Friday, September 9, 2016

இராமாயணம் - விராதன் வதை - அடுத்த பெருந் தனி மூலத்து அரும் பரமே

இராமாயணம் - விராதன் வதை - அடுத்த பெருந் தனி மூலத்து அரும் பரமே


இராமனால் கொல்லப்பட்ட விராதன் என்ற கந்தர்வன், சாப விமோசனம் பெற்று, விண்ணுலகம் போவதற்கு முன், இராமன்தான் பரம்பொருள் என்று உணர்ந்து சில சொல்லுகிறான்.

அத்தனையும் தேனாக இனிக்கும் பாடல்கள்.


பாடல்

‘கடுத்த கராம் கதுவ நிமிர் கை
     எடுத்து மெய்கலங்கி
உடுத்த திசை அனைத்தினும் சென்று ஒலி
     கொள்ள உறு துயரால்
"அடுத்த பெருந் தனி மூலத்து அரும் பரமே!
     பரமே!" என்று
எடுத்து ஒரு வாரணம் அழைப்ப நீயோ அன்று
     "ஏன்?" என்றாய்?


பொருள்

‘கடுத்த = கோபம் கொண்ட

கராம் = முதலை

கதுவ =  பற்றிக் கொள்ள

நிமிர் கை = நிமிர்ந்த கை ,தும்பிக்கை

எடுத்து = உயர்த்தி

மெய்கலங்கி = உடல் கலங்கி

உடுத்த திசை அனைத்தினும் = அனைத்து திசைகளிலும்

சென்று ஒலி கொள்ள = செல்லுமாறு குரல் எழுப்பி

உறு துயரால் = பெரிய துயரத்தால்

"அடுத்த = சேர்ந்த

பெருந் = பெரிய

தனி = உவமை இல்லாத

மூலத்து = மூலமான மூலமான

அரும் பரமே! = அருமையான , உயர்வானவனே

பரமே!" என்று = உயர்வே என்று

எடுத்து ஒரு வாரணம் அழைப்ப = யானை அழைக்க

நீயோ = நீயே

அன்று = அன்று

 "ஏன்?" என்றாய்? = ஏன் என்று கேட்டாய்

அன்று ஒரு நாள் ஒரு யானையின் காலை ஒரு முதலை பற்றிக் கொள்ள, அந்த யானை ஆதி மூலமே என்று அலறிய போது ஏன் என்று ஓடி வந்தாய்.

பாடல் இவ்வளவுதான்.

இந்த யானை கூப்பிட்டதும், அவன் வந்ததும் ஆன அந்த கதையை ஆழ்வார்கள் அப்படி கொண்டாடுகிறார்கள். 


பேயாழவார் , மூன்றாம் திருவந்தாந்தியில் 

தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயக்கரத்தான் அஞ்ஞான்று - குட்டத்துள்
கோள்முதலை துஞ்சக்  குறியெறிந்த  சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு’

என்று சாதிக்கிறார்.


பூதத்தாழ்வாரும்

அரிய தெளிதாகும் ஆற்றலால் மாற்றி,
பெருக முயல்வாரைப் பெற்றால், - கரியதோர்
வெண்கோட்டு மால்யானை வென்றுமுடித் தன்றே,
தண்கோட்டு மாமலரால் தாழ்ந்து. 


தொடரெடுத்த மால்யானை சூழ்கயம் புக்கஞ்சிப்
படரெடுத்த பைங்கமலம்  கொண்டு,அன்றிடரடுக்க
ஆழியான் பாதம் பணிந்தன்றே* வானவர்கோன்
பாழிதா னெய்திற்றுப் பண்டு. 

என்று அருளிச் செய்கிறார்


நம்மாழ்வார்...

மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையி னோடுசென் றிழிந்த,
கானமர் வேழம் கையெடுத் தலறக் கராவதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து சென்றுநின் றாழிதொட் டானை,
தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.

என்று  திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமானை  பாடுகிறார்


மொய்ம்மாம் பூம்பொழில் பொய்கை முதலைச் சிறைப்பட்டு நின்ற,
கைம்மா வுக்கருள் செய்த கார்முகில் போல்வண்ணன் கண்ணன்,
எம்மா னைச்சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும்துள் ளாதார்,
தம்மால் கருமமென் சொல்லீர் தண்கடல் வட்டத்துள் ளீரே. 

என்பதும் நம்மாழ்வார் பாசுரமே

சரி , ஏதோ ஒரு யானை கூப்பிட்டது, பெருமாள் வந்து அருள் புரிந்தார்,  இதில் என்ன அப்படி ஒரு விசேஷம் ?

யானைக்கு உயிர் போகும் ஆபத்து. அந்த நேரத்தில் என்ன செய்வோம் என்று தெரியாமல் அது அலறியது. யானைக்கு அருள் புரிந்தவன் நமக்கும் அருள் புரிவான் என்ற நம்பிக்கையை விதைப்பது இந்த பாடல்கள்.

