பெரிய துயரமா ?

பெண்ணை கட்டி கொடுத்து விட்டு, "ஐயோ அவள் அங்கே என்ன கஷ்டப் படுகிறாளோ " என்று மனம் சோரும் பெண்களுக்கு சீதையின்  வாழ்க்கை   ஒரு ஆறுதலைத் தரும். 

சரி கானகம் போனார்கள்...போன இடத்திலாவது நிம்மதியாக இருக்க முடிந்ததா ?

இராவணன் , சீதையை தூக்கிக் கொண்டு போய் விட்டான்.

யார் தூக்கிப் போனார்கள் என்று கூடத் தெரியாது. 

கட்டிய மனைவியை காணவில்லை. 

இராஜ்யத்தை சக்கரவர்த்திக்கு கட்டிய மனைவியை பாதுக்காகத் தெரியவில்லை என்ற பழிச் சொல் வேறு.

அரக்கனின் சிறையில் ஜானகி.

மனைவியின் போன இடம் தெரியாத இராமன்.

நினைத்துப் பார்த்து இருப்பார்களா வாழ்க்கை இப்படி தலை கீழாக மாறும் என்று ?  

நம் துன்பங்கள் அதை விட மோசமானதா ?


இராமன் யார் ? அவன் ஒரு அவதாரம். சக்ரவர்த்தி திருமகன். அவனுக்கே இந்த கதி என்றால், நாம் எம்மாத்திரம் ?

துன்பம் வரும். அது இயற்கை. துன்பம் வந்த போது ஐயோ எனக்கு இப்படி வந்து  விட்டதே என்று துவண்டு போய் விடக்  கூடாது.

போராடி வெல்ல வேண்டும் என்று சொல்ல வந்தது சுந்தர காண்டம். 

எவ்வளவு பெரிய பிரச்சனை என்றாலும் அதை வெல்ல முடியும் என்று தைரியம் சொல்வது சுந்தர காண்டம்.

துன்பத்தில் துவண்டு விடலாம், தோள் தந்து நம்மை தூக்கி நிறுத்துவது  சுந்தர காண்டம். 

சுந்தர காண்டத்தை படிக்க படிக்க மனதில் ஒரு உற்சாகமும், உத்வேகமும் வரும்.

முடியும். என்னால் முடியும். என்னால் இந்த துன்பத்தை வெற்றி காண முடியும் என்று தன்னம்பிக்கை தருவது சுந்தர காண்டம்.

மனம் சோர்வடையும் போதெல்லாம் சுந்தர காண்டம் படியுங்கள்.

அது ஆயிரம் "Self Help " புத்தகங்களுக்கு சமம். 

மேலும் சிந்திப்போமா ?

http://interestingtamilpoems.blogspot.in/2016/07/2.html


No comments:

Post a Comment