Tuesday, October 4, 2016

சிலப்பதிகாரம் - மாதவியின் ஓலை

சிலப்பதிகாரம் - மாதவியின் ஓலை 


ஆண் பெண் உறவு என்பது மிகச் சிக்கலானது. எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், கனவுகள், கற்பனைகள், சமுதாய சட்ட திட்டங்கள் என்ற பலப் பல சிக்கல்களுக்கு நடுவில் பின்னப் பட்டது.

அதிலும் , ஒரு ஆணின் வாழ்வில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் இருந்தால் , அது இன்னும் சிக்கல் நிறைந்தது. முக்கோணக் காதல் கதைகளை நாம் நிறைய கேள்விப் பட்டு இருக்கிறோம்.

சிலப்பதிகாரத்தில் , இளங்கோ அப்படி ஒரு சூழ்நிலையை விவரிக்கிறார்.

மாதவியை விட்டு பிரிந்து வந்த கோவலன்  கண்ணகியை அழைத்துக் கொண்டு மதுரை வருகிறான்.

வருகிற வழியில், அவனுக்கு மாதவி ஒரு கடிதம் (ஓலை) கொடுத்து அனுப்புகிறாள்.

கோவலன் இருப்பது கண்ணகியோடு. மாதவியின் ஓலை வருகிறது.

என்ன எழுதி இருப்பாள் ? எப்படி எழுதி இருப்பாள் ? ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்.


மாதவி சொல்லுகிறாள் கோவலனைப் பார்த்து (கடிதத்தில்) "நீங்கள் உங்கள் பெற்றோரை விட்டு விட்டு , மனைவியோடு ஊரை விட்டுப் போகிறீர்கள். உங்கள் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன், நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்குச் சொல்லுங்கள்"


பாடல்


அழிவு உடை உள்ளத்து ஆர் அஞர் ஆட்டி,
போது அவிழ் புரி குழல் பூங் கொடி நங்கை,
மாதவி ஓலை மலர்க் கையின் நீட்ட,
உடன் உறை காலத்து உரைத்த நெய் வாசம்
குறு நெறிக் கூந்தல் மண் பொறி உணர்த்திக்
காட்டியது; ஆதலின் கை விடலீயான்,
ஏட்டுஅகம் விரித்து, ஆங்கு எய்தியது உணர்வோன்,
‘அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்;
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்;
குரவர் பணி அன்றியும், குலப்பிறப்புஆட்டியோடு
இரவிடைக் கழிதற்கு, என் பிழைப்பு அறியாது,
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்;
பொய் தீர் காட்சிப் புரையோய், போற்றி!’
என்று அவள் எழுதிய இசைமொழி உணர்ந்து,
‘தன் தீது இலள்’ என, தளர்ச்சி நீங்கி,
‘என் தீது’ என்றே எய்தியது உணர்ந்து-ஆங்கு-

பொருள்

அழிவு உடை உள்ளத்து = துன்பம் கொண்ட உள்ளத்தோடு

ஆர் அஞர் ஆட்டி,= அஞர் என்ற சொல் ஆழம் மிகுந்த சொல். அதாவது தனது துன்பத்தில் இன்பம் காணும் மன நிலை. Maschocism என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். Sadism என்பதன் எதிர்நிலை.  அப்படி , தனது துன்பத்தில் இன்பம் கண்ட மாதவி

போது = மலர்

அவிழ் = மலர்கின்ற , அரும்புகின்ற

புரி குழல் = இருக்கும் கூந்தல்

பூங் கொடி = பூங்கொடி போன்ற

நங்கை = பெண்

மாதவி ஓலை = மாதவியின் ஓலை

மலர்க் கையின் நீட்ட = மலர் போன்ற கையால் கொடுக்க
,
உடன் உறை காலத்து = அவளோடு கூட இருந்த காலத்தில்

உரைத்த நெய் வாசம் = பூசிய நெய்யின் வாசம்

குறு = செறிந்த , அடர்ந்த

நெறிக் = ஒழுங்காக பின்னப் பட்ட

கூந்தல் = கூந்தல்

மண் பொறி உணர்த்திக் காட்டியது = மண்ணில் விழுந்து, அந்த மண் வாசம் கோவலனின் நாசியில் உணரும்படி காட்டியது

