Saturday, September 17, 2016

குறுந்தொகை - அது கொல் தோழி காம நோயே

குறுந்தொகை - அது கொல் தோழி காம நோயே 




அது ஒரு கடற்கரையை அடுத்த சின்ன கிராமம். எப்போதும் அலை ஓசை கேட்டுக்கொண்டிருக்கும். புன்னை மரங்கள் நீர் பரப்பின் ஓரத்தில் இருக்கும். அங்கே கொஞ்சம் பறவைகள், அந்த மரத்தின் நிழலில் படுத்து உறங்குகின்றன.

அந்த ஊரில் ஒரு பெண். மிக மிக இளம் பெண். அந்த வயதுக்கு உரிய நாணம், குறுகுறுப்பு எல்லாம் உள்ள பெண். அவள் காதல் வயப்பட்டிருக்கிறாள். பேசி மகிழ்ந்த அவளுடைய காதலன் பிரிந்து சென்று விட்டான். அவளுக்கு தவிப்பு. தூக்கம் வரவில்லை.

இந்த அனுபவம் அவளுக்குப் புதியது. ஏன் இப்படி ஆனோம் என்று அவளுக்குப் புரியவில்லை. தவிக்கிறாள்.

யாரிடம் சொல்லுவாள் ?

தன் தோழியிடம் கேட்கிறாள்

"ஏண்டி, இது தான் காதல் என்பதா ? தூக்கம் வரலடி" என்று வெகுளியாக கேட்கிறாள்.

பாடல்

அது கொல் தோழி காமநோயே!
வதிகுறு உறங்கும் இன்நிழல் புன்னை
உடை திரைத் திவலை அரும்பும் தீநீர்
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல்இதழ் உண்கண் பாடு ஒல்லாவே” 

பொருள்

அது கொல் = அதுவா ?

தோழி = தோழியே

காமநோயே! = காம நோயே !

வதிகுறு உறங்கும் = (தன்னிடம்) வந்து உறங்கும் குறுகு (பறவை)

இன்நிழல் = இனிய நிழலைத் தரும்

புன்னை = புன்னை மரம்

உடை = உடைக்கின்ற

திரைத்  திவலை = திரண்டு வரும் நீர் துளிகள்

அரும்பும் = மொட்டும் போல் அரும்பும்

தீநீர் = இனிய நீர்

மெல்லம் புலம்பன் = புலம்பு என்றால் கடற்கரை. புலம்பன் என்றால் கடற்கரையை உடையவன். மெல்லம் புலம்பன் என்றால் மென்மையான கடாரகரையை உடையவன் (தலைவன்)

பிரிந்தெனப் = பிரிந்த பின்

பல்இதழ் = பல இதழ்களை கொண்ட தாமரை மலரைப்

உண்கண் = போன்ற என் கண்கள்

பாடு ஒல்லாவே = உறங்காமல் இருக்கின்றன


" பாரு இந்த சின்ன குருவி எப்படி நிம்மதியா தூங்குது...எனக்குத் தான்  தூக்கம் வரல"  என்று புலம்புகிறாள்.

தனக்கு ஏன் தூக்கம் வரவில்லை என்று அவளுக்குப் புரியவில்லை.

இது தான் காதல் நோயா என்று தோழியிடம் கேட்கிறாள்.

கடல் நீர் உப்பு தான். ஆனாலும், அது அவளுக்கு இனிய நீராக இருக்கிறது.

தீக்குள் விரலை வைத்தால் நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா  என்று பாரதி சொன்னது போல, உப்புத் தண்ணியும் தித்திக்கிறது அவளுக்கு .

சங்க கால காதல்.

அந்த ஈரமான உப்பு காற்றும், கண் மூடி தூங்கும் அந்த குருவியும்,  தூங்காத அந்த பெண்ணும், அவள் தோழியும் இன்னமும் அந்த பாடலுக்குள்  வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

http://interestingtamilpoems.blogspot.com/2016/09/blog-post_24.html



2 comments: