Friday, September 16, 2016

திருவாசகம் - அடைக்கலப் பத்து - திருவடி சேர்ந்து அமைந்த - பாகம் 2

திருவாசகம் - அடைக்கலப் பத்து - திருவடி சேர்ந்து அமைந்த  - பாகம் 2


செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந் தமைந்த
பழுத்தமனத் தடியருடன் போயினர்யான் பாவியேன்
புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா
அழுக்குமனத் தடியேன் உடையாய்உன் அடைக்கலமே.

இந்தப் பாடலின் முன்னுரையை ஏற்கனவே பார்த்து விட்டதால் நேரடியாக பொருளுக்குப் போவோம்

முதல் பாகம் படிக்க

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/1.html

கொஞ்சம் சீர் பிரிக்கலாம்

செழும் கமல  திரள் அன நின் சேவடி சேர்ந்து அமைந்த 
பழுத்த மனத்து அடியார்களுடன் போயினர் யான்  பாவியேன்
புழுக் கண் உடை புன்குரம்பைப் பொல்லாக் கல்வி ஞானம் இல்லா 

அழுக்கு மனத்து அடியேன் உடையாய் உன்  அடைக்கலமே.


பொருள்


செழும் = செழுமையான, சிவப்பான 

கமல  திரள் அன = தாமரை மலர்களின் தொகுப்பு 

நின் = உன்னுடைய 

சேவடி = சிவந்த திருவடிகள்  

சேர்ந்து = சென்று சேர்ந்து 

அமைந்த = அமைதி அடைந்த 

பழுத்த மனத்து = பழுத்த மனத்து 

அடியார்களுடன் = அடியவர்களுடன் 

போயினர் = போனவர்கள் 

யான் = நான் 

பாவியேன் = பாவியேன் 


புழுக் கண் உடை = புழுக்கள் உடமையாகக் கொண்ட இந்த  

புன்குரம்பைப் = கீழான இந்த உடலை 

பொல்லாக் = தீயன  

கல்வி = கல்வி 

ஞானம் இல்லா = ஞானம் இல்லா  

அழுக்கு மனத்து அடியேன் = அழுக்குகள் கொண்ட மனத்தை உடையவன் 

உடையாய் = உடையவனே 

உன்  அடைக்கலமே = உன் அடைக்கலமே 

எனக்கு ஒன்றும் தெரியாது. உன்னிடம் அடைக்கலமாக வந்து விட்டேன்.  இனி என்னை சரி ஆக்குவது உன் பாடு என்கிறார். 

வீடு பேறு , முக்தி இவற்றை அடைய மூன்று வழிகளை சொல்கிறார்கள். 

கர்ம யோகம் 

ஞான யோகம் 

பக்தி யோகம் 

மணிவாசகர் பாண்டிய நாட்டின் முதலமைச்சராக இருந்தவர். ஒரு அரசனின் கீழ் அமைச்சராக இருப்பது எளிதான காரியம் இல்லை. அவ்வளவு கடினமான வேலையைச் செய்த மணி வாசகருக்கு கர்ம யோகம் கடினமாக இருக்கிறது. 

சிலர் உன் அடியார்களுடன் சேர்ந்து , மனதை பக்குவப் படுத்தி உன் திருவடிகளை அடைந்தார்கள். என்னால் முடியவில்லை என்கிறார். 

சேர்ந்து அமைந்த பழுத்த மனத்து

முதலில் சென்று சேர வேண்டும். பின் அவர்களோடு சேர்ந்து இருக்க வேண்டும் (அமைய). பின் மனம் பக்குவப் படவேண்டும்.இவ்வளவு வேலை இருக்கிறது. 

என்னால் முடியவில்லை என்கிறார் மணிவாசகர். நான் இந்த புழுக்களுக்கு இடமான உடலோடு இருக்கிறேன் என்கிறார். 

மணிவாசகர் பெரிய அறிவாளி. 

 திருவாசகம், திருக்கோவையார் எழுதியவர்.  

இருந்தும், ஞான யோகத்தில் அவரால் செல்ல முடியவில்லை. 

கற்பனவும் இனி அமையும் என்றார். படித்தது எல்லாம் போதும் என்ற  நிலைக்கு வந்தார். 

கல்வி எனும் பல் கடல் பிழைத்தும் என்றார். கல்வி என்பது பெரிய கடல். அதில் இருந்து தப்பித்தால் தான் இறைவனை அடைய முடியும்  என்கிறார். 

ல்வி ஞானம் இல்லா 

கல்வி  அறிவும்,அதில் இருந்து பிறக்கும் ஞானமும் தனக்கு இல்லை என்கிறார். 

மணிவாசகருக்கே அப்படி என்றால், நம் நிலை என்ன. நம் அறிவும் , ஞானமும் எவ்வளவு இருக்கும் ?


சரி, கர்ம யோகமும் சரிப் பட்டு வரவில்லை. ஞான யோகமும் சரிப் பட்டு வரவில்லை. 

பக்தி யோகம் தான் தனக்கு உகந்தது என்று அறிந்தார். 

பக்தி செய்யக் கூட தெரியாது. 

நான் உன் அடைக்கலம் என்று அவனிடம் அடைக்கலம் அடைந்து விட்டார். 

ஒரு வேளை பக்தி மார்க்கம் எளிமையாக இருக்குமோ ?

உங்கள் மார்க்கம் எது என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். 

http://interestingtamilpoems.blogspot.com/2016/09/2_16.html

1 comment: