Saturday, September 3, 2016

பெரிய புராணம் - மனம் மலரும் கலை

பெரிய புராணம் - மனம் மலரும் கலை


பெரிய புராணத்தை படிக்க படிக்க , இப்படி ஒரு நூலா என்ற வியப்புதான் மேலிடுகிறது. அது  மட்டும் அல்ல, இத்தனை நாள் படிக்காமல் இருந்து விட்டோமே என்ற வருத்தமும் கூடவே வருகிறது.

கையில் கொஞ்சம் காசு சேர்ந்தவுடன், எல்லோருக்கும் தோன்றும் கவலை என்ன ?

இந்த பணத்தை எதில் முதலீடு செய்வது என்பதுதான் ?

 நிறைய வட்டியும் வர வேண்டும், முதலுக்கும் மோசம் வரக் கூடாது, வேண்டிய போது எடுக்கும் படியும் இருக்க வேண்டும்...அப்படிப்பட்ட ஒரு முதலீடு எது என்று ஒரே யோசனையாக இருக்கும்.

இது ஒரு பிரச்னை.

இன்னொரு பிரச்னை என்னவென்றால், பிள்ளைகள் மற்றும் பெற்றோருக்கு, பிள்ளைகளை என்ன படிப்பு படிக்க வைப்பது/படிப்பது  என்பதுதான்.

பிள்ளைகளுக்கு ஒன்றில் விருப்பம் இருக்கும். ஆனால், அதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்குமா என்ற கவலை இருக்கும். சரி, அது வேண்டாம் என்றால் , பிடிக்காத ஒன்றை படிக்க வைக்க முடியுமா ? அதுவும் முடியாது. பின் எதைத்தான் படிப்பது ?

அது ஒரு பக்கம் இருக்க, பள்ளி கல்லூரிகளை விடுத்து , பொதுவாக எதைப் படிப்பது ? நாவல், சிறுகதை, தொடர் கதை, கவிதை, கட்டுரை என்று எதைப்  படிப்பது  என்ற இன்னொரு சந்தேகம்.

கண்டதையும் படித்தால் மனம் திரிந்து போகும்.

இப்படி நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சேக்கிழார் பெருமான்  விடை தருகிறார்.

திருநாவுக்கரசு நாயனாருக்கு படிப்பு ஆரம்பிக்க வேண்டும்.

அதை சொல்ல வருகிறார் தெய்வப் புலவர் சேக்கிழார்.

முதலில் அவருக்கு மொட்டை அடித்து, குழப்பம் இல்லாத தெளிந்த மதி உடைய பெரியவர்கள் எல்லாம் மகிழும்படி ஒரு விழா எடுத்து, ஆற்று வெள்ளம் போல செல்வத்தை அள்ளிக் கொடுத்து, புலன்கள் பற்றி, மனம் மலரும், மனச் சுருக்கத்தை நீக்கும் கலைகளை பயிலத் தொடங்குவித்தார்.

பாடல்

மருணீக்கி யார்சென்னி
   மயிர்நீக்கும் மணவினையுந்
தெருணீர்ப்பன் மாந்தரெலாம்
   மகிழ்சிறப்பச் செய்ததற்பின்
பொருணீத்தங் கொளவீசிப்
   புலன்கொளுவ மனமுகிழ்த்த
சுருணீக்கி மலர்விக்குங்
   கலைபயிலத் தொடங்குவித்தார்


பொருள்

மருணீக்கி யார் = மருள் நீக்கியார் (திருநாவுக்கரசரின் இயற் பெயர்)

சென்னி = தலை

மயிர்நீக்கும் = முடிகளை களைந்து

மணவினையுந் = சிறந்த வைபவத்தையும்

தெருணீர்ப்பன் = தெருள் நீங்கிய

மாந்தரெலாம் = சுற்றம் மற்றும் நண்பர்கள் எல்லாம்

மகிழ்சிறப்பச் = மகிழ்ந்து சிறப்பாக

செய்ததற்பின் = செய்த பின்

பொருணீத்தங் கொள = பொரு நீத்தம் என்றால் வெள்ளம்.

வீசிப் = அள்ளிக் கொடுத்து

புலன்கொளுவ = கொளுவுதல் என்றால் சிக்கிக் கொள்ளுதல், மாட்டிக் கொள்ளுதல் என்று அர்த்தம். புலன் கொளுவ என்றால் புலன்கள் சேர்ந்து கொள்ளுதல்.

மனமுகிழ்த்த = மனம் மொட்டு மலர்வது போல மலர்ந்து

சுருணீக்கி = சுருள் நீக்கி

மலர்விக்குங் = மலர வைக்கும்

கலைபயிலத் = கலைகளை கற்றுக்கொள்ள

தொடங்குவித்தார் = ஆரம்பித்து வைத்தார்

மேலோட்டமாகப் பார்த்தால், பாடல் என்னவோ இவ்வளவுதான்.

சற்று ஆழ்ந்து யோசிப்போம்.

முதலில் , எதற்கு மொட்டை அடிக்க வேண்டும் ? படிப்புக்கும் மொட்டைக்கும் என்ன சம்பந்தம்.

இளம் வயதில், உடல் அழகில் மனம் செல்லச் தொடங்கினால், மனம் புலன்கள் பின்னேயே போய் விடும்.  முதலில் முடி வளர்க்கச் சொல்லும், பின் அதை அழகாக வெட்டி, அதற்கு எண்ணெய் போட்டு அழகு செய்யச் சொல்லும். பின் அவன் முடி அழகா, என் முடி அழகா என்று  ஒப்பிடச் சொல்லும்.

கவனம் சிதறும்.

முடி வெட்டுவது என்பது ஒரு அடையாளம். பொதுவாக படிக்கும் காலத்தில் புலன் இன்பங்களை நுகர விடக் கூடாது. புலன் இன்பங்களின் சுகம் தெரிந்து விட்டால், புலன்கள் அதையே மேலும் மேலும்  வேண்டும் என்று கேட்கும்.  டிவி, பகட்டான உடை, பலவிதமான  சுவை உள்ள சாப்பாடு என்று குழந்தைகளுக்கு ருசியை காட்டி  விட்டால், பின் கவனம் எல்லாம் அதிலேயே போகும்.

எந்த சினிமாவுக்குப் போகலாம், எந்த ஓட்டலில் போய் என்ன சாப்பிடலாம், என்றே மனம் செல்லும்.

அது மட்டும் அல்ல, கிடைக்காததற்கு மனம் ஏங்கும் , வாங்கித் தராத  பெற்றோர் மேல் கோபம் வரும். வீட்டுகுத் தெரியாமல் பணம் எடுத்துப் போய் வங்கச் சொல்லும், உண்ணச் சொல்லும்.

இதை தவிர்க்க வேண்டும் என்றால், முதலில் ஆடம்பரங்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யக் கூடாது.

தசரதன் , தன் பிள்ளைகளான இராம இலக்குவனர்களை வசிட்டரின் ஆசிரமத்துக்கு அனுப்பித்து படிப்பு சொல்லித் தரச் செய்தான்.

சக்கரவர்த்தி அவன். நினைத்து இருந்தால், வசிட்டருக்கு ஒரு அரண்மனை  ஒதுக்கி அங்கேயே பாடம் சொல்லித் தந்து இருக்கலாம். செய்ய வில்லை. ஏன் , அரச போகங்களை அனுபவிக்க  ஆரம்பித்து விட்டால், படிப்பு மண்டையில் ஏறாது.

இது முதல் பாடம்.

இரண்டாவது, முடியை எடுப்பது என்பது அடையாளத்தை மாற்றுவது. இறைவனுக்கு ஏன் முடி காணிக்கை கொடுக்கிறோம் ? முடி ஒரு  அடையாளம். மொட்டை அடித்து விட்டால் அழகு போகும். அடையாளம் போகும்.  அழகு போனால் ஆணவம் போகும். அடையாளம் போனால்  நான் என்பது இந்த முடியிலா இருக்கிறது என்ற எண்ணம் வரும். நான் என்ற அடையாளம் போய் இறைவன் முன்  நான் பணக்காரன், படித்தவன், என்ற அடையாளங்கள் எதுவும் இல்லாமல்  எளிமையாக இருக்க முடியும்.

அதே போல, படிக்கும் முன், முடி களைவது , நான்  புதிய அவதாரம் எடுக்கிறேன். மாணவன் என்ற அவதாரம். இன்னாரின் பிள்ளை என்ற  அடையாளம் போய் , இன்னாரின் மாணவன் என்ற புது பிறவி  எடுக்கிறேன்.

இது இரண்டாவது பாடம்.

நம்மிடம் பணம் இருந்தால், வீடு வாங்குவோமா, கார் வாங்குவோமா, பங்குகள் வாங்குவோமா, நகை நட்டுகள் வாங்குவோமா என்று  நினைப்போம். யாராவது, நம்மிடம் இருக்கும்  இந்த பணத்தை கொண்டு நம்  பிள்ளைகளுக்கு மிக உயர்ந்த கல்வியை வாங்குவோமா  என்று யோசித்தது உண்டா? அப்படியே யோசித்தாலும்,  எவ்வளவு செலவழிக்கலாம் என்று ஒரு வரம்பு கட்டுவோம் .

