Sunday, October 2, 2016

இராமாயணம் - வீடணன் சரணாகதி

இராமாயணம் - வீடணன் சரணாகதி 


துன்பம் வரும்போது , எனக்கு ஏன் இந்த துன்பம் வந்தது என்று ஒவ்வொருவரும் வருந்துவார்கள். நான் என்ன தவறு செய்தேன் ? பொய் சொன்னேனா, களவு செய்தேனா, கொலை செய்தேனா, என்ன தீமை செய்தேன் என்று எனக்கு இந்த தீமை வந்தது என்று மனம் நோபவர்கள் ஏராளம்.

எங்கோ அற வழியில் இருந்து தவறி இருப்பார்கள். மறந்து போய் இருக்கும் . அல்லது அது அறமில்லாத வழி என்று தெரிந்திருக்காது.

சாலை விபத்தில் இறந்தான் என்று பார்க்கிறோம். காரும், புளிய மரமும், லாரியும் ஒரு துணைக்  கருவிகள். அற நெறி தவறியது முதற்  காரணம்.

அறத்தை விட்டு விலகியவர்களை அறம்  அழிக்கும்.எந்த விதத்திலாவது வந்து அழிக்கும். அது நோயாக இருக்கலாம், ஏமாற்றமாக இருக்கலாம், விபத்தாக இருக்கலாம்....இயற்கையோடு முரண் பட்டால் , அந்த இயற்கையே அழிக்கும்.



வீடணன் சொல்கிறான்

வரம்பற்ற உன் வாழ்நாளும், உன் பெருமையும் , கீழானோர் சொல் கேட்டு நீயே கெடுத்துக் கொள்கிறாய்.அற நெறியை விட்டு விட்டால் நல்ல வாழ்க்கை கிடைக்குமா ? கிடைக்காது என்பது பொருள்.

பாடல்

'வாழியாய் ! கேட்டியால்: வாழ்வு கைம்மிக
ஊழி காண்குறு நினது உயிரை ஓர்கிலாய்,
கீழ்மையோர் சொற்கொடு கெடுதல் நேர்தியோ ?
வாழ்மைதான், அறம் பிழைத்தவர்க்கு, வாய்க்குமோ ?


பொருள்


'வாழியாய் !  = நீ (இராவணனே ) வாழ்க

கேட்டியால் = நான் சொல்வதைக் கேட்பாயாக

வாழ்வு = உன் வாழ்வு

கைம்மிக = மிகுந்து ஓங்க

ஊழி காண்குறு = ஊழிக் காலம் வரை இருக்கப் போகும்

நினது = உனது

உயிரை = உயிரை

ஓர்கிலாய் = நினைத்துப் பார்க்க மாட்டாய்

கீழ்மையோர் = கீழானவர்கள்

சொற்கொடு = சொற்களைக் கேட்டு

கெடுதல் நேர்தியோ ? = கெடுதல் வேண்டுவாயா ?

வாழ்மைதான், = வாழ்க்கைதான்

அறம் பிழைத்தவர்க்கு, = அறத்தில் இருந்து பிறழ்ந்தவர்களுக்கு

வாய்க்குமோ ? = கிடைக்குமோ ?

கீழானவர்கள் சொல்லை கேட்டால் கெடுதல் வரும்.  நமக்குத் தெரிவதில்லை. யார் யார் சொல்வதெல்லாமோ கேட்டுக் கொண்டிருக்கிறோம்.  பத்திரிக்கைகள், தொலைகாட்சி,  இணைய தளங்கள் என்று   யார் யார் சொல்வதெல்லாமோ கேட்டுக் கொண்டிருக்கிறோம்.  யார் சொல்வதை நீங்கள் கேட்கிறீர்கள் என்று  யோசித்துப் பாருங்கள்.  நீங்கள் யார் சொல்வதை கேட்கிறீர்களாளோ அவர்கள்  உயர்ந்தவர்களா என்று ஒரு நிமிடம்  யோசியுங்கள். இல்லை என்றால், அவர்கள் சொல்வதை கேட்காதீர்கள்.

வாழ்வு நல்லபடி அமைய வேண்டுமா ? இனிமையாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா ? அற வழியில் செல்லுங்கள்.

அறம் பிழைத்தால் எத்தனை தவம் இருந்தும், செல்வம் இருந்தும், ஆயுள் இருந்தும், வீரம், புகழ் என்று அனைத்தும் இருந்தாலும் வாழ்க்கை  சிறக்காது.

இராவணனிடம் என்ன இல்லை ? எல்லாம் இருந்தது...ஒரே ஒரு அறத்தை விட்டு விலகினான்.  பிறன் மனை நயந்தான் , அழிவு வந்தது.

இராவணனை அழித்தது வீடணன் அல்ல, இராமன் அல்ல, இராமனின் அம்பு அல்ல...இராவணன் அழித்த அறம் , அவனை அழித்தது.

 பாடம்,





No comments:

Post a Comment