Saturday, October 1, 2016

இராமாயணம் - மேதாவிகட்கு எல்லாம் மேலாய மேன்மையான்.

இராமாயணம் - மேதாவிகட்கு எல்லாம் மேலாய மேன்மையான்.



 இராவணனுக்கு எவ்வளவோ அறிவுரைகள் கூறுகிறான் வீடணன். பிரகலாதன் கதை முழுக்க கூறுகிறான். கடைசியில்


பாடல்

“‘ஈது ஆகும், முன் நிகழ்ந்தது;
    எம் பெருமான்! என் மாற்றம்
யாதானும் ஆக
    நினையாது, இகழ்தியேல்,
தீது ஆய் விளைதல் நனி
    திண்ணம் ‘‘ எனச் செப்பினான்,
மேதாவிகட்கு எல்லாம்
    மேலாய மேன்மையான்.


பொருள்

‘ஈது ஆகும், முன் நிகழ்ந்தது = இது தான் முன்னாள் நிகழ்ந்தது

எம் பெருமான்! = என்னுடைய தலைவனே (இராவணனே )

என் மாற்றம் = என்னுடைய இந்த மாறுபட்ட சொல்லும் செயலும்

யாதானும்  = எதுவாக இருந்தாலும்

ஆக நினையாது = உன்னுடைய நன்மைக்காக என்று நினைக்காமல்

இகழ்தியேல் = இகழ்ந்தால்

தீது ஆய் விளைதல் = தீமையாக முடியும்

நனி  திண்ணம் = மிக உறுதி

எனச் செப்பினான் = என்று கூறினான்

மேதாவிகட்கு எல்லாம் = மேதைகளுக்கு எல்லாம்

மேலாய மேன்மையான் = மேலான மேன்மை உடைய வீடணன்


அறிவுள்ளவர்கள் சொன்னால் அதை கேட்டு , அதன் படி நடப்பது என்பது கடினமாகத்தான் இருக்கும்.

பிரகலாதன் சொன்னதை இரணியன் கேட்கவில்லை.

அழிந்தான்.

வீடணன் சொன்னதை இராவணன் கேட்கவில்லை.

அழிந்தான்.

தவறு செய்வது மனித இயல்பு. அந்த தவற்றை , அறிவுடைய பெரியவர்கள் சுட்டிக் காட்டும் போது , அதை ஏற்று நம் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டுமே  அல்லாது அவர்களோடு வாதம் செய்து கொண்டு  இருக்கக் கூடாது.

வீடணன் சொன்னதைக் கேட்டிருந்தால் இராவணன் அழிந்திருக்க மாட்டான்.

நீண்ட நெடிய வாதம் புரிகிறான் வீடணனோடு.

அடுத்த முறை உங்களுக்கு பிடிக்காத ஒன்றை, நீங்கள் செய்ய வேண்டாம் என்று நினைக்கும் ஒன்றை உங்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள்  செய்யச் சொல்லும் போது , அவர்களோடு வாதம் புரியும் போது  , வீடணனையும் இராவணனையும் நினைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி வாதம் புரிந்துதான் அழிந்தான் இராவணன்.

இராவணன் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை.

நாரத முனிவர்க்கு ஏற்ப நயம் பட நாவு கொண்டவன்.

எனக்குத் தெரியாதா ஆணவம் கொண்டான். தன்னை விட வேறு யாரும் அறிவு உடையவர்களாக இருக்க முடியாது என்று நினைத்தான். அறிஞர்களின் வாக்கை அலட்சியம் செய்தான்.

நாம் செய்வது இல்லையா ?

எத்தனையோ புத்தகங்கள் படிக்கிறோம். blog குகள் வாசிக்கிறோம். பெரியவர்கள் சொல்வதை  கேட்கிறோம்.

அப்புறம், "இதெல்லாம் சரிப் பட்டு வராது, நடை முறையில் சாத்தியம் இல்லை " என்று தள்ளி வைத்து விடுகிறோம்.

இராவணன் என்பவன் வேறு எங்கும் இல்லை.

நாம் தான் இராவணன்.

நல்லதை கேட்டும். படித்தும் அதன் படி நடக்காத எல்லோரும் அரக்கர்கள்தான்.

சிந்திப்போம். 

No comments:

Post a Comment