இந்த உலகத்தை நாம் கட்டுப் படுத்தி விட முடியும். இந்த உலகம் நம்  சௌகரியத்திற்கு இருக்க வேண்டும். நமக்கு ஒரு துன்பமும் வரக் கூடாது.  நாம் வெளியே போகும் போது மழை வந்தால், நாம் சலித்துக்   கொள்கிறோம். இரண்டு மாதம் வெயில் அடித்தால் நாம் வெறுப்படைகிறோம். ஏதோ இந்த உலகம் நமக்கு சாதகமாக இல்லை என்று  அலுத்துக் கொள்கிறோம்.

போராடுகிறோம். இதை ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறோம். அறிவினால் எதையும் வென்று விடலாம் என்று நினைக்கிறோம்.

அது ஒரு வழி. அப்படியும் போகலாம். வாழ்நாள் பூராவும் எதிர் நீச்சல் போட்டுக் கொண்டே இருக்கலாம்.

பக்தி உள்ளவர்கள், சரணாகதி அடைந்து விடுகிறார்கள். "எல்லாம் நீ பார்த்துக் கொள்...எனக்கு என்ன" என்று.

யானை , முதலையோடு போராடவில்லை. அல்லது, நமக்கு விதித்த விதி இதுதான் என்று சோர்ந்தும் விடவில்லை. "ஆதி மூலமே" என்று அவனிடம்  சரண் அடைந்தது.  முதலையிடம் இருந்து மட்டும் அல்ல, இந்த பிறவிப் பெருங்கடலில் இருந்தும் மீண்டது.

யானைக்கு , கடவுள் என்று ஒருவர் இருக்கிறார். அவர் இன்ன பெயரில் இருக்கிறார். இடத்தில் இருக்கிறார். இந்த வண்ணத்தில் இருக்கிறார் என்று தெரியாது. ஒன்று மட்டும் அது உணர்ந்து இருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு தொடக்கம் வேண்டும். இந்த உலகம் அத்தனையும் ஒரு மூலத்தில் இருந்து தொடங்கி இருக்க வேண்டும். அதன் பெயர் என்னவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.  அந்த ஆதி மூலத்தை , ஆதிமூலம் என்றே அழைத்தது  அந்த யானை.

ஒரு பெரிய கூட்டம். அதில் உங்கள் நண்பர் இருக்கிறார். எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. ஒவ்வொருவராக பார்த்து பார்த்து கண்டு தெளிய முடியாது. நீங்கள் அவசரமாக அவரைப் பார்க்க வேண்டும்.

என்ன செய்வீர்கள். ஒலி  பெருக்கியில், அவர் பெயரைச் சொல்லி, இன்னார் எங்கிருந்தாலும் இந்த இடத்துக்கு வரவும் என்று அறிவிப்பு செய்வீர்கள் அல்லவா. அதை கேட்டதும், அந்த பெயர் உள்ள உங்கள் நண்பர் அங்கே வருவார்.

அவர் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியாது.

பெயரைச் சொல்லி அறிவிப்பு செய்தவுடன் அவர் வருகிறார்.

அது போல, ஆதி மூலமே என்று திசைகள் அனைத்தும் கேட்கும்படி அந்த யானை அறிவிப்பு செய்தது.

"ஏன் , என்னை கூப்பிட்டாயா" என்று கேட்டுக் கொண்டே அவன் வந்தான்.

அது மட்டும் அல்ல, அப்படி வந்த பரம்பொருள் இராமன் தான் என்று உலகுக்குச் சொல்லிப் போகிறான் விராதன்.

நம்புங்கள். நம்பி கூப்பிடுங்கள்.

யானைக்கு செவி சாய்த்தவன் , உங்களுக்கு குரலுக்கு செவி சாய்க்க மாட்டானா ?

சாய்பான்.

http://interestingtamilpoems.blogspot.in/2016/09/blog-post_9.html

2 comments:

  1. இந்திரத்யும்னன் என்கிற யானை ஆயிரம் வருஷங்கள் போராடி தன்னுடைய பலத்தினால் முதலையை ஜெயிக்க முடியாது என்று தெரிந்தவுடன்.தான் போராட்டத்தை நிறுத்தி பகவானிடம் ஆதிமூலமே என சரணமடைந்தது.
    அதே மாதிரி திரௌபதியும் பிறர் உதவியை நாடிக்கொண்டும் தன்னால் முடிந்தவரை போராடியும் இனி முடியாது என்று தெரிந்தவுடன்தான் அசச்சுதனை அழைத்தாள்.
    நம் பலத்தின் மீது சிறிது நம்பிக்கை வைத்து போராடினால் கூட பகவான் உடனே வருவதில்லை. என்னால் முடியாது நீயே கதி என்று பரிபூரண மன சுத்தியுடன் சரணாகதி அடைந்த பிறகுதான் நம்முடைய அழைப்பிற்கு செவி சாய்க்கிறான் என தோன்றுகிறது. ஆகையால் எப்போதுமே ஆண்டவனிடம் சரணாகதி அடைவது வீண் போகாது.

    ReplyDelete
  2. கடவுள் நம்மைக் காப்பார் என்று நம்பிக்கையால் என்ன பயன்? எனக்குப் புரியவில்லை.

    ReplyDelete