Saturday, September 10, 2016

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - அறம் காக்க

இராமாயணம் - விராதன் வதைப் படலம் - அறம் காக்க 


விராதன் என்ற கந்தர்வன் , ஒரு சாபத்தால் , அரக்கனாக இருந்தான். இராமனிடம் போரிட்டு, மாண்டு சாப விமோசனம் பெற்றான். அவன் விண்ணுலகம் போவதற்கு முன் சில சொல்லிச் செல்கிறான்.

அகத்தையும், புறத்தையும் கண்டு, எப்போதும் அருள் நோக்கோடு,  காற்று போல தன்னந் தனியாக சுற்றி  சுற்றி வந்து அறத்தை காக்கிறாய் என்கிறான் அடுத்தப் பாடலில்.


பாடல்

புறம் காண அகம் காணப் பொது முகத்தின்
     அருள் நோக்கம்
இறங்காத தாமரைக் கண் எம்பெருமாஅன்!
     இயம்புதியால்;
அறம் காத்தற்கு, உனக்கு ஒருவர் ஆரும் ஒரு
     துணை இன்றி,
கறங்கு ஆகும் எனத் திரிய,
     நீயேயோ கடவாய்தான்?

பொருள்

புறம் காண = வெளிப் புறத்தைக் காண

அகம் காணப் = உள் புறத்தைக் காண

பொது முகத்தின் = பொதுவாக

அருள் நோக்கம் = அருள் பார்வை

இறங்காத = தாழாத

தாமரைக் கண் = தாமரை போன்ற கண்களை உடைய

எம்பெருமாஅன்! = எங்கள் பெருமானே

இயம்புதியால்; = எங்களுக்குச் சொல்

அறம் காத்தற்கு, = அறத்தை காப்பதற்கு

உனக்கு = உனக்கு

ஒருவர் ஆரும் = வேறு ஒருவர் யாரும்

ஒரு துணை இன்றி = ஒரு துணையும் இன்றி

கறங்கு ஆகும் = காற்றுப் போல

எனத் திரிய = எங்கும் திரிந்து

நீயேயோ கடவாய்தான்? = நீ உன் கடமையைச் செய்கிறாய்


மேலோட்டமாக பார்த்தால் எளிமையான பாடல்  தான்.


புறம் காண அகம் காணப்

நமக்கு ஒருவரின் வெளித்  தோற்றம் மட்டும் தான் தெரியும். அவர்கள்  உடுத்தும் உடை, பேசும் பேச்சு, நடை , பாவனை  என்று இவை மட்டும்  தான் தெரியும்.

அவனுக்கு உள்ளும் புறமும் தெரியும்.

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று  வேண்டினார் வள்ளலார்.

உள்ளே என்ன இருக்கிறது என்று யாருக்குத் தெரியும்...

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்தே போக்கி
தெள்ளியனாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்து அறிதி என்று
வெள்கினேன் வெள்கலோடும் விலாவிறச் சிரித்திட்டேனே


என்பார் நாவுக்கரசர். வெளி உலகுக்கு பக்தனைப் போல நடித்தாலும், உள்ளுக்குள் பக்தி இல்லை , எப்படி கள்ளனைப் போல வேடம் போடுகிறேன் என்று தன்னை தானே நினைத்து சிரிக்கிறார் நாவுக்கரசர்.

அவர் நிலை அப்படி என்றால் நம் நிலை எப்படியோ ?

பொது முகத்தின் அருள் நோக்கம்


அவனுக்கு உயர்ந்தவன், தாழ்ந்தவன், படித்தவன், படிக்காதவன், செல்வந்தன், ஏழை என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. எல்லோருக்கும்  பொதுவானவன்.

எல்லாருக்கும் பொதுவில் நடம் இடும் சிவமே என்பார் வள்ளலார்.


கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.  


அடுத்ததாக 

அருள் நோக்கம் இறங்காத தாமரைக் கண்

நமக்கு ஒரு நாள் நல்ல மன நிலை இருந்தால் உதவி தேடி வந்தவர்களுக்கு உதவி  செய்வோம்.இன்னோர் நாள் ஏதோ கோபத்திலோ, சோகத்திலோ இருந்தால் , அநத நேரத்தில் யாராவது உதவி என்று வந்தால் எரிந்து விழுவோம். குறைந்த பட்சம் அப்பறம் வாங்க என்று அனுப்பி விடுவோம். 

ஆண்டவனுக்கு அப்படி எல்லாம் இல்லை. அவன் அருள் நோக்கம் ஒரு போதும்  குறையாது. தாமரைக் கண்..

அது என்ன அடிக்கடி தாமரை பூவே உதாரணம் சொல்கிறார்கள். இலட்சுமி தாமரை பூவில் இருக்கிறாள், சரஸ்வதி தாமரை பூவில் இருக்கிறாள். அன்றலர்ந்த செந்தாமரையை ஒத்தது என்கிறார் கம்பர் இராமனைப் பற்றி கூறும் போது . இங்கும் தாமரைக் கண் என்கிறார். 

தாமரையில் என்ன விசேஷம் இருக்கிறது ?

இறைவனை எப்படி அறிவது ? இறைவன் என்பது ஒரு ஆளா ? ஒரு வடிவமா ? ஒரு தத்துவமா ? ஒரு சித்தாந்தமா ? ஒரு உணர்வா ? அது என்ன ?

அது எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். அதை எப்படி அறிவது ? இந்த புலன்களுக்கு புலப் படுமா ? கண்ணால் காண முடியுமா ? காதால் கேட்க முடியுமா ? தொட்டு உணர முடியுமா ?

முடியும். 

முடிந்திருக்கிறது. பார்த்தவர்கள், பார்த்தேன் என்று சொல்லி  இருக்கிறார்கள்.


திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் - செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன்
என்ஆழி வண்ணன்பால் இன்று

என்று ஒன்றுக்கு ஐந்து முறை பேயாழவார் சாதிக்கிறார். 

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்

கண்டு அறியாதன கண்டேன் என்கிறார் திருநாவுக்கரசர்.

கணக்கிலலாத வடிவங்களை காட்டினாய்  கழுக் குன்றிலே என்பார் மணிவாசகர் 

பிணக்கி லாதபெ ருந்து றைப்பெரு
மான்உன் நாமங்கள் பேசுவார்க்
கிணக்கி லாததோர் இன்ப மேவருந்
துன்ப மேதுடைத் தெம்பிரான்
உணக்கி லாததோர் வித்து மேல்விளை
யாமல் என்வினை ஒத்தபின்
கணக்கி லாத்திருக் கோலம் நீவந்து
காட்டி னாய்கழுக் குன்றிலே. 

பார்த்திருக்கிறார்கள். பார்க்காமலா , பார்த்தேன் என்று பாட்டு எழுதுவார்கள் ?

கண்ணால் கண்டிருக்கிறார்கள். 

எப்படி முடிந்தது ? அதே கண்கள்தான் நமக்கும் இருக்கிறது. நம்மால் ஏன் காண முடியவில்லை ?

சரி, அதுக்கும் இந்த தாமரை மலருக்கும் என்ன சம்பந்தம் ?

சிந்திப்போம்.

No comments:

Post a Comment