திருநாவுக்கரசரின் தமக்கையார்,  பணத்தை தண்ணியாக செலவழித்தாராம். பெருகி வரும் வெள்ளம் போல பணத்தை செலவழித்து  தம்பியை படிக்க வைத்தாராம்.

பணத்தை பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு தாராளாமாக செலவு செய்யுங்கள்.

இது  மூணாவது பாடம்.

பிள்ளைகளை tuition  அனுப்ப வேண்டும் என்றால் எவ்வளவு ஆகும் என்று  கனக்குப் போடுவோம். மிக மிக சிறந்த ஆசிரையைக் கொண்டு  படிப்பித்தால் செலவு அதிகமாகும். இவ்வளவு செலவழிக்க  வேண்டுமா என்று யோசிப்போம்.

யோசிக்காதீர்கள், என்று சேக்கிழார் பாடம் நடத்துகிறார்.

Tuition , விலை அதிகம் உள்ள புத்தகங்கள்,  CD , போன்றவற்றை வாங்கித் தாருங்கள்.

தெருணீர்ப்பன் மாந்தரெலாம்...தெருள் என்றால் தெளிவு. தெளிவான சுற்றமும் நட்பும் இருந்தது. இருக்க வேண்டும்.

அது என்ன தெருள் ?

மனிதனுக்கு அறிவு நான்கு படிகளில் இருக்கிறது.

இருள், மருள், தெருள் மற்றும் அருள்.

இருள் என்பது ஒன்றும் தெரியாமல்  இருப்பது. தெரியாது என்பது கூட தெரியாமல்  இருப்பது.   படிப்பறிவும்,அனுபவ அறிவும்  இல்லாமல் இருப்பது.

அடுத்த படி, மருள். அறியாமை புலப்படும்.  அறிந்து கொள்ள வேண்டும் என்ற  ஆவல்  இருக்கும். எதைப் படிப்பது,  எது  சரி,எது
தவறு என்று தெரியாமல்  தடுமாறுவது.

அடுத்த படி, தெருள். குழப்பங்கள் நீங்கி தெளிவு பெற்று இருப்பது.

அதற்கும் அடுத்த படி அருள்.

அறிவின் கடைசிப் படி அருள்.

உயிர்கள் மேல் அன்பு செலுத்துவது.

அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை என்பார் வள்ளுவர்.

அது அருளின் உச்சம்.


   புலன்கொளுவ மனமுகிழ்த்த
சுருணீக்கி மலர்விக்குங்
   கலைபயிலத் தொடங்குவித்தார்


புலன்கள் சென்று பற்றிக் கொள்ள. அறிவு நமக்கு புலன்கள் மூலமாகத்தான் வரவேண்டும். வாசித்து , கேட்டு, தொட்டு அறிந்து, நாம் அறிவைப் பெறுகிறோம். ஐந்து புலன்கள் + மனம் என்ற ஆறாவது கருவியும் சேர்த்து நமக்கு ஆறறிவு. 

அறிவு சேர சேர மனம் மலர வேண்டும். மொட்டு போல கூம்பி இருக்கும் மனம் மலரும். 

மலரும் என்றால், மணம் வீசும், தேனை அள்ளித் தரும். அழகாக இருக்கும். 

அறிவு ஒரு அழகு.

மனம் விரியாத கலை ஒரு கலை இல்லை. 

படிக்க படிக்க உற்சாகம் பீறிட்டு எழ வேண்டும். மனம் ஒரு மலரைப் போல மென்மையாக வேண்டும். வேண்டியவர் வேண்டாதவர் என்று பார்க்காமல் எல்லோர்க்கும் மணம் தர வேண்டும். 

அப்படி படிக்க வேண்டும். 

இது ஒரு பாடல்.

எனக்குத் தெரிந்தது  இவ்வளவுதான்.

இப்படி எத்தனை பாடல்கள். எவ்வளவு கருத்துச் செறிவு. 

நாம் தான் எவ்வளவு புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும் ?

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_3.html

3 comments:

 1. பெரிய புராணத்தை படித்தது இல்லை.
  இவ்வளவு அற்புதமான கருத்து செறிந்த
  பாடல்கள் இருப்பதை அறியாமல் நாட்களை
  வீணடித்து விட்டேன்.எல்லாவற்றையும் படிக்க
  நேரமும் இல்லை.
  பொறுக்கி எடுத்து நீங்கள் கொடுக்கும் மணிகளை
  படித்து பயனடைகின்றேன். மிக்க நன்றி.

  ReplyDelete
 2. என்ன அருமையான விளக்கம்! ஒரு மொட்டைக்கு இப்படி ஒரு விளக்கமா! மிகவும் நன்று. நன்றி.

  ReplyDelete