ஆதலின் = ஆதலினால்

கை விடலீயான் = அந்த ஓலையை கையை விட்டு விடாமல் பற்றிக் கொண்டு இருந்த கோவலன்

ஏட்டுஅகம் விரித்து = அந்த ஓலையினை திறந்து

ஆங்கு = அங்கு, மாதவியின் வீட்டில்

எய்தியது உணர்வோன் = நடந்ததை அறிந்தான்

‘அடிகள் முன்னர் = பெரியவரான (கோவலன்) உங்கள் முன்னால்

யான் அடி வீழ்ந்தேன் = நான் உங்கள் கால்களில் வீழ்கிறேன்

வடியாக் = தெளிவில்லாத

கிளவி = சொல். தெளிவில்லாத என் சொற்களை

மனக்கொளல் வேண்டும் = மனதில் வைத்துக் கொள்ளக் கூடாது

குரவர் பணி அன்றியும் = உன் பெற்றோர்களை காக்கும் பணியினை விட்டு

குலப்பிறப்பு = உயர்ந்த குலத்தில் பிறந்த

ஆட்டியோடு = பெண்ணான கண்ணகியோடு

இரவிடைக் கழிதற்கு = இரவோடு இரவாக நகரை விட்டு நீங்கள் போனதற்கு

என் பிழைப்பு அறியாது = நான் செய்த குற்றம் என்ன

கையறு நெஞ்சம் = தெரியாமல் தவிக்கும் என் நெஞ்சம்

கடியல் வேண்டும் = அதனை நீங்கள் போக்க வேண்டும்

பொய் தீர் = பொய் கலப்பில்லாத

காட்சிப் = பார்வையைக் கொண்ட

புரையோய் =  உயர்ந்தவனான நீ

போற்றி! = உன்னைப் போற்றுகின்றேன். நீ வாழ்க

என்று அவள் எழுதிய = என்று அவள் எழுதிய

இசைமொழி உணர்ந்து, = இனிய மொழி உணர்ந்து

‘தன் தீது இலள்’ என = அவள் குற்றம் அற்றவள் என்று நினைத்து


தளர்ச்சி நீங்கி = வாட்டம் நீங்கி

‘என் தீது’ என்றே = என்னுடைய குற்றம் தான் என்று

எய்தியது உணர்ந்து-ஆங்கு = நடந்ததை உணர்ந்து , அங்கு

காதலியின் கடிதம் கையில். அவள் கூந்தல் வாசம் அந்தக் கடிதத்தில்  மணக்கிறது. கூந்தல் வாசத்தோடு, அவள் வீட்டின் அந்தத் தரையின் வாசமும் வருகிறது. எனவே கூந்தலை அவிழ்த்து தரையில் விழும்படி  அவள் இருக்கிறாள் என்று கோவலன் அறிந்து கொண்டான். தன்னைப் பிரிந்து கவலையில் இருக்கிறாள் என்று அவன் உள்ளம்  புரிந்து கொண்டது. 

மேலும், அவள் கேட்க்கிறாள் "எனக்காகவா நீங்கள் ஊரை விட்டுப் போகிறீர்கள்.  நான் என்ன தவறு செய்தேன்" என்று கேட்க்கிறாள்.

தாசி குலத்தில் பிறந்தவள்தான். இருந்தும், கோவலன் ஒருவனையே  நினைத்து வாழ்ந்தாள்.


யாரை குறை சொல்லுவது ?

கணிகையர் குலத்தில் பிறந்த மாதவியையா ?

அவள் மேல் காதல் கொண்ட கோவலனையா ?

கோவலனை கண்டிக்காத கண்ணகியையா ?

எல்லாம் விதி. விதியைத் தவிர வேறு எதைச் சொல்லுவது ?

மாதவியின் அந்தக் கடிதத்தை கோவலன் என்ன செய்தான் தெரியுமா ?

தன் தந்தைக்கு அனுப்பி வைத்தான். 

திருமணமான ஒருவன். தன் மனைவி அல்லாத இன்னொரு பெண்ணின் கடிதத்தை , தன்னுடைய தந்தைக்கு அனுப்பி வைக்கிறான். 

மாதவியின் காதலின் மகத்துவம் அது.  கண்ணகி உயர்ந்த குலத்தில் பிறந்த  பெண் என்றும், அவள் கோவலனின் மனைவி என்றும் அவளுக்குத் தெரியும். 

இருந்தும் கடிதம் எழுதுகிறாள். அவனும் அதை புரிந்து கொண்டு அந்தக்  கடிதத்தை தனது தந்தைக்கு அனுப்பி வைக்கிறான். 

  

2 comments:

  1. ஏன் தந்தைக்கு அனுப்பினான்?

    ReplyDelete
    Replies
    1. கோவலனும் தன் தந்தைக்கு விடைமொழி கூறாது புறப்பட்டது குறித்து வருந்தி, தன் தந்தைக்கு இந்த கடிதத்தை அனுப்பினான். இதே மடலை கோவலன் தன் பெற்றோருக்கு கூறுமாறு படித்துப் பாருங்கள், பொருள் மாறாது. அதுவே இளங்கோவடிகளின் திறன்.

      